சம்பந்தன் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்த பின்னரே தமிழ் மக்களுக்கான தீர்வுகளை முன்னெடுப்பார்

668

திம்பு முதல் டோக்கியோ வரையான பேச்சுக்களை பார்த்தும், கேட்டும், பங்குபற்றியுமுள்ள தமிழ் அரசியல்வாதிகள் குறிப்பாக தமிழரசுக்கட்சியிலுள்ளவர்கள், அதிலும் குறிப்பாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களைப் பொறுத்தவரையில், தமிழ்மக்களின் போராட்டம், தமிழ் மக்களின் விருப்புவெறுப்புக்கள் பற்றியும் நன்கு அறிந்தவர். அந்த வகையில் பொறுப்புக்களோடு ஒருசில முடிவு களை எடுக்கவேண்டிய கடமைப்பாட்டில் இருக்கின்றார். டோக்கியோ வரையி லான பேச்சுக்கள் அத்தனையும் திறம்பட நகர்ந்துசென்ற வேளை யிலும் கூட அனைத்துப் பேச்சுக்களும் இறுதிநேரத்தில் கைகூடவில்லை. இதில் யார் பக்கம் தவறு என்பதைவிடவும் தமிழ்மக்களுடைய ஆயுதப்போராட்டம் காட்டிக்கொடுக்கப்பட்டுவிட்டது என்றே கூறவேண்டும். காலத்திற்குக் காலம் போராட்ட வியூகங்கள் மாற்றப்பட்டு பேச்சுவார்த்தைகள் என்றெல்லாம் பாசாங்குகள் காட்டப்பட்டு இறுதி யில் தமிழ்மக்களுக்கான தீர்வு என்பது கண்துடைப்பாகவே இருந்து வந்துள்ளது என்பதையும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலை வர் இரா.சம்பந்தன் நன்கு அறிவார். இவற்றை அடிப்படையாகக் கொண்டு எத்தகைய தீர்வினை சம்பந்தன் அவர்கள் எடுக்கப்போகின்றார் என்பது தற்பொழுது தமிழ்ப்பேசும் மக்கள் மட்டுமல்ல, அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

இவருடைய அரசியல் போக்கு என்பது தமிழ்த்தேசியக்கூட்டமைப் ;பிலுள்ள, ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய கருத்துக்களை உள்வாங்கிக்கொண்டு அவற்றை இராஜதந்திர ரீதியாக யோசித்து பதில் கூறாது பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் ஒரு நடவடிக்கையை நகர்த்தி வருகின்றார்.

பிரபாகரனுடைய காலத்தில் தமிழீழம் மலரவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக இருந்தது. அதேபோன்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலை வர் இரா.சம்பந்தன் அவர்களுடைய காலத்தில் தமிழ்மக்களுக்கான சுயநிர்ணய உரிமையை பெற்றுக்கொடுப்பார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. போராட்ட வரலாற்றில் தமி ழர் தரப்பைப் பொறுத்தவரையில், எத்தனையோ புத்திஜீவிகள் கொல்லப்பட்டுள்ளனர். அந்த வரி சையில், அரச தரப்பிலுள்ளவர்களும், தமிழ்த்தேசியம் சார்ந்தவர்களும் உள்ளடக்கப்படுகின்றனர்.

download (2)

இதில் குறிப்பாக அல்பர்ட் துரையப்பா தொடக்கம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவி ராஜ், ஆய்வாளர் சிவராம் போன்றவர்களை சுட்டிக்காட்டலாம். இதைவிடவும் கருணாவிற்கும் பிரபாகரனுக்கும் இடையில் ஏற்பட்ட விரிசல் காரணமாக தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த முன்னணி தளபதிகளும் கொல்லப்பட்டுள்ளார்கள். சமாதான ஒப்பந்த காலப்பகுதியின்பொழுது ஆளஊடுருவும் படையணியி னால் விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்களான சங்கர், சு.ப.தமிழ்ச்செல்வன், மஹிந்தி, கடாபி போன்றோரும் கொல்லப்பட்ட சம்பவங்கள் விடுதலைப்புலிகளின் அடுத்தகட்ட நகர்விற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது.

இவ்வாறு தமிழ்மக்களுக்காக குரல்கொடுத்து வந்தவர்கள், அத னோடு சார்ந்தவர்கள் அனை வரும் கைதுசெய்யப்பட்டும், கடத்திக்கொலை செய்யப்பட்டதுமான சம்பவங்களே தமிழ்மக்களின் அரசி யல் வரலாற்றில் காணப்படுகின்றது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பைப் பொறுத்த வரையில், விடுதலைப்புலிகள் இருந்தகாலகட்டத்தில் அவர்கள் கூறுவதைக் கேட்டு செயற்படுகின்ற நிலைப்பாட்டில் இருந்தார்கள்.

ஆனால் அத்தகைய நிலைப்பாடு தற்பொழுது இவர்களுக்கு இல்லை. இதனை பிரதிபலிக்கும் வகை யில் சம்பந்தன் அவர்களுடைய பேச்சுக்களும் அமையப்பெற்றுள்ளது. மக்கள் மத்தியில் சம்பந்தனின் மீது விசனங்கள் இருந்தாலும் கூட, அவர் திட்டமில்லாமல் செயற்படமாட்டார் என்று கூறப்படுகிறது. ஒரு காலகட்டத்தில் விடுதலைப்புலிகளின் எதிர்ப்பை சம்பாதித்துக்கொண்டிருந்த சம்பந்தன் அவர்கள் இன்று எதிர்ப்புக்களையும் தாண்டி தமிழரசுக்கட்சியினுடைய முழு அதிகாரத்தையும் தன்கையில் எடுத்து செயற்பட்டுவருகின்றார்.

தமிழ்மக்களுக்கு முக்கியமாக நெருக்கடிகள் வருகின்றபொழுது, அதிலிருந்து ஒதுங்கி ஓரிரு தினங்கள், வாரங்கள் கழிந்தபின்னரே அதற்கான அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றார். அண்மையில் கூட மே18 முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி தினத்தினை அனுஷ்டிக்காது இந்தியா சென்றிருந்தமை தமிழ்மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. மே18 தொடர்பில் சம்பந்தன் தெரிவித்திருந்த கருத்துக்களை உற்றுநோக்குவது சிறந்ததாகும். மே 18 ஒவ்வொரு வருடமும் வருகின்ற தமிழ் மக்களின் தேசிய துக்க நிகழ்வாகும் என்று கூறியவரும் சம்பந்தன் அவர்கள்தான்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் நிகழ்வானது, ஈழத்தமிழர் வரலாற்றில் மிகப்பெரிய கறைபடிந்த அத்தியாயமாகும். இத்துயர நிகழ்வு தொடர்பாக சர்வதேச விசாரணை நடைபெறவுள்ள நிலை யில், பல்லாயிரக்கணக்கில் தமது உறவு களை இழந்த தமிழ் மக்கள், தமது உறவு களை தாம் விரும்பிய இடத்தில், விரும்பிய வகை யில் நினைவஞ்சலி செலுத்துவதற்கு அடிப்படை உரிமை உள்ள நிலையில், அதனை இலங்கையரசு பகிரங்கமாகவே மறுத்திருந்தது.

மக்களை நினைவுபடுத்தும் நிகழ்வை பயங்கரவாத செயலென திரிபுபடுத்தி, சித்தரித்து, இராணுவ மற்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்கள் பயங்கரவாதிகளை நினைவுபடுத்தும் எவர் மீதும் பயங்கரவாத தடைச்சட்டம் பாயும் என்றும், முள்ளிவாய்க்கால் நிகழ்வை நினைவுபடுத்துபவர்களை கைது செய்யும் படி பாதுகாப்பு அமைச்சும் அறிக்கை விடுத்திருந்தது. பல்லாயிரக்கணக்கான மக்கள் அழித்தொழிக்கப்பட்டதை அவர்களது உறவினர்கள் நினைவு படுத்துதல் என்பது எந்தவொரு நாட்டிலும், எந்தவொரு மனிதனுக்கும் உள்ள அடிப்படை மனித உரிமையாகும்.

அவசரகால சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் போதே, அடிப்படை உரிமைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. அவசரகால சட்டம் இல்லாத இன்றைய நிலையில் அவரசர கால நிலைக்கும் மேலான, மோசமான அடக்குமுறைகள் இராணுவம், பொலிஸ், புலனாய்வுத்துறை யினரால் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

அரசின் இந்த உத்தரவு வருடாவருடம் நடைபெறும் கோவில் திருவிழாக்களை கூட தடைசெய்து விட்டுள்ளது. முற்கூட்டியே அறிவித்து ஏற்பாடு செய்யப்பட்ட பல பொது நிகழ்ச்சிகள், மிரட்டல்கள் மூலம் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. யாழ்ப்பாண வைத்தியசாலையில் இரத்தம் வழங்கச் சென்றவர்கள் இராணுவத்தால் அச்சுறுத்தப்பட்டு இரண்டு நாட்களுக்கு இரத்தம் வழங்கவோ, பெறவோ கூடாது என்றும் கடுமையாக உத்தரவிடப்பட்டிருந்தது.

அமைதியான முறையில் தம் உறவுகளுக்காக நினைவஞ்சலி செலுத்த அனுமதி பெறப்பட்ட மண்டபங்களின் உரிமையாளர்கள் கூட இராணுவ புலனாய்வாளர்களால் அச்சுறுத்தப்பட்டு அந்த மண்டபங்களின் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. என்றுமில்லாதவாறு இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வை அனுஷ்டிப்பது தொடர்பாக வடக்கு மக்கள் அல்லோல கல்லோலப்பட்டுக்கொண்டிருக்கும் அவல நிலையில், கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கூட்டமைப்புக்கு என்று ஒரு தலைமை இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பும் அளவுக்கு மயான அமைதி காத்துக்கொண்டிருந்தார்.

தமிழர் வரலாற்றில் இத்தகைய ஒரு முக்கிய நிகழ்வு தொடர்பாக கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி மக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு வழி காட்டுவதுடன், அர சின் சட்ட விரோதமான அறிவித்தல்கள், பொலிஸ், இராணுவம் மற்றும் இராணுவ புலனாய்வாளர்களின் நடவடிக்கைகளை அரசுடன் ஆலோசித்தோ, நீதிமன்றத்தி னூடாகவோ நிறுத்தியிருக்க வேண்டும்.எவ்வித வழிகாட்டலும் இல்லாத நிலை யில் சிவாஜிலிங்கம் போன்றோர் தனித்து செயற்படுவதும், தாம் விரும்பிய வகையில் எதையாவது செய்யலாமா? வேண்டாமா? என்று குழம்பித்தவிப்பதும், செய்ய முயற்சிப்பதுமாக மக்களை கூட்டமைப்பு பிரதிநிதிகள் குழப்பி, தப்புத்தாளம் போட்டு நிலைமையை மேலும் மேலும் சிக்கலாக்கி கொண்டிருக்கின்றார்கள்.

இது கூட்டமைப்புக்குள் எவ்வித கட்டுப்பாடும் இல்லாத, ஒன்றுபட்ட செயற்பாடு இல்லாத அராஜக போக்கையே வெளிச்சம் போட்டு காட்டுகின்றது. இவற்றுக்கு காரணம், கூட்டமைப்பு ஓர் அரசியல் கட்சியாக இல்லாமல், எவரும் தலைவர்கள் போல் செயற்படலாம், தனித்து முடிவுகளை எடுக்கலாம், தம் நினைப்புக்கு, தாம் நினைத்தது எதனையும் செய்யலாம் எனும் நிலையில் கட்சியை வைத்திருப்பது தான். மே 18 ஒவ்வொரு வருடமும் வருகின்ற தமிழ் மக்களின் தேசிய துக்க நிகழ்வாகும். இது தொடர்பில் சம்பந்தன் தீர்க்கமான ஒரு முடிவை எடுக்க வேண்டும். இல்லையென்றால் ஆற்றலுள்ள தலைமைக்கு வழிவிட்டு ஒதுங்க வேண்டும் என்று மக்கள் கொதிப்புடன் தெரிவித்திருந்தனர்.

அடுத்தகட்டமாக இந்தியாவின் புதிய அரசுடன் பேச தயாரென தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிலுள்ள தமி ழரசுக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் தெரிவித்திருப்பது வேடிக்கையாகவே இருக்கின்றது. காரணம் என்னவென்றால், 1987ம் ஆண்டு காலப்பகுதியிலிருந்த இந்திய அரசு தமிழ்மக்களுக்கு இதுவரை என்ன செய்தது. இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டதற்காக தமிழ்மக்களை முள்ளிவாய்க்காலில் ஒட்டுமொத்தமாக பழிவாங்கியது இந்தியரசு. இவ்வாறிருக்கின்ற காலகட்டத்தில் இந்தியாவை மீண்டும் மீண்டும் நம்புவதென்பது தமிழ்மக்களையும், தமிழினத்தையும் பாதாளத்தில் தள்ளுகின்ற நடவடிக்கையாகவே கருதப்படுகின்றது. ஆயினும் தமிழ்மக்கள் வரலாற்றில் இத்தகைய அனுபவம் மிக்க சம்பந்தன் அவர்கள் எவ்வாறான முடிவுகளை எடுப்பார் என்பது பற்றி சர்வதேச தமிழ்ச்சமூகமும் சர்வதேச அரசியல்வாதிகளும், சர்வதேச நாடுகளும் எதிர்பார்த்துள்ளன.
அரசாங்கத்திற்குச் சார்பாக அமையும் வகையில் நழுவிப்போகும் அரசியலை செய்துவருவாரோ அல்லது தன்மானமுள்ள தமிழ னாக, தமிழ்மக்களுக்கான உரிமை களை வென்றெடுத்துக்கொடுப்பாரோ இந்நிலையை அவர் நரேந்திரமோடியை சந்தித்த பின்னர் தான் முடிவுகளை எடுப்பார் என தீர்மானித்துக்கொள்வது நல்லது.

– இரணியன் –

 

 

 

SHARE