சிங்களவர்கள் போடும் எலும்புத் துண்டை நக்க தயாராகிவிட்டோம்!

451

 

சிங்களவர்கள் போடும் எலும்புத் துண்டை நக்க தயாராகிவிட்டோம்!
எப்போதும் சம்பந்தம் இல்லாமல் இலங்கைத் தேசியக் கொடியை தூக்கிப் பிடிக்கும் அரச பந்தம்.. இன்று இலங்கையின் சுதந்திர விழாவில் பங்கேற்று உள்ளார்..!

இலங்கையின் சுதந்திர விழாவில் தமிழன் என்று சொல்லப்படும் ஒருவன் பங்கு பற்றுகிறான் என்றால்..ஒன்றில் அவன் கருணா.. டக்ளஸ்.. பிள்ளையான் போன்ற.. தமிழ் இனத் துரோகிகள் ஆகவே கடந்த காலத்தில் இருந்து வந்துள்ளார்கள் .. என்பதை தமிழர்கள் நன்கு அறிவார்கள் ..!

இலங்கையின் சுதந்திர தினம் என்பது 1948 ஆம் ஆண்டு, ஈழத் தமிழர்களின் முதுகில் சிங்களவனும், வெள்ளைக் காரர்களும் சேர்ந்து போட்ட அடிமைக் குறி (நலம்) ஆகும்!

இலங்கைக்கு சுதந்திரத்தை கொடுத்ததுமன்றி, சிங்களவனிடம் ஆட்சிச் சுக்கானைக் கொடுத்துவிட்டு ஆங்கிலேயர்கள் சென்றார்களோ.. அன்றில் இருந்தே தமிழர்கள் அந்த மண்ணில் இரண்டாம் பிரஜைகள் ஆக்கப் பட்டுவிட்டார்கள் ..!

எங்கள் மண்ணை அபகரிப்பதும்.. எங்கள் தமிழ் இளைஞர்களின் கல்வி வாய்ப்பில் ,வேலை வாய்ப்பில், எப்போது சிங்கள அரசுகள் பாரபட்சம் காட்டத் தொடங்கினவோ.. எப்போது எங்கள் மண்ணில் உள்ள தமிழர்களை இனக் கலவரம் என்ற பெயரில் இனச் சுத்திகரிப்புச் செய்வதற்காக சிங்களவர்கள்.. ஆயிரக் கணக்கில் அழித்து ஒழிக்க தொடங்கினார்களோ… அப்போது இருந்தே எங்களுக்கும் சிறிலங்காவின் சுதந்திரத்துக்கும் சம்பந்தம் இல்லாமல் போய்விட்டது..!

அதனால் 1965 ஆம் ஆண்டிற்கு பின்னர் ஓர் தமிழ்க் கட்சியின் தலைவர் இலங்கையின் சுதந்திர விழாவில் பங்கு பற்றியிருப்பது.. இன்றுதான் நடந்து உள்ளது ..! அந்த அற்புதப் பணியை செய்தவர் வேறு யாரும் அல்ல..

முன்னரே இலங்கைத் தேசியக் கொடியை மேடைகளில் தூக்கிப் பிடித்த திருவாளர் சம்பந்தன் ஐயா அவர்கள்தான்.!!

அதற்காக… இந்த பெருமகன்.. பிறந்த மண்ணில் நானும் பிறந்துவிட்டேன் என்பதற்காக உண்மையிலேயே வெட்கப் படுகிறேன்.. வேதனைப் படுகிறேன்!

அப்போது 1967 இல் கூட்டணித் தலைவராக இருந்த அமிர்தலிங்கம் அவர்கள் கூட, இலங்கைச் சுதந்திர விழாவை புறக்கணித்து இருக்கும்போது.. இன்று தமிழர்களின் பிரதிநிதியாக – தமிழர் கூட்டமைப்பின் தலைவராக இருக்கும்.. சம்பந்தன் அவர்கள்.. 50 வருடத்துக்கு பின்னர்.. தமிழர்களின் சார்பாய் எந்த ரீதியில் இந்த அடிமைச் சுதந்திர விழாவில் பங்கெடுத்தார்..? என்பது எனக்குப் புரியவில்லை?

இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு பூரண சுதந்திரம் கிடைத்துவிட்டது என்றா..? அல்லது..இலங்கையில் இனி அடிக்கடி இனக்கலவரங்கள் நடக்காது என்ற உறுதி மொழியை சிங்கள அரசிடம் இருந்து பெற்றுக் கொண்டா..? அல்லது..வடக்கின் ஆட்சிக்கு பூரண தன்னாட்சி வழங்கப் பட்டது என்றா..?.அல்லது தமிழர்களின் பூர்வீக மண்ணாகிய வடக்கும் கிழக்கும் ஒன்றாகி விட்டது என்றா? அல்லது.. வடக்கில் இருந்து சிங்கள அரசு தன் படைகளை திரும்ப பெற்றுக் கொண்டது என்றா..? அல்லது.. வடக்கிலும் கிழக்கிலும் இடம் பெயர்ந்து வாழும் எங்கள் மக்களின் சொந்தக் காணிகளை சிங்கள அரசு திருப்பிக் கொடுத்துவிட்டது என்றா..? அல்லது.. தமிழர்களுக்கான முள்ளு வேலிகள் யாவும் மூடப் பட்டன என்றா..?

அல்லது.. காவல்.. காணி.. சட்டம்.. நிதி… போன்ற அனைத்து அதிகாரங்களையும் சிங்கள அரசு..தமிழர்களுக்கு வழங்கி விட்டது என்றா?
அவைகளைத்தான் விடுங்கள்!.. 2009இல் முள்ளி வாய்க்காலில் கொல்லப் பட்ட..இலட்சக் கணக்கான எங்கள் மக்களுக்கு நீதி வழங்கிவிட்டது என்றா..?

அல்லது, .. சிறையில் வாடும் தமிழ்க் கைதிகளை சிங்கள் அரசு விடுவித்து விட்டது என்றா..?

என்ன நடந்திருக்கிறது இங்கே? ஏன் இந்த பச்சைத் துரோகம்.. தமிழர்களுக்கு?
ஆனால்.. ஒன்றுமட்டும் எனக்குப் புரிகிறது.. தமிழர்களின் முதுகில் ஏறி தமிழர் கூட்டமைப்பு சவாரி செய்யத் தொடங்கிவிட்டது என்ற பச்சை கொடி, சம்பந்தன் மூலம்.. கொழும்பில் ஏற்றப் பட்டுவிட்டது மட்டும் உண்மை!..

சம்பந்தனின் இந்த எச்சில் நடவடிக்கை, நிச்சயம் வெந்த தமிழர்களின் உள்ளங்களில் வேலைத்தான் பாய்ச்சும்! அதைத் தவிர இது வேறு ஒன்றையும் தமிழர்களுக்கு… செய்யப் போவதில்லை.. சம்பந்தனின் இந்த முடிவு தமிழர் கூட்டமைப்பின் ஒருங்கிணைந்த முடிவாகவே கருத முடியும்..!

இதில் எங்களுக்கு சம்பந்தம் இல்லை என்று எந்த கூட்டமைப்பு உறுப்பினரும் சொல்லித் தப்பிவிட முடியாது..

உங்கள் துரோகக் கோவணங்களின் நாற்றம்.. எதிர்வரும் மார்ச்சில், ஜெனிவாவில் நடக்கவிருக்கும் ஐ.நா.மனித உரிமை அமைப்பின் கூட்டத்தில் தமிழர்களுக்கு நிச்சயம் நீதியை பெற்றுத் தரப் போவதில்லை.. மாறாக, தமிழர்கள் கடந்த காலத்தை மறந்துவிட்டார்கள்.. அங்கே சமாதானம் ஆரம்பித்துவிட்டது.. என்ற போலி எண்ணத்தைத்தான் அங்கே நிலை நாட்டப் போகிறது..

எனவே, தமிழ் துரோகிகளின் வரிசையில் சம்பந்தன் இன்று தன்னையும் உறுதிப் படுத்திக் கொண்டார். மகா ஜனங்களே!.. இந்த துரோகச் செய்தியை உலகம் எங்கும் வசிக்கும் எங்கள் உறவுகளுக்கு அறிவிப்பீர்களாக!

– மு. வே. யோகேஸ்வரன்.

SHARE