சியாரா லோன் நாட்டில் 61 பேரைக் கொன்ற எபோலா: பீதியில் உறைந்த கிராமம்

373

‘எபோலா’ என்ற புதிய உயிர்க் கொல்லி நோய் அதிவேகமாக பரவி வருகிறது. இது எபோலா வைரஸ் கிருமிகளால் பரவுகிறது. இந்த நோய் பாதிப்பு அதிகம் உள்ள ஆப்பிரிக்க நாடுகளில் சியாரா லோனுக்கும் ஒன்று.

இங்குள்ள ஞ்ஜாலா ஜியிமா என்ற கிராமத்தில் தான் முதன் முதலாக எபோலா நோய் தாக்கியது கண்டு பிடிக்கப்பட்டது. எனவே இக்கிராமத்தை சியாரோலோன் நாட்டின் ‘எபோலா’ நோய் உருவாகிய மையம் என்றழைக்கின்றனர்.

இந்த கிராமத்தில் மொத்தம் 500 பேர் வாழ்கின்றனர். அவர்களில் 61 பேர் ‘எபோலா’ நோய்க்கு பலியாகி உள்ளனர். ஒரே வீட்டில் 10 பேர் கொத்து கொத்தாக மடிந்தனர். அந்த வீட்டில் இருந்து சில அடி தூரத்தில் உள்ள மற்றொரு வீட்டில் முதியவரும், அவரது மனைவியும் இறந்தனர்.

மற்றொரு குடும்பத்தில் 7 பேர் பரிதாபமாக செத்தனர். இது போன்று தொடர்ந்து மக்கள் பலியாகி வருகின்றனர். இதனால் இக்கிராமத்தில் குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிக்கின்றனர். இந்த நோய் தாக்குதலால் கிராமமே பீதியில் உறைந்துள்ளது.

இதற்கிடையே பலர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். எபோலா நோய் பாதித்தவர்கள் ஊரை விட்டு வெளியேற விடாமல் அரசு தடுத்து வைத்துள்ளது. நோய் தாக்கம் அதிகம் உள்ள 2 மாவட்டங்களின் ரோடுகள் அடைக்கப்பட்டுள்ளன.

இதனால் அவர்கள் எங்கும் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இதற்கிடையே ‘எபோலா’ நோய் பாதித்தவர்கள் பலநாட்களாக வீட்டுக்குள் இருட்டறையில் அடைந்து கிடக்கின்றனர். தொற்று நோய் என்பதால் யாரும் அருகே செல்ல அஞ்சுகின்றனர். எனவே அவர்கள் தனிமையில் வாடி உயிரிழக்கின்றனர்.

எபோலோ நோய் தாக்கப்பட்டவர்களின் வீட்டின் முன்பு நீல நிறத்தினால் ஆன துணிகள் தொங்கவிடப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் உடல்களை எரிக்க பொது மக்கள் அஞ்சுகின்றனர். கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளதால் அங்கு வாழும் மக்கள் உணவு மற்றும் குடிநீர் இன்றி தவிக்கின்றனர்.

SHARE