சீனிவாசனை தலைவராக தேர்வு செய்த ஐ.சி.சி.க்கு ரவி சாஸ்திரி பாராட்டு

438
இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவராக இருந்த சீனிவாசன் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ரவி சாஸ்திரி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “சீனிவாசனின் தேர்வு குறித்து என்னிடம் கேட்டால் இது மிகவும் சரியான தேர்வு என்றுதான் சொல்வேன். ஐ.பி.எல். ஊழல் தொடர்பான விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது சீனிவாசன் உயர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அதாவது சுப்ரீம் கோர்ட் அவர் போட்டியிட மறுப்பு தெரிவிக்காத நிலையில் அவர் ஏன் ஐ.சி.சி. தலைவராக மாற முடியாது?.

20 ஓவர் கிரிக்கெட் என்பது இன்ஜெக்சன் மாதிரி. இது கிரிக்கெட் விளையாட்டுக்குத் தேவை. கிரிக்கெட்டில் மூன்று வகையான போட்டிகளை பெற்றிருப்பதற்கு நாம் கொடுத்து வைத்தவர்கள். 3 கிரிக்கெட்டும் ஒவ்வொரு மாதிரியாக உள்ளது. இது மாதிரி வேறு எந்த விளையாட்டிலும் கிடையாது.

20 ஓவர் கிரிக்கெட் மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு வீரர்களும் டெஸ்ட் கிரிக்கெட்டை விட ஐ.பி.எல். கிரிக்கெட்டைதான் விரும்புகிறார்கள் என்று கூறுவது தவறான கருத்து. சில வீரர்களின் எண்ணம் அப்படி இருக்கலாம். ஆனால் பெரும்பாலான வீரர்கள் இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும், டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்றே நினைக்கிறார்கள்” என்றார்.

SHARE