சீ.வி.விக்னேஸ்வரனை இந்தியாவுக்குஅழைப்பு

519

வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை இந்தியாவுக்கு வருமாறு இந்திய வெளிவிவகார அமைச்சின் இலங்கைக்கான இணைச் செயலாளரினால் நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் வைத்து நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என யாழ். இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்தகவலை வடக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலக அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தியாவின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான இணைச் செயலாளரும், இந்திய வெளிவிவகார அமைச்சின் இலங்கை விடயங்களைக் கையாளும் மூத்த அதிகாரியுமான திருமதி சுஜித்ரா துரை சுவாமிநாதன் இந்த அழைப்பினை முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச் செயலாளர் சுஜித்ரா தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தனர்.

அங்கு இவர்கள் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை அவரது அலுவலகத்தில் சந்தித்து யாழ்.குடாநாட்டிலுள்ள நிலைமைகள் பற்றி விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.

சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு மேல் நடைபெற்ற இக்கலந்துரையாடலின் போது வடக்கின் முதலமைச்சரை இந்தியாவுக்கு வருமாறும்,  அங்கு வைத்து வடக்கிலுள்ள பிரச்சினைகள் தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் வரும் 16ம் திகதி இந்திய லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளதைச் சுட்டிக்காட்டி அதற்குப் பின்னர் இவ்விஜயத்தை ஒழுங்குபடுத்துவது வசதியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த யோசனைக்கு இந்தியத் துணைத்தூதரக அதிகாரிகளும் முதலமைச்சரின் அலுவலக அதிகாரிகளும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

 

 

SHARE