சூயஸ் கால்வாய் போக்குவரத்தை ஒட்டி மற்றொரு இணைப்பை ஏற்படுத்த எகிப்து அரசு திட்டம்

419
மத்திய தரைக்கடலையும், செங்கடலையும் இணைக்கும் சூயஸ் கால்வாய் எகிப்து நாட்டில் கட்டப்பட்டுள்ள செயற்கை நீரிணைப்பு வழியாகும். 145 வருடங்களைக் கடந்துள்ள இந்தக் கால்வாயானது கப்பல் போக்குவரத்துமூலம் ஆண்டுதோறும் 5 பில்லியன் டாலர் வருவாயை அந்நாட்டிற்கு ஈட்டித் தருகின்றது.

கடந்த 2011ஆம் ஆண்டு எகிப்தின் அதிபராக இருந்த முகமது மோர்சி பதவி இறக்கப்பட்டபின் அங்கு நடந்த கலவரங்களால் சுற்றுலாவும், வெளிநாட்டு முதலீடுகளும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வருவாய் ஆதாரம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.

இதற்கு இணையான மற்றொரு போக்குவரத்துக் கால்வாயை ஏற்படுத்த வேண்டும் என்பது எகிப்தின் அடுத்தடுத்த மூன்று அரசாங்கங்களுக்கும் ஒரு கனவாகவே இருந்து வந்துள்ளது. மோர்சிக்கு முன்னால் எகிப்தை ஆண்டுவந்த ஹோஸ்னி முபாரக் காலத்திலும் இரண்டு முறை இந்தத் திட்டத்திற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இருப்பினும் 72கி.மீ தூரம் கொண்ட இந்த கால்வாய்க்கான அதிகபட்ச செலவுத் தொகையினால் இதற்கான செயல்வடிவம் கொடுக்கப்படவில்லை.

எகிப்தின் தற்போதைய அதிபரான அப்டெல் பட்டா அல் சிசி சூயஸ் கால்வாய் நடைபாதைத் திட்டத்தின் திறப்பு விழாவில் நேற்று கலந்துகொண்டார்.அப்போது அவர் புதிய கால்வாய்க்கான திட்டம் ஒரு வருடத்திற்குள் பூர்த்தி செய்யப்படும் என்று குறிப்பிட்டார். இந்த புதிய திட்டமானது 100 பில்லியன் டாலர் வருவாயினையும், 1 மில்லியன் அளவிலான புதிய வேலை வாய்ப்பினையும் அளிக்கும் என்று அரசு செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சென்ற மாதம் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த எகிப்து அரசு துவங்கிய டஹ்யா மஸ்ர் நிதித் திட்டத்திற்கு அதிகமான பொருளுதவியை அளிக்கும்படி எகிப்தின் செல்வந்தர்களை சிசி கேட்டுக்கொண்டார். மக்களுக்கு நாடு அதிக அளவில் கொடுத்துள்ளது என்றும், இப்போது புதிய கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்ற மக்கள் அதிக அளவில் உதவி புரியவேண்டும் என்றும் அவர் கூறினார்.

SHARE