சென்னையில் இன்று இயக்குநர் ராம நாராயணனுக்கு அஞ்சலி.

431
இயக்குநர் ராம நாராயணனுக்கு அஞ்சலி.. இன்று படப்பிடிப்புகள் ரத்து!

இயக்குநர் ராம நாராயணனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று சென்னையில் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

125-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உலக சாதனைப் புரிந்த இயக்குநர் ராம நாராயணன், சிறுநீரக கோளாறு காரணமாக சிங்கப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்.

அவருடைய உடல் விமானம் மூலம் நேற்று நள்ளிரவில் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.

சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள அவருடைய வீட்டில், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது.

இறுதிச்சடங்குகள் நடந்தபின், இன்று பிற்பகல் 2-30 மணி அளவில் ராம நாராயணன் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கண்ணம்மாப்பேட்டை சுடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது.

படப்பிடிப்புகள் ரத்து 
ராம நாராயணன் மறைவையொட்டி, சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

திரைப்படம் தொடர்பான அனைத்து வேலைகளும் நடைபெறாது என்றும், இதற்கு திரையுலகில் உள்ள அனைத்து சங்கங்களும் ஒத்துழைப்பு தருகின்றன என்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

நடிகர் சங்கம் 
இதற்கிடையே ராம நாராயணன் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் இரங்கல் செய்தி விடுத்துள்ளனர்.

அதில், “திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ராம நாராயணன் உடல்நலக்குறைவால் சிங்கப்பூர் மருத்துவமனையில் 22-6-2014 அன்று காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தோம்.

திரையுலகில் மிக அதிக படங்களை இயக்கியவர் என்ற பெருமைக்குரியவர், அவர். பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்.

அவருடன் பணிபுரியும் சக இயக்குனர்கள், நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், மற்றும் தொழிலாளர்களுடன் மிக அன்புடன் பழகக்கூடியவர்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், கலையுலகினருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று குறிப்பிட்டுள்ளனர்

 

SHARE