ஜூலை 20க்குள் அணுசக்தி ஒப்பந்தம்: ஈரான் அதிபர் ருஹானி நம்பிக்கை

453
கடந்த 1979ஆம் ஆண்டு ஈரானில் நடைபெற்ற இஸ்லாமியப் புரட்சியைத் தொடர்ந்து அமெரிக்காவும், பிற மேற்கத்திய நாடுகளும் அங்கு பல பொருளாதாரத் தடைகளை விதித்தன. மேலும், அவர்களின் அணுசக்தி ஆராய்ச்சியும் ஆக்கபூர்வமாக இல்லாமல் அழிவுப் பாதைக்குப் பயன்படுமோ என்ற சந்தேகம் உலக சக்தி நாடுகளுக்கு இருந்தது. இதனால் பொருளாதார மேம்பாட்டில் ஈரான் பல சிக்கல்களைச் சந்தித்து வந்தது. இந்த நிலைமை கடந்த 2013ல் ஹசன் ருஹானி அதிபர் பதவிக்கு வந்தபின் மெதுவே மாறத் தொடங்கியது.

மேற்கத்திய நாடுகளுடன் இணக்கமான நல்லுறவை வெளிப்படுத்திய ருஹானி இதன் மூலம் தங்கள் நாட்டின் மீதிருந்த பல பொருளாதாரத் தடைகளை விலக்கினார்.தங்களின் அணுசக்திப் பயன்பாடு ஆக்கபூர்வமாகவே பயன்படுத்தப்படும் என்றும் அவர் உலக சக்தி நாடுகளுக்கு உறுதியளித்தார். தங்களின் அணுஉலைகளை ஐ.நா சிறப்புக்குழு பார்வையிடுவதற்கும் அனுமதி அளித்த ருஹானி அவர்கள் குறிப்பிட்ட அளவில் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் கையிருப்பையும் குறைத்துக்கொண்டார்.

இதன்பின்னரும் தங்களுக்கான அணுசக்தி உற்பத்தி அனுமதிக்கான ஒப்பந்தம் நிறைவேறாமல் தேக்கநிலை காணப்படுவது குறித்து தெஹ்ரானில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ருஹானி பேசினார். தனது அரசாங்கத்தின் கொள்கைகளினால் மேற்கத்திய நாடுகளுடனான மோதல் போக்கு தணிந்துள்ளது.எனவே வரும் ஜூலை மாதம் 20ஆம் தேதிக்குள் இதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதற்கு முன்னால் நாளை முதல் 20ஆம் தேதி வரை வியன்னாவில் ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அதில் அணுசக்தி ஒப்பந்தம் குறித்த சர்ச்சைகள் நல்லெண்ணம் மற்றும் நெகிழ்கித்தன்மை மூலம் தீர்க்கப்படமுடியும். இதற்கான முந்தைய சுற்று பேச்சுவார்த்தைகளிலும் தங்கள் தூதுவர்கள் வலுவான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். எனவே ஜூலை 20ஆம் தேதியை இதற்கான காலக்கெடுவாகக் கொண்டு அதற்குள் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று ருஹானி குறிப்பிட்டார். அவ்வாறு நடைபெறாவிடில் இதற்கான பேச்சுவார்த்தைகள் மேலும் ஒரு மாதம் அல்லது அதற்குமேல் தொடரக்கூடும் என்று அவர் தெரிவித்தார்.

SHARE