ஜெனிவாவையும் இந்தியாவினையும் நம்பி தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு முடிவுகளை எடுக்கக்கூடாது

383

காலத்திற்குக்காலம் அரசியலில் மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கும் காலத்தில் ஜெனிவாத் தீர்மானம் இந்தியாவின் பா.ஜ.க தலைவரின் சந்திப்பு நரேந்திரமோடியுடனான சந்திப்புக்கள,; ஐ.நா பிரதிநிதிகளின் சந்திப்பு என்பவற்றினை நம்பி தமிழ்மக்களினுடைய தமிழ்த்தேசியம், ஒருமைப்பாடு, கலை, கலாசாரம் போன்றவற்றை வீணடிக்கக்கூடாது. வீணடிப்பவர்களாக மாறிவிடக்கூடாது. 30 வருடகால போராட்ட வரலாற்றினைப் பார்க்கின்றபொழுது அவை எமக்கு கற்றுத்தந்த பாடங்கள் பல இருக்கின்றன. தற்பொழுது சமாதானக் காலம், போர் முடிவடைந்த காலம் என்று கூறிக்கொண்டிருந்தாலும் கூட தமிழ் மக்களுக்கான அதிகாரங்கள் வழங்கப்படாத நிலையில் இருக்கின்றன. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழீழம் என்கின்ற இலக்கை நோக்கிப் போராடினார். ஆனால் இன்று போராட்டம் மௌனிக்கப்பட்ட நிலையில் அஹிம்சை வடிவில் உருவெடுத்துள்ளது. தமிழினம் ஓரளவிற்கு வாழமுடிகின்றது என்றால் அது பிரபாகரனுடைய போராட்டத்தினையும், அவருடன் இணைந்த போராளிகளையுமே சாரும்.

Prabha_and_new_MPs_DM20040421

 

இதில் ஆரம்ப கட்டத்தில் போராட்டத்தில் இணைந்துகொண்ட ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற ஆயுதக்குழுக்களும் உள்ளடக்கப்படுகின்றன. ஒரு காலகட்டத்தில் அரசாங்கத்தின் ஒட்டுக்குழுக்களாக செயற்பட்ட இவ்வாயுதக்குழுக்கள் இன்று தமிழ் மக்களுக்காக தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கவிடயமாகும். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் கூட்டமைப்பின் பலத்தினை பலப்படுத்துவதனூடாக சர்வதேசத்தின் நம்பிக்கையை வென்றெடுத்து தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமையை பெற்றுக்கொள்ளும் வாய்ப்புக்கள் இருக்கின்றன.
இந்தியாவை நம்புவதோ அல்லது ஏனைய நாடுகளை நம்புவதோ தமிழ் மக்களுக்கான முடிவாக இருக்காது. அஹிம்சை வழியில் எமது போராட்டங்கள் தொடருமானால் நிச்சயம் தமிழ்மக்களுக்கான முடிவு கிடைக்கும் என்பதில் எவ்வித ஐயப்பாடுமில்லை.

 

SHARE