ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தளபதி ரமேஸ்ஆவணப்படம் வலுவான சாட்சியமாக உள்ளது

416

 images (6)

ஊடகமானது ரமேசின் படுகொலைக் காட்சிகள் மற்றும் ஏனைய காட்சிகள் தொடர்பாக மூத்த காவற்துறை புலன் விசாரணையாளர்கள் மற்றும் சட்டவாளர்கள் ஆகியோரைக் கொண்டு பரிசோதித்துள்ளது. இந்த ஒளிப்படங்கள் உண்மையானவை எனவும், ரமேஸ் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பதில் “எவ்வித சந்தேகமும் இல்லை” என இதனை ஆராய்ந்த முன்னாள் காவற்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

அக்கட்டுரையின் முழுவிபரமாவது,

மிகப் பெரிய படுகொலை நாடகத்துக்கு பின்னால் மறைந்திருந்த திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சியை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதற்கு மனிதர் ஒருவரின் கொலைச் சம்பவம் முக்கிய புதிய ஆவணமாக உள்ளது.

சிறிலங்காவில் இடம்பெற்ற இப் பிரச்சினை தொடர்பாக ஐ.நாவில் விவாதிக்கப்படுகின்றது. கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகளின் பின்னர் தற்போது ஆச்சரியப்படத்தக்க காணொலி
ஜெனீவாவி ல் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இந்த வேளையில் இங்கே சிறிலங்காவுக்கு எதிராக முன்மொழிவு ஒன்றை முன்வைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட வேளையில், இப்புதிய சாட்சியங்களைக் கொண்ட காணொலி திரையிடப்பட்டுள்ளது.


இந்தக் காணொலியில் சிறிலங்கா இராணுவப் படைகளால் மனிதர் ஒருவர் சிறைப்பிடிக்கப்பட்டிருப்பதாகக் காண்பிக்கப்படுகிறது. அதன் பின்னர் அவர் படுகொலை செய்யப்பட்டு கிடக்கும் காட்சிகளும் காண்பிக்கப்படுகின்றன. 

ஆகவே சிறிலங்கா அரசாங்கப் படைகளால் சிறைப்பிடிக்கப்பட்டு அவர்களது காவலில் வைக்கப்படும் இந்த மனிதன் கொல்லப்படும் வரை, அவரது உடல் அகற்றப்படும் வரை உண்மையில் என்ன நடந்ததென்பதை தொடர்புபடுத்திப் பார்ப்பதற்கு ஏற்ற வகையில் இப்புதிய ஆவணப்படக் காட்சிகள் ஒழுங்குபடுத்திக் காண்பிக்கப்பட்டுள்ளன. 

இத்தனிப்பட்ட ஒருவரைக் கொலை செய்த போதும் அதற்கு முன்னரும் எடுக்கப்பட்ட காட்சிகள், சிறிலங்கா அதிகாரிகளால் சரணடைந்த யுத்தக் கைதிகள், பொதுமக்கள், ஆயுத அமைப்பின் உறுப்பினர்கள் ஆகியோர் பெருமளவில் திட்டமிடப்பட்ட ரீதியில் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை ஆதாரபூர்வமாக நிரூபிக்கின்ற ஒன்றாக உள்ளது. இவ்வாறான படுகொலைகளை சிறிலங்கா அரசாங்கம் தான் ஒருபோதும் மேற்கொள்ளவில்லை எனக் கூறிவருகின்றது. 

அத்துடன் இவ்வாறான படுகொலைகள் எவ்வாறு இடம்பெற்றன எனக் வினவுகின்ற போது, அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறவில்லை எனவும் அல்லது தமிழ்ப் புலிகளே இவ்வாறான கொலைகளை மேற்கொண்டதாகவும் சிறிலங்கா அரசாங்கம் தொடர்ச்சியாகத் தெரிவித்து வந்துள்ளன. 

படுகொலைகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டிருந்தால் அதற்கான உரிய ஆதாரங்களைக் கொண்டு உறுதிப்படுத்துமாறும் சிறிலங்கா அரசாங்கம் கோரியிருந்தது. 

இந்நிலையிலேயே, யுத்தத்தின் இறுதி நாட்களில் யுத்த வலயங்களில் உண்மையில் என்ன நடந்ததென்பதை சாட்சிப்படுத்தும் ஆவணக் காட்சிகளை, ஒளிப்படங்களை சிறிலங்கா இராணுவ வீரர்கள் சிலர் வழங்க முன்வந்தனர். அத்துடன் சிலர் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாக வாக்குமூலங்களையும் வழங்கியுள்ளனர். 

சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் இறுதிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மீறல் சம்பவங்களை அக்களமுனைகளில், குறித்த சம்பவங்களை நேரில் பார்த்த பல சிறிலங்கா இராணுவப் படையினர் தமது கைத்தொலைபேசிகள், ஒளிப்படக் கருவிகள் போன்றவற்றைக் கொண்டு பதிவாக்கியிருந்தனர். 


இவ்வாறான படுகொலைச் சம்பவங்கள் சிலவற்றை காட்சிப்படுத்திய காட்சிகளைப் பார்க்கும் போது, சில இளைய இராணுவ வீரர்கள் சிரித்தபடி இருப்பதையும் அவர்கள் தாம் செய்யவுள்ள குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக வேடிக்கையாகப் பேசுவதையும் காணலாம். 

இவற்றை இரகசியமாகப் பேண முடியாது: அதாவது இந்த இராணுவ வீரர்கள் தமது கட்டயைத் தளபதிகளால் தமக்க வழங்கப்பட்ட கட்டளைகளை நிறைவேற்ற வேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருந்தனர். 

சிறிலங்காவில் நீண்ட காலம் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தத்தின் இறுதி மாதங்களில், சிறிலங்கா இராணுவத்தினர் 330,000 தமிழ் மக்கள் மற்றும் தமிழ்ப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை மிக ஒடுங்கிய சதுப்பு நிலப்பகுதி ஒன்றுக்குள் வைத்து சுற்றிவளைத்துக் கொண்டனர். 

இந்நிலையில் புலிகள் அமைப்பினர் தோற்கடிக்கப்பட்ட போதிலும் கூட, அவர்கள் இராணுவத்திடம் சரணடைய மறுத்துவிட்டனர். சிறிலங்கா அரசாங்கப் படைகளின் தாக்குதலிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் அகப்பட்டுக் கொண்ட பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திக் கொண்டனர். 

இருந்தும் சிறிலங்கா இராணுவத்தினர் புலிகள் மீதும் பொதுமக்கள் செறிந்து வாழ்ந்த இடங்கள் மீதும் தாக்குதல்களை மேற்கொண்டனர். விமானக் குண்டுத்தாக்குதல்களையும், முன்னேற்றத் தாக்குதல்களையும் மேற்கொண்டனர். சிறிலங்கா இராணுவத்தினருக்கும் புலிகள் அமைப்புக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட உக்கிர தாக்குதல்களில் பல பத்தாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 

இந்நிலையில், சிறிலங்கா அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் தப்பிச் செல்ல முயன்ற பொதுமக்களுடன், புலி உறுப்பினர்களின் ஒரு தொகுதியினரும் தமது ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு தப்பிச் சென்றனர். மே 18, 2009 அன்று இறுதிச் சண்டை இடம்பெற்றது. 

பொதுமக்களுடன் இணைந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்ல முயன்ற புலி உறுப்பினர்களுள் றோமியோ சேரா என அழைக்கப்படும், கேணல் ரமேசும் தப்பிச் செல்ல முயற்சி செய்தார். ரி.துரைராஜசிங்கம் என்பது இவரது இயற்பெயராகும். தமிழ்ப் புலிகள் அமைப்பின் மூத்த கட்டளைத் தளபதியாக இவர் விளங்கினார். இங்கு முதலில் குறிப்பிடப்பட்ட மனிதன் இந்த ரமேஸ் ஆவார். 

தனது குழந்தைகளில் ஒருவரை கைகளில் தூக்கியவாறு மே 17 அன்று தனது குடும்பத்தவர்களுடன் இராணுவத்திடம் சரணடைவதற்காக சென்ற புலிகளின் மூத்த தளபதியான ரமேஸ் என்பவர் வெள்ளை சேட்டும் சாரமும் அணிந்திருந்தார். யுத்தத்தின் இறுதிப் பகுதியில் புலிகள் தோல்வியடைந்த நிலையில், தன்னையும் தனது குடும்பத்து உறுப்பினர்களின் உயிர்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக மிக நம்பிக்கையுடன், ரமேஸ் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் தப்பிச் செல்ல முற்பட்டிருந்தார். ஆனால் சிறிலங்கா இராணுவப் படையினர் இவரை அடையாளங் கண்டு கொண்டு கைதுசெய்தனர். 

இதன் பின்னர் 300,000 பேரைப் போலவே ரமேசைக் கைது செய்த சிறிலங்காப் படையினர் இவரை வவுனியாவில் உள்ள தடுப்பு முகாம் ஒன்றுக்கு கொண்டு சென்றனர். இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட ரமேஸ் வெள்ளை சேட்டும் நீலநிற கோட்டு சாரம் அணிந்திருந்ததாகவும் பிறிதொருவர் சாட்சியமளித்துள்ளார். ஆகவே மே 22 அன்று ரமேஸ் குறிப்பிட்ட தடுப்பு முகாமிலிருந்து வேறிடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்பதை எம்மால் அனுமானிக்க முடிகின்றது. 

புதிய காணொலியில் காண்பிக்கப்படும் காட்சிகளில், இராணுவ கவச வாகனம் ஒன்றில் ரமேஸ் கீழே இருக்கும் காட்சியும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அவர் புதிய சறம் மற்றும் சேட் அணிந்திருப்பது காண்பிக்கப்படுகின்றது. இவர் நீண்ட காலமாக இடம்பெற்ற யுத்த களத்தில் செயலாற்றியவர் போல் அவரது தோற்றம் காண்பிக்கப்படவில்லை. 

இதற்குப் பதிலாக யுத்தத்தின் இறுதிப் பகுதியில் தடுத்து வைக்கப்பட்ட ஏனைய புலி உறுப்பினர்கள் போலவே ரமேசும் பொதுமக்கள் அணிகின்ற ஆடைகளையே அணிந்திருந்தார். இவரை படம் பிடித்துக் கொண்டிந்த நபர் ரமேசின் பாதத்தின் கீழ் நிற்பதை அவதானிக்க முடிகின்றது. 

அடுத்து, ரமேஸ் சேட் போடாதவாறு அமர்த்தி வைக்கப்படுவதையும், புலிகளின் உருமறைப்பு நீளக்காற்சட்டை ஒன்றும் ரமேசுக்கு வழங்கப்படுகிறது. [படங்களைப் பார்க்கவும்] அவர் தற்போது இராணுவத்தினரின் கவச வாகனத்தில் உட்கார்ந்துள்ளார். பின்னர், இவரை ஆறு தொடக்கம் எட்டு வரையான இராணுவ உடையணிந்த வீரர்கள் விசாரணை செய்கின்றனர். இந்த வீரர்கள் அணிந்திருந்த வெள்ளை நிற பருத்தியிலான இடுப்புப் பட்டிகள் இவர்கள் பௌத்தர்கள் என்பதை காண்பிக்கின்றன. 

ரமேசை விசாரணை செய்யும் இராணுவ வீரர்கள் சிங்களவர்கள் என்பதாலும், சிறைப்பிடிக்கப்பட்ட ரமேஸ் தமிழர் என்பதாலும் இவர்கள் தமக்கிடையில் அசாதாரண ஆங்கில மொழியில் உரையாடுகின்றனர். இக்குறுக்கு விசாரணை முடிந்த பின்னர், சிறிலங்கா இராணுவமும், காவற்துறையினரும் பயன்படுத்துகின்ற சிங்கள மொழியில் இவ்வீரர்கள் தமக்கிடையில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதுடன், சைகை மூலமும் பேசிக் கொண்டனர். 

ரமேசின் முதுகில் காணப்படும் புதிய காயமொன்று மருந்திட்டுக் கட்டப்பட்டுள்ளது. இவரைப் படம் பிடித்துக் கொண்டிருந்த இராணுவ வீரர் பழைய காயமொன்றைச் சுட்டிக் காட்டியபோது, அக்காயம் 1988ல் ஏற்பட்டதாகவும் அதிலிருந்து தான் பல தடவைகள் காயமடைந்ததாகவும் ரமேஸ் கூறுகின்றார். 

ரமேசைப் போலவே ரமேசின் முதுகிலிருந்த காயத்தின் மீது போடப்பட்டிருந்த மருந்தும் புதிதாக இருந்தது. இவர் இறுதிக் களமுனையில் காயமடைந்திருந்ததால், அக்காயத்திற்கான மருந்து தடுப்பு முகாமில் வைத்தே போடப்பட்டுள்ளது. ஏனெனில் பல மாதங்கள் முற்றுகையிடப்பட்டிருந்த யுத்த வலயத்திலிருந்த வந்த ஒருவருக்கு, நந்திக் கடல்நீரேரியில் வைத்து மருந்து கட்டப்பட்டிருக்கும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. 

ரமேசின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்ட காணொலியின் ஒரு கட்டத்தில், அதில் நின்ற இராணுவ வீரர்களில் ஒருவர் தனது சகாக்களைப் பார்த்து “நீங்கள் எதைச் செய்ய வேண்டுமோ அதனைச் செய்யுங்கள், அதனைச் செய்யுங்கள்” என சிங்களத்தில் கூறுகின்றார். 

தற்போது இக்காணொலிக் கருவியானது இராணுவ கவச வாகனம் மற்றும் மண்ணாலான கிடுகால் வேயப்பட்ட குடிசை ஆகிய இரு இடங்களை நோக்கி நகர்கின்றது. இந்தக் குடிசையின் சுவர் உடைந்துள்ளது. பிறிதொரு சுவரில் துவாரம் ஒன்று காணப்படுகின்றது. அழுக்கு ஆடைகள் சிதறிக் காணப்படுகின்றன. ரமேஸ் குறிப்பிடப்பட்ட இ இரண்டாவது இடத்தை அடைந்த போது மீண்டும் இவரது உடைகள் மாற்றப்பட்டன. 

தற்போது ரமேஸ் மிகவும் அச்சமடைந்திருந்தார். முதலில் ரமேசிடம் விசாரணை செய்த இராணுவ வீரர் ஒருவர் அவரிடம் “பயப்பட வேண்டாம். நாங்கள் உங்களிடம் சில தகவல்களை மட்டுமே பெற விரும்புகிறோம். நீங்கள் தற்போது பாதுகாப்பாக உள்ளீர்கள். இங்கே இராணுவ வீரர்கள் உள்ளனர். நாங்கள் உங்களை சித்திரவதை செய்யமாட்டோம். ஆகவே நீங்கள் உண்மையை மட்டும் எம்மிடம் தெரிவியுங்கள்” எனக் கூறப்பட்டது. 

ஆனால் புலிகளின் மூத்த கட்டளைத் தளபதியாக இருந்த ரமேசுக்கு என்ன நடக்கப் போகின்றது என்பது தெளிவாகத் தெரிந்தது. அவர் தனது வறண்ட உதடுகளை நாக்கால் தடவிக்கொண்டார். கைகளை உயர்த்துமாறு ரமேசிடம் கட்டளை பிறப்பிக்கப்பட்ட போது அவர் அச்சம் அடைந்தார். இதனால் அங்கு நின்ற இராணுவத்தினர் கோபம் கொண்டதுடன் அவரை அச்சுறுத்தினர். அதன்பின்னர் ஒளிப்படக் கருவி நிறுத்தப்பட்டதால் என்ன நடந்ததென்பதை எம்மால் பார்க்க முடியவில்லை. 

இவ்விரு இடங்களிலும் ரமேசிடம் கேட்கப்பட்ட விசாரணைகளிலிருந்து எம்மால் சில தகவல்களை அதாவது ரமேசின் பெயர், இவரது பிறந்த திகதி, இவரது நிலை, புலிகள் அமைப்பில் இணைந்து கொண்ட திகதி போன்றவற்றை அறிந்து கொள்ள முடிகின்றது. இவர் புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியாக செயற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தனது மனைவியின் பெயர், மூன்று பிள்ளைகளினதும் பெயர் மற்றும் வயது போன்ற விபரங்களை ரமேஸ் தனது விசாரணையின் போது தெரிவித்துள்ளார். அதாவது தனது மகனுக்கு ஏழு வயது எனவும், ஒன்பது மற்றும் இரண்டு வயதுகளில் மகள்மார் உள்ளதாகவும் குறிப்பிடுகின்றார். அவர்கள் தற்போது வவுனியாவில் உள்ள தடுப்பு முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதையும் ரமேஸ் உறுதிப்படுத்துகிறார். 

மிகவும் உறுதியான, உண்மையான, உயர் பண்புகளைக் கொண்ட, துணிச்சலுள்ள ஆயுதப் போராளியான ரமேஸ் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையுடன் இவ் இராணுவ வீரர்களின் விசாரணைகளை சலிக்காது முகம் கொள்கின்றார். இவர் ஏனைய சில புலிகள் அமைப்பின் உறுப்பினர்களின் பெயர்களையும் குறிப்பிடுகிறார். 

அத்துடன் மட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த புலிகளின் செயற்பாடுகள் தொடர்பாகவும் தெரியப்படுத்துகின்றார். அதாவது மட்டக்களப்பை இராணுவத்தினர் கைப்பற்றிய போதிலும் கூட, புலிகளின் மட்டக்களப்பு இராணுவ நடவடிக்கைகளுக்கான பொறுப்பாளரான குமரனும் அரசியற் செயற்பாடுகளுக்குப் பொறுப்பாக தயாமோகனும் தொடர்ந்தும் பணியாற்றி வந்தனர். 

“நீங்கள் நந்திக் கடலில் தலைவரின் மனைவியைப் பார்த்தீர்களா?” என ரமேசிடம் வினவப்படுகின்றது. கேணல் ரமேசுக்கு பொறுப்பாளராக, புலிகள் அமைப்பின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே காணப்பட்டார். 

“உங்களது தலைவரின் மகள் எங்கே” எனவும் ரமேசிடம் வினவப்பட்டது. ஆகவே சிறிலங்கா இராணுவத்தினர் புலிகள் அமைப்பின் தலைவரின் குடும்ப உறுப்பினர்கள் பற்றி அதிகம் விசாரிப்பதை நாம் இங்கே அவதானிக்கலாம். நாம் பெற்றுக் கொண்ட பல்வேறு சாட்சியங்களிலிருந்து, இவ்வாறான சம்பவங்கள் இறுதி யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்ட மே 18 அன்று அல்லது அதன் பின்பு இடம்பெற்றது என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகின்றது. 

இந்த திகதியில் அல்லது அதன் பின்னர், புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரனின் 12 வயது மகனான பாலச்சந்திரன் உயிருடன் பிடிக்கப்பட்டு படுகொலை செய்யப்படுகின்ற காட்சிகளை தற்போது வெளியிடப்பட்ட சனல் 04 தொலைக்காட்சி சேவையின் புதிய தடயவியல் ஆவணத்தில் காணலாம். ஆகவே இச்சம்பவம் பெரும்பாலும் மே 18 அன்று இடம்பெற்றிருக்கலாம். இச்சிறுவன் படுகொலை செய்யப்பட்டதற்கும், ரமேஸ் படுகொலை செய்யப்பட்டதற்கும் இடையில் பல்வேறு வித்தியாசங்கள் காணப்படுகின்றன. 12 வயது நிரம்பிய பாலச்சந்திரன் என்ற இந்தச் சிறுவன் மிகக் கோரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளான். ரமேஸ் தடுத்து வைக்கப்பட்டு சிறிலங்கா இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

ரமேஸ் படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர் அவரிடம் விசாரணை செய்த சிறிலங்கா இராணுவ வீரரும் ரமேசும் 2006 ல் சிறிலங்காவின் கிழக்கு மாகாணத்தில் உள்ள தொப்பிக்கல என்ற இடத்தில் இடம்பெற்ற தாக்குதலில் பங்கேற்றிருந்தனர் என்பது அறியப்பட்டுள்ளது. “தொப்பிக்கலவில் இடம்பெற்ற யுத்த களத்தில் நீங்கள் பங்குபற்றியிருந்தீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஏனெனில் நானும் அந்தச் சண்டையில் பங்குபற்றியிருந்தேன்” என ரமேசிடம் விசாரணை செய்தவர் தெரிவித்திருந்தார். இருப்பினும் இது இவ்விருவருக்கும் இடையில் உறவைப் பலப்படுத்திக் கொள்ளப் போதுமானதாக இருக்கவில்லை. 

இவ்வாறு விசாரணையாளர் ரமேசிடம் பதிலளித்து குறுகிய நேரத்தில் குறிப்பிட்ட இராணுவ வீரனுக்கு கோபம் வந்துவிட்டது. “நீ பொய் சொல்ல வேண்டாம்” என அந்த வீரன் சத்தமிடுகிறான். இதற்கு “நான் விளங்கிக் கொள்கிறேன். நான் விளங்கிக் கொள்கிறேன்” என ரமேஸ் தனது கைகளை உயர்த்தியவாறு பதிலளிக்கிறார். ஆனால் இவ்விருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள வில்லை என்பதை நேர்காணலிலிருந்து விளங்கிக் கொள்ள முடிகிறது. 

எடுத்துக்காட்டாக, ரமேஸ் மற்றும் அவரை விசாரணை செய்த இராணுவ வீரனுக்கு மத்தியில் இடம்பெற்ற உரையாடல்களிலிருந்து இவ்விருவரும் தவறான விளக்கங்களை கொண்டிருந்தனர் என்பதை அறிய முடிகின்றது. அதாவது மே 22, இவ் விசாரணை மேற்கொள்ளப்பட்ட போது, “இடம்பெயர்ந்தோர் முகாமுக்கு நீங்கள் எப்போது திரும்பிப் போகிறீர்கள்?” என ரமேசிடம் குறித்த விசாரணையாளன் வினவுகிறான். இவ் விசாரணையாளனின் ஆங்கிலம் மிகவும் பிழையாக இருந்தது. அதாவது “நீங்கள் எப்போது இடம்பெயர்ந்தோர் முகாமைச் சென்றடைந்தீர்கள்?” என்றே கேட்டிருக்க வேண்டும். ரமேஸ் இவ்விசாரணை மேற்கொள்ளப்படுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் அதாவது மே 17 காலை 4.30 மணிக்கு வவுனியா தடுப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டார். 

மே 22, 2009 வேறு இராணுவ வீரர்களால் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களும் புதிய சாட்சியங்களாக உள்ளன. இதில் ரமேசிடம் மேற்கொள்ளப்படும் விசாரணை, ரமேஸ் உடைகள் மாற்றுதல், அவரை வேறிரு இடங்களுக்கு கொண்டு செல்லுதல் போன்ற காட்சிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆனால் உண்மையில் ரமேஸ் எந்த வழியில் கொல்லப்பட்டார் என்பதை இக்காணொலிக் காட்சிகள் காண்பிக்கவில்லை. மிகப் பெரிய கலிபர் ரக துப்பாக்கியால் ரமேசின் தலை குறிவைத்து சுடப்பட்ட பின்னர் ரமேஸ் இறந்து கிடக்கும் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. 

The Global Mail ஊடகமானது ரமேசின் படுகொலைக் காட்சிகள் மற்றும் ஏனைய காட்சிகள் தொடர்பாக மூத்த காவற்துறை புலன் விசாரணையாளர்கள் மற்றும் சட்டவாளர்கள் ஆகியோரைக் கொண்டு பரிசோதித்துள்ளது. இந்த ஒளிப்படங்கள் உண்மையானவை எனவும், ரமேஸ் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பதில் “எவ்வித சந்தேகமும் இல்லை” என இதனை ஆராய்ந்த முன்னாள் காவற்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதாவது படுகொலை செய்யப்பட்ட நேரம், திகதி, இடம் மற்றும் ஏனைய காட்சிகளைக் கொண்டு இதனை உறுதிப்படுத்த முடிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

பிரபாகரனின் மகள் துவாரகா, மற்றும் மூத்த மகனான 22 வயதுடைய சாள்ஸ் அன்ரனி ஆகியோர் யுத்தத்தின் இறுதி மாதங்களில் கொல்லப்பட்டுள்ளனர். யுத்தத்தின் இறுதி மாதங்களில் பல நூற்றுக்கணக்கானவர்கள் திட்டமிட்ட முறையில், பலாத்காரமாக, பாலியல் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர் என்பதை ஆதாரப்படுத்தும் ஒளிப்படங்கள் மற்றும் காணொலிகள் என்பன கிடைக்கப்பெற்றுள்ளன. அத்துடன் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களின் உடலங்களை இராணுவத்தினர் அழிக்கின்ற காட்சிகளும் உள்ளன. 

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஐ.நா வல்லுனர் குழுவால் தயாரிக்கப்பட்ட அறிக்கையில் சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்த கால மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான மீறல்கள் தொடர்பாக பல புதிய நம்பகமான சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தஞ்சம் புகுந்திருந்த இடங்கள் மீது குண்டுத்தாக்குதல்களை மேற்கொண்டமை, மக்களை பட்டினி போட்டமை, மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியமை, சரணடைந்த யுத்த கைதிகளை சட்ட ரீதியற்ற முறையில் சித்திரவதைப்படுத்தி படுகொலை செய்தமை, பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகள் போன்றவற்றை இலக்கு வைத்து தாக்குதல் நடாத்தியமை போன்றவற்றை ஐ.நா வல்லுனர் குழு தனது அறிக்கையில் சாட்சியங்களுடன் முன்வைத்ததுடன், இவ்வாறான மீறல்கள் தொடர்பாக நேர்மையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டது. 

இந்நிலையில் சிறிலங்கா அரசாங்கம் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட அழுத்தங்கள் காரணமாக உள்ளக விசாரணை ஒன்றை மேற்கொள்வதற்கான ஆணைக்குழுவை சிறிலங்கா அரசாங்கம் நியமித்த போதிலும், உண்மையில் யுத்த கால மீறல்கள் தொடர்பாக அவ் ஆணைக்குழு முழுஅளவில் விசாரணை செய்யவில்லை. 

சிறிலங்காவில் உள்ள சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களுக்கிடையில் அமைதி பேணப்பட வேண்டியது முக்கியமாகும். ஆனால் சிறிலங்கா அரசாங்கமானது தொடர்ந்தும் தன்னால் மேற்கொள்ளப்பட்ட மீறல்களை ஏற்றுக் கொள்ளாது அவற்றைத் தட்டிக்கழித்து வருகின்றது. இதனால் தற்போது ஐ.நா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன சிறிலங்கா மீது அழுத்தங்களை மேற்கொண்டு வருகின்றன. அத்துடன் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் ஆதரவுடன் முன்வைக்கப்படும் முன்மொழிவானது சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கு உதவியாக அமையும். 

சிறிலங்காவில் யுத்தம் மேற்கொள்ளப்பட்ட போது பொதுமக்கள் கொல்லப்படவில்லை என சிறிலங்கா அரசாங்கத் தலைவர்கள் தொடர்ந்தும் கூறிவருகின்றனர். சிறிலங்கா அரசாங்கமானது தன் மீது அனைத்துலக சமூகத்தால் முன்வைக்கப்பட்டுள்ள அழுத்தங்களைப் பொருட்படுத்தாது, தொடர்ந்தும் தனது முன்னாள் இராணுவ முக்கிய அதிகாரிகளை இராஜதந்திரப் பதவிகளில் நியமித்து வருகின்றது. அத்துடன் இவர்களை ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் பிரதிநிதிகளாகவும் அனுப்பிவைத்துள்ளது. இந்நிலையில் சிறிலங்காவின் நட்பு நாடான இந்தியா தற்போது சிறிலங்காவுக்கு எதிராக வாக்களிக்கின்றது. 

“அமெரிக்காவானது சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கும் முன்மொழிவு தொடர்பாக நாம் அதிர்ச்சியடைகின்றோம். அமெரிக்கா தனது பலத்தை எம்மீது பிரயோகிக்க முயல்கின்றது. இவ்வாறு அழுத்தம் மேற்கொள்ளப்பட்டால், எமது இணக்கப்பாட்டு முயற்சிகள் தாமதமடையும்” என இந்தியாவுக்கான சிறிலங்காத் தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார். 

12 வயதுடைய பாலச்சந்திரனின் படுகொலையைக் காண்பிக்கும் ஒளிப்படங்கள் மற்றும் காணொலிகளை காரியவசம் ஏற்க மறுக்கின்றார். சிறிலங்கா அரசாங்கமானது மீளிணக்கப்பாட்டு முயற்சிகளில் ஈடுபட்டுவருவதாகவும், அனைத்துலக சமூகத்தின் இவ்வாறான விமர்சனங்கள் அம்முயற்சிகளுக்கு ஊறுவிளைவிப்பதாகவும் கடந்த மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிய சிறிலங்காவின் மனித உரிமைகள் அமைச்சரான மகிந்த சமரசிங்க தெரிவித்திருந்தார். 

யூன் 2009 ல் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் சிறப்புக் கூட்டத் தொடரின் போது சிறிலங்கா அரசாங்கமானது கைக்கொண்ட யுத்த வழிமுறைகள் பிழையானவை என மேற்குலக நாடுகளால் விமர்சிக்கப்பட்டு முன்மொழிவு ஒன்று முன்வைக்கப்பட்ட போது, சிறிலங்காவானது அதனை எதிர்த்து வெற்றி பெற்றுக் கொண்டது. 

யுத்த காலத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக கிடைக்கப்பெற்றுள்ள பல்வேறு சாட்சியங்களில் மிகவும் சக்திமிக்க சாட்சியமாக கேணல் ரமேசின் படுகொலைச் சம்பவம் உள்ளது. போரின் போது படுகொலை செய்யப்பட்ட பல பத்தாயிரக்கணக்கானவர்களின் உண்மையான சம்பவங்களை வெளிக்கொண்டு வருவதற்கும், இவற்றை மேற்கொண்ட கொலையாளிகளை இனங்கண்டு கொள்வதற்கும் ரமேசின் படுகொலையும் அது தொடர்பான நம்பகமான சாட்சியங்களும் துணையாக நிற்கும். –

SHARE