தகவல் அறியும் உரிமை சட்டமாக்கப்பட வேண்டும் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வலியுறுத்தல்

552

சர்வதேச ஊடக சுதந்திர  தினம்  அனுஸ்டிக்கப்படும் இன்றைய தருணத்தில்  தகவல் அறியும் உரிமை சட்டமாக்கப்பட வேண்டும் என்பதையும்  ஊடக சுதந்திரத்தையும் ஊடகவியலாளர்களின்  பாதுகாப்பையும் அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் இலங்கைத் தமிழ்  ஊடகவியலாளர்கள்  ஒன்றியம் வலியுறுத்திக் கேட்டுள்ளது.

ஊடக சுதந்திரம் தொடர்பில் அரசாங்கம் வழங்கும் வாக்குறுதிகள்  அனைத்தும் எழுத்தில் மட்டுமே உள்ளதாகவும் நடைமுறையில்  ஊடகத்துறை  மீதான  அச்சுறுத்தல்  தொடர்வதாகவும்  இலங்கைத் தமிழ்  ஊடகவியலாளர்  ஒன்றியத்தின்  செயலாளர் கே.ஜெயேந்திரன்  ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு  வெளியிட்டிருக்கும் அறிக்கையில்  சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அந்த அறிக்கையில்  மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஊடகவியலாளர்கள்  தாக்கப்படுவது ,   அச்சுறுத்தப்படுவது ,  காணாமல் போவது போன்ற விடயங்களில் பல முறைப்பாடுகள்  தெரிவிக்கப்பட்டிருக்கின்ற போதிலும் அவை தீர்க்கப்படாத  விடயங்களாகவே  இன்றும் உள்ளன.
ஊடக  சுதந்திரத்தை பாதுகாப்பதற்காகவோ அல்லது  ஊடகவியலாளர்களின்  பாதுகாப்பை  உறுதிப்படுத்துவதற்காகவோ  ஆக்கபூர்வமான  செயற்பாடுகள் எதனையும் அரசாங்கம்   முன்னெடுக்கவில்லை.  அண்மையில்  கூட வடக்கில்  ஊடகவியலாளர்  ஒருவர் தாக்கப்பட்டிருக்கிறார்.

கடந்த ஒரு தசாப்த காலத்தில் 34 ஊடகவியலாளர்கள்  கொல்லப்பட்டிருக்கிறார்கள்.  இந்தக் கொலைகளுடன்  சம்பந்தப்பட்ட  ஒருவர் கூட  கைது செய்யப்பட்டு  சட்டத்தின்  முன்பாக  நிறுத்தப்படவில்லை  இந்தச் சம்பவங்கள்  குறித்து  நடத்தப்பட்ட  விசாரணை  எந்தளவுக்கு  பாரபட்சமற்றதாக  வெளிப்படைத் தன்மையுடன்  மேற்கொள்ளப்பட்டது என்பதும் கேள்விக்குறிதான்.   கடந்த சில  வருட காலத்தில்  25 க்கும்  அதிகமான  ஊடகவியலாளர்கள்  அச்சுறுத்தல்  காரணமாக  நாட்டை விட்டு  வெளியேறியிருக்கிறார்கள்.

ஊடக சுதந்திரத்தைப்  பொறுத்தவரையில்  179 நாடுகளை  உள்ளடக்கிய  ஆய்வில்  இலங்கை 165 ஆவது இடத்தில்  இருப்பதாக எல்லைகளற்ற ஊடகவியலாளர்  அமைப்பின்  அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஊடகத்துறை  மோசமாக  அடக்கப்படும்  20 நாடுகளில்  ஒன்றாக  இலங்கையும் உள்ளது  என்பதை  இவ்வருட  முற்பகுதியில்  வெளியான மற்றொரு  ஆய்வு தெரிவிக்கின்றது. சர்வதேச ரீதியாக  இலங்கையின் ஊடக  சுதந்திரம் மிகவும் மோசமான  நிலையில்  உள்ளதை இது  உறுதிப்படுத்துகின்றது. கடமையில்  ஈடுபட்டுள்ள  தொலைக்காட்சி ஊடகவியலாளர்  ஒருவர் அமைச்சர் ஒருவரால்  தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று  மே தினத்தன்று  அதாவது இரு தினங்களுக்கு முன்னர்  இடம்பெற்றிருக்கின்றது.

கடமையில்  ஈடுபட்டுள்ள  ஊடகவியலாளர்  அமைச்சருக்கோ  அல்லது குறிப்பிட்ட  நிகழ்வுக்கோ  இடையூறாக  இருந்திருப்பின்  அதனை நாகரீகமான  முறையில்  அமைச்சர்  அல்லது அவரது   உதவியாளர்கள்   தெரியப்படுத்தியிருக்க வேண்டும்.  பதிலாக குறிப்பிட்ட  தொலைக்காட்சிப்  படப்பிடிப்பாளரை  அவமதிக்கும்  வகையில்  நடந்துகொண்டிருப்பது  ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. அமைச்சர்  ஒருவரே  இவ்வாறு  நடந்துகொண்டிருப்பது  மிகவும் துரதிஷ்டவசமானதாகும்.

இதனைவிட தகவல் அறியும் சுதந்திரம் குறித்து  அரசாங்கம் பெரிதாகப்  பேசிக்கொண்டாலும் அதனைச் சட்டமாக்குவதற்கு  அரசாங்கம் தயங்குவது  ஏன்  என்ற கேள்வி  முக்கியமாக எழுகின்றது.  தெற்காசியாவிலுள்ள  பல நாடுகளிலும்  இந்த உரிமை  சட்டமாக்கப்பட்டுள்ளது.  அண்மையில்  மாலைதீவிலும்  இந்த உரிமை  சட்டமாக்கப்பட்டுள்ளது.  எமது நாட்டிலும்  இந்த உரிமையைச்  சட்டமாக்க வேண்டும்.  பேச்சுச் சுதந்திரம் கருத்துச் சுதந்திரம்  போன்றே  தகவல்  அறியும் உரிமையும் பொதுமக்களின்  உரிமையாகும். வெளிப்படைத் தன்மையுடன்  செயற்படுவதாகக் கூறிக்கொள்ளும் அரசாங்கம் இந்த தகவல் அறியும் உரிமையை சட்டமாக்குவதற்கு அஞ்சவேண்டிய  தேவை என்ன ?

ஊடக சுதந்திரத்தையும் ஊடகவியலாளர்களின்  பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதுடன்  தகவல் அறியும் உரிமையைச் சட்டமாக்குவதற்கான  நடவடிக்கைகளை  அரசாங்கம் உடனடியாக  மேற்கொள்ளவேண்டும் என  ஊடக சுதந்திரம் தினம் அனுஷ்டிக்கப்படும் இன்றைய தினத்தில்  வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

SHARE