தமிழ்த்தேசியத்தையும், பிரபாகரனையும், முள்ளிவாய்க்காலையும் முன்வைத்து வடபுலத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களுக்கு பொது இடத்தில் அஞ்சலிக் கூட்டங்களை ஒழுங்குபடுத்தாதது ஏன்? வாக்குக்கேட்க மட்டும் தமிழ் மக்களும், தமிழ்த்தேசியமும், வீரவசனங்களும். கோவணம் கட்டினாலும் தமிழன் கொள்கை மாறக்கூடாது, எம் தமிழினத்தைக் கொன்றொழித்த சிங்கள இனவெறியர்களுக்கு நாம் பாடம் கற்பிக்கவேண்டும், இது எமது உரிமைப்போராட்டம் என்றெல்லாம் கூறிய தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு, அதிலுள்ள தமிழரசுக்கட்சி சார்ந்தவர்கள் இறந்த போராளிகளுக்கும், பொதுமக்களுக்குமான ஒரு அஞ்சலிக்கூட்டத்தை ஒழுங்கு செய்து அதனை செயற்படுத்த முடியாமல் போயுள்ளது. அக்கட்சியில் அங்கம் வகிக்கும் தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினர்களே பதில்கூறவேண்டும். குறிப்பாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் சம்பந்தன், மாவைசேனாதிராஜா, சுமந்திரன் போன்றவர்களுடைய இறுதித்தீர்மானங்களே சபைக்கேறுகின்றன. ஏனைய ஆயுதக்குழுக்களில் இருந்து வந்தவர்களுடைய கருத்துக்களுக்கு அவர்கள் செவிசாய்ப்பதில்லை.
வாக்குக்கேட்கும் வரைக்கும் அண்ணனும் தம்பியும். வாக்குக்கேட்டபின் நீயாரோ? நான் யாரோ? என்ற நடைமுறையே தற்பொழுது உள்ளது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கு பக்கவாத்தியம் வாசிப்பதற்காக தற்பொழுது வடமாகாணசபை முதலமைச்சர் செயற்பட்டுவருகின்றார். ஏழு வயதிலேயே கொழும்பிற்குச் சென்ற சி.வி.விக்னேஸ்வரனுக்கு தமிழ்மக்களுடைய போராட்ட வலி என்னவென்று தெரியாது. போராளிகளைவிட்டாலும் கூட பொதுமக்களுக்கு ஒரு பொது இடத்தில் அஞ்சலி செலுத்தும் அங்கீகாரத்தினை முதலமைச்சர் ஏன் பெற்றிருக்கக்கூடாது? அதேசமயம் சிறி சபாரத்தினத்தின் அஞ்சலி நிகழ்வுகள் இலங்கையில் அனுஷ்டிக்கப்பட்டிருகின்றது. இவர்களையும் அரசாங்கம் பயங்கரவாதப்பட்டியலிலேதான் பார்த்துவந்தது. ஒருகாலத்தில் இவர்களும் தமது தாயக சுதந்திரத்திற்காக இலங்கையரசுடன் போரிட்டவர்கள் என்பதையும், தமிழரசுக்கட்சியில் உள்ளவர்களும், தற்பொழுது வடமாகாணசபை முதலமைச்சரும், அமைச்சர்களும் புரிந்துகொள்ளவேண்டும்.
அரசாங்கதுடன் இணைந்து நழுவிப்போகும் அரசியலில் ஈடுபட்டுவருவது, தமிழ்மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்களே மறுபடியும் ஆயுதம் ஏந்திப்போராடும் நிலைக்கு தமிழ்மக்களை இட்டுச்செல்கின்றார்கள். அமைச்சர் பதவிகளை வைத்துக்கொள்பவர்களும், பாராளுமன்ற அங்கத்துவத்தை வைத்துக்கொள்கின்றவர்களும் தமிழ்மக்களின் தேவைகருதி ஜனாதிபதியுடன் பேச்சுக்களில் ஈடுபட்டு அவ்வப்போது தமிழ்மக்களின் தேவைகளை அறிந்து செயற்படவேண்டும். அதுதான் நீங்கள் தமிழ்மக்களிடம் பிச்சையாக கேட்ட வாக்குகளின் அர்த்தம். இன்று உங்கள் ஆசனங்களில் அமர்ந்துகொண்டு உங்கள் ஆசனங்களை காப்பாற்றுவதற்காக சுயநலத்துடன் செயற்படுவது மக்கள் மத்தியில் மனவேதனையளிக்கின்றது. தேர்தல் காலங்களில் மட்டும் தமிழ்த்தேசியமும், பிரபாகரனும். தேர்தல் முடிந்தபின் அரசிற்கு ஆதரவாளர்கள் என்கின்ற வகையில் செயற்படுவது தமிழினத்திற்கு தமிழரசுக்கட்சி சார்ந்தவர்களும், மாகாணசபைத்தலைவர்களும் செய்யும் துரோகச் செயலாகும். இலங்கையில் முள்ளிவாய்க்கால் வெற்றியைக் கொண்டாடுகிறது இலங்கையரசு. இறந்தவர்களுக்கான அஞ்சலியை செலுத்துகிறது. இவ்வாறிருக்க இலட்சக்கணக்கில் இறந்தபொதுமக்களுக்கு முள்ளிவாய்க்கால் பிரதேசத்திலே ஏன் ஒரு அஞ்சலி நிகழ்வினை பொதுஇடத்தில் நடத்தக்கூடாது? இதற்கெல்லாம் துணிவில்லாத அரசியல்வாதிகளாக ஏன் நீங்கள் செயற்படுகிறீர்கள்? போராட்ட வழியில் தீர்வு காணமுடியாது என்று நீங்கள் விளங்கிக்கொண்டால் ஜனநாயக வழியில் உரிமைகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டியதுதானே. எமது உரிமைகள் கிடைக்கப்பெறாவி;ட்டால் காந்தியின் வழியில் உண்ணாவிரதப்போராட்டத்தில் இறங்கி தமிழ்மக்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுக்க விரைந்து செயற்படலாம்தானே? நாளுக்குநாள் தமிழ்மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. உங்கள் பிள்ளைகளையும் நீங்கள் போராட்டத்தில் இணைத்திருந்தால் அல்லது உங்கள் பிள்ளைகள் முள்ளிவாய்;க்காலில் இறந்திருந்தால்தான் அதனது வலி தெரியும். தமிழ்மக்களுக்காக குரல்கொடுக்கும் தமிழ் அமைப்புக்களே, தமிழ்க்கட்சிகளே சற்று சிந்தித்துப்பாருங்கள். இதேநேரம் கடந்த நான்கு வருட காலமாக முள்ளிவாய்க்காலில இறந்தவர்களுக்கான நினைவுக்கூட்டம் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் தலைமையில், வவுனியா மாவட்ட கலாசார மண்டபத்தில் நடத்தப்படுகிறது என்பதும் சுட்டிக்காட்டவேண்டிய விடயமாகும். – மறவன் –