தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ சீருடை மற்றும், 10 மகஸீன்கள், 6 கைக்குண்டுகள் ஆகியனவும் மீட்கப்பட்டுள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

470

முகமாலையில் நேற்றும் இன்றும் மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் விடுதலைப் புலிகள் இயக்க சோதியா மற்றும் மாலதி படையணியின் பெண் புலிகளது என இனம் காணப்பட்டுள்ளது.

முகமாலையின் முன்னரங்கப் பகுதியில் நேற்றும் இன்றும் சீருடைகள், ஆயுதங்கள் உள்ளிட்ட எச்சங்கள் மீட்கப்பட்டிருந்தன.

அதன்படி இன்று மீட்கப்பட்ட எச்சங்களில் பெண் புலிகளது இரண்டு, இலக்க தகடுகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

அவை சோதியா படையணியைச் சேர்ந்த 2784 மற்றும் மாலதி படையணியைச் சேர்ந்த 1190 தகட்டு இலக்கங்கள் ஆகும்.

இதன் அடிப்படையில் இவை சோதியா மற்றும் மாலதி படையணியைச் சேர்ந்தவர்களுடையது என இனங்காணப்பட்டுள்ளது.

கிளிநொச்சி- முகமாலை பகுதியில் மீண்டும் இன்று சடல எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் கண்டு பிடிக்கப்பட்ட சடல எச்சங்களுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ சீருடை மற்றும், 10 மகஸீன்கள், 6 கைக்குண்டுகள் ஆகியனவும் மீட்கப்பட்டுள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் இதே பகுதியில் பெண் ஒருவருடையது என நம்பப்படும் எலும்பு எச்சங்கள் சில மீட்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் நேற்று எச்சங்கள் மீட்கப்பட்ட இடத்திற்கு அருகில் மீண்டும் இன்று ஒரு சடல எச்சம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடல எச்சத்துடன் விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் இலக்கத் தகடுகள் போன்றனவும் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட சடல எச்சங்கள் முழுமையாக மண்ணுக்குள் புதையுண்டு கிடந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த சடல எச்சங்களுடன் பெண்கள் பயன்படுத்தும் இரு உள்ளாடைகள் மற்றும் ஒரு பற்பசையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பற்பசையில் பாவனைக் காலம் முடிவுத் திகதி 06.05.1999 என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோன்று விடுதலைப் புலிகள் பயன்படுத்தும் தொப்பியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சடல எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் முன்னர் போர்க்கால காப்பரண் ஒன்று இருந்துள்ளமையும், அது தகர்க்கப்பட்ட நிலையில் இரு பெண் போராளிகளின் உடலங்கள் புதையுண்டிருக்கலாம் எனவும் நம்ப்படுகின்றது.

இந்நிலையில் இதுவரை மீட்கப்பட்ட சடல எச்சங்கள் இரசாயன பகுப்பாய்வுகளிற்காக கொழும்பிற்கு அனுப்பப்படவுள்ள நிலையில், மேற்கொண்டு நாளைய தினமும் அந்தப் பகுதியில் சோதனை நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்துள்ளதுடன். அந்தப் பகுதிக்கு படையினரின் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

TPN NEWS

SHARE