தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை இழுத்தும், தள்ளியும் கடுமையாக நடந்து கொண்ட பொலிஸார்

463
mathakal_land_001

மாதகல் கிழக்கு, கோணாவளை பகுதியில் பொதுத்தேவைக்கு என அடையாளப்படுத்தப்பட்டு, கடற்படையினருக்காக காணியை சுவீகரிப்பிற்காக அளவீடு செய்வதற்கு, பொலிஸ் மற்றும் கடற்படையினரின் பாதுகாப்புடன் நில அளவையாளர்கள் மேற்கொண்ட முயற்சி தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரின் கடுமையான எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நில அளவீட்டு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை இழுத்தும், தள்ளியும் நிலத்தை எவ்வாறேனும் அளவீடு செய்ய வேண்டும் என பொலிஸார் முயற்சி எடுத்திருந்ததுடன், கடற்படையினரும் பெருமளவில் கூடி அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட சம்பவமும் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

மாதகல் கிழக்கு கோணாவளை கிராமத்தில் தமிழ் மீனவர்களுக்குச் சொந்தமான துறைமுகம் ஒன்று காணப்படுகின்றது.

குறித்த துறைமுகம் முருகன் சின்னத்துரை என்ற தனியார் ஒருவருக்குச் சொந்தமாக இருந்து. பின்னர் இராஜேஸ்வரி கடற்றொழிலாளர் சங்கத்திற்கு வழங்கப்பட்டது.

இதில் சமகாலத்தில் சுமார் 40 படகுகள் கடற்றொழிலில் ஈடுபடுவதுடன், அதனை நம்பி சுமார் 100ற்கும் மேற்பட்ட குடும்பங்களின், வாழ்வாதாரம் இருக்கின்றது.

இந்நிலையில் குறித்த பகுதியில் கடற்படை முகாம் ஒன்றினை அமைப்பதற்காக கடற்படையினர் 40பேர்ச் (4 பரப்பு) காணியை எவ்விதமான முன்னறிவித்தலும் இல்லாமல் இன்றைய தினம் நில அளவையாளர்களின் உதவியுடன் சுவீகரிப்பிற்காக அளவீடு செய்வதற்கு முயற்சித்தினர்.

முன்னதாக இன்றைய தினம் 19ம் திகதி கீரிமலை, சேந்தாங்குளம், பகுதிகளில் உள்ள பொதுமக்களின் காணிகளை கடற்படையினருக்காக சுவீகரிக்க அளவீடு செய்வதென பேசப்பட்டிருந்த நிலையில் திடீரென மாதகல் சந்தியில் சுமார் 100 வரையான பொலிஸார் குவிக்கப்பட்டு, நில அளவையாளர்கள் அந்தப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்நிலையில் அந்தப் பகுதிக்கு சென்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோர் முன் அனுமதியில்லாமல், சட்டத்திற்கு மாறாக காணிகளை அளவீடு செய்ய முடியாது.

அதனை நாங்கள் எதிர்க்கிறோம். என கூறினர். இதனையடுத்து காங்கேசன்துறை பிரதி பொலிஸ் அத்தியட்சகர் அந்தப் பகுதிக்கு வந்து கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் மாதகல் சந்தியிலிருந்து பொலிஸார் விலகிச் சென்றனர்.

அதன் பின்னர் மாதகல் சந்திக்கு அருகில் உள்ள கோணாவளை பகுதிக்கு வந்து அந்த இடத்தை அளவீடு செய்வதற்கு முயற்சித்தனர்.

இந்நிலையில் மீண்டும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் பொலிஸாரை சந்தித்து எதற்காக இந்தப் பகுதியை அளவிடுகின்றீர்கள். முதல் அளவீடு செய்ய முயற்சித்த இடத்தில் நாங்கள் அனைத்து விளக்கங்களையும் கொடுத்துவிட்டோமே, என கூறியபோது முதல் அளவீடு செய்ய முயற்சித்த இடம் தவறுதலாக மாறிவிட்டது.

எனவே இதுதான் சரியான இடம் என கூறியதுடன், அந்தப் பகுதியை தாம் எப்படியும் அளவீடு செய்தே தீருவோம் என பொலிஸார் விடாப்பிடியாக நின்றனர். ஆனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் அளவீடு செய்யும் கருவிகளை சுற்றிவளைத்து முதலில் தங்களை கைது செய்ததன் பின்னர் நிலத்தை அளவிடுங்கள் என முரண்பட்டுக் கொண்டனர்.

இதன்போது அங்கே வந்த பொலிஸார், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோரை இழுத்து விட்டதுடன், தள்ளியும் விட்டனர்.

பின்னர் பலத்த குரலில் அங்கிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிறேமச்சந்திரன் மற்றும் சிறீதரன் ஆகியோர் தாம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எங்கள் மீது கைவைக்க கூடாது என உச்ச தொனியில் கூறியதன் பின்னர் பொலிஸார் அங்கிருந்து விலகும் பாணியில் நின்றனர்.

சுமார் 1 மணிநேரம் நடைபெற்ற இரு தரப்புக்கும் இடையிலான கடுமையான தர்க்கத்தின் பின்னர் நில அளவையாளர்கள் அங்கிருந்து விலகிச் சென்றனர்.

அதன்போது அங்கே பெருமளவில் குவிக்கப்பட்டிருந்த கடற்படையினர், நில அளவையாளர்களுக்கு குளிர்பானங்களை வழங்கினர்.

மேலும் கடற்படையினர் உலங்கு வானுர்தியும் சுற்றிய வண்ணம் இருந்தது. இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள், யாழ்.மாவட்டச் செயலகத்தில் காணி சுவீகரிப்பு அதிகாரியாக ஒரு சிங்களவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரே மாவட்டத்தில் படையினருக்கும், கடற்படையினருக்கும் பெருமளவு காணிகளை சுவீகரித்துக் கொடுக்கின்றார். எனவே அவருடைய அலுவலகத்தை முற்றுகையிட்டு விரைவில் போராட்டம் நடத்தப்படும் என சூழுரைத்துள்ளனர்.

மேற்படி எதிர்ப்பு நடவடிக்கையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிறேமச்சந்திரன், சி.சிறீதரன் மற்றும் மாகாணசபை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களான ப.கஜதீபன், க.சர்வேஷ்வரன், எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் வலி,வடக்கு மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு குழுவின் தலைவர் எஸ்.சஜீவன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

SHARE