தம்புள்ள பள்ளிவாசல் நிர்மூலம்: அடிபணிந்த முஸ்லிம்கள்! 

549
muslims_sri-lanka

நீண்டகாலமாக பௌத்தர்களின் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருந்த தம்புள்ள பள்ளிவாசல் ஜனாதிபதி மஹிந்த மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவின் மறைமுக ஆசியுடன் இடித்து நிர்மூலமாக்கப்பட்டுவிட்டது.

இதுவரை காலமும் பள்ளிவாசலை அவ்விடத்தில் இருந்து அகற்ற விடமாட்டோம் என்று வீரம் பேசிய முஸ்லிம் அமைச்சர்களும், ஜனாதிபதி முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்ய மாட்டார் என்று சரணாகதி அடைந்த ஆளுங்கட்சி அரசியல்வாதிகளும் மூக்குடைபட்டு நிற்கின்றனர்.

இந்நிலையில் பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்பதைப் போல உடைக்கப்படும் பள்ளிவாசலை அரசாங்கம் கைகாட்டும் மாற்று இடமொன்றில் நிர்மாணித்துக் கொள்ளவும் முஸ்லிம் தரப்பு சம்மதித்துள்ளது.

இதனையடுத்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் நேரடி வழிநடத்தலில் அவரது கட்டுப்பாட்டில் இயங்கும் நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் பள்ளிவாசலை நிர்மூலம் செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இந்த நிலையில் தம்புள்ள பள்ளிவாசல் நிர்வாகம் நகர அபிவிருத்தி அதிகார சபை பிரதிநிதிகளுடன் ஒரு உடன்பாட்டுக்கு வந்திருப்பதாக அறியமுடிகிறது.

நேற்று மாலை கண்டியில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே இந்த இணக்கத்தை பள்ளிவாசல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதன் பிரகாரம் மேற்படி பள்ளிவாசலை வேறொரு இடத்தில் புதிதாக நிர்மாணிப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நான்கு இடங்கள் முன்மொழியப்பட்டுள்ளது என்றும், அவற்றில் பள்ளிவாசல் நிர்வாகத்தினால் தெரிவு செய்யப்படும் ஒரு இடத்தில் பள்ளிவாசலை நிர்மாணித்துக் கொள்ள முடியும் என்றும் இரு தரப்பினரும் இணக்கம் கண்டுள்ளனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் சிரேஷ்ட இராஜதந்திரியும், மூத்த முஸ்லிம் அரசியல் விமர்சகருமான இனாமுல்லாஹ் மஸீஹுத்தீன்,

அரசியல் ரீதியாகவோ சட்ட ரீதியாகவோ தம்புள்ள பள்ளிவாசலை தற்பொழுது இருக்கும் இடத்திலேயே தக்க வைத்துக் கொள்ள முடியாத நிலையில், பள்ளிவாசல் நிர்வாகம் எடுத்துள்ள முடிவு கசப்பானதாயினும் சரியான தொரு முடிவு என்று தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்களில் ஒருவரான ரவூப் ஹஸீர்,

ஜனாதிபதி நேரடியாக தலையிடாது மூன்றாவது நபர்கள் மூலம் எதாவது செய்து நழுவப் பார்க்கிறார் .அதற்கு நாம் இடமளிக்கக் கூடாது. அரசு இதற்கு முடிவு சொல்ல வேண்டும். அதன் பிறகு மக்கள் அவர்களுக்கு தமது முடிவை சொல்வார்கள் என்று காட்டமாக கருதது வெளியிட்டுள்ளார்.

தம்புள்ள பள்ளிவாசலை ஊடறுத்துச் செல்லும் வீதி அபிவிருத்திப் பணிகளின் பொருட்டு நேற்று முன்தினம் தம்புள்ள விகாராதிபதி இனாமலுவே சுமங்கல தேரர் தலைமையிலான குழுவினர் பொலிஸ் மற்றும் வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் சகிதம் பள்ளிவாசலை உடைத்து அகற்றுவதற்கு முற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே சர்ச்சைக்குரிய பள்ளிவாசலை அப்பகுதியில் இருந்து அகற்றுவதற்கு முஸ்லிம் தரப்பை சம்மதிக்க வைப்பதற்கு மாத்தளை மேயர் ஹில்மி கரீமை பயன்படுத்திக் கொண்ட கோத்தபாய, அடுதத பொதுத்தேர்தலில் அவரை நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்குவதற்கான பௌத்த மக்களின் ஆதரவைப் பெற்றுத் தருவதாக வாக்களித்துள்ளார் என்று பாதுகாப்பு அமைச்சின் செய்திப் பிரிவில் இருந்து தெரிய வந்துள்ளது

Jaya-feature MR082110 SriLanka-mosque-attack_8-11-2013_113167_lmuslims_sri-lanka

SHARE