துவாரகா என அடையாளப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்ட வீடியோ முழுமையாக செயற்கை நுண்ணறிவினால் தயாரிக்கப்பட்டது என அநேகர் நம்புகிறார்கள்.

126

 

துவாரகா என அடையாளப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்ட வீடியோ முழுமையாக செயற்கை நுண்ணறிவினால் தயாரிக்கப்பட்டது என அநேகர் நம்புகிறார்கள்.
(முகப் புத்தக தடைகள் வரலாம் எனும் நிலையில் பல விடயங்களை தவிர்க்கிறேன். பொறுத்தருள்க)
அதிலிருந்தே அனைவரும் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர் போல உள்ளது. அது இந்த வீடியோவை உருவாக்கியோருக்கு கிடைத்த வெற்றிதான்.
காரணம் வெளியாகியுள்ள வீடியோவில் உள்ள நபர் சுவிசில் வாழும் பெண் என்பது அநேகருக்கு தெரியும். அவர் குறித்த விபரங்கள் மற்றும் படங்கள் ஏற்கனவே வந்து விட்டன. முக்காடு போட்டுக் கொண்டு போய் துவாரகா சிலரைச் சந்தித்தார் எனும் பேச்சு வந்த போதே அவர் குறித்த அனைத்து தகவல்களும் சமூக வலைத் தளங்களில் வெளியாகி , அவை இன்றும் உள்ளன.
எனவே உண்மையான துவாரகா போல ஒருவரை AI தொழில் நுட்பம் மூலம் உருவாக்க வேண்டிய தேவையில்லை. அது ஒரு புறத்தே பண விரயம். அடுத்து ஏற்கனவே சுவிற்சர்லாந்தின் துர்காவ் (Thurgau) மாநிலத்தில் வாழும் மித்துஜா என அவர் குறித்த விபரங்கள் பரவலாக தெரிய வந்து சில காலம் ஆகிவிட்டது. அவரது தொலைபேசி உரையாடல் குரல் கூட பல சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு விட்டன.
இந்த நிலையில் வேறொருவரையோ அல்லது வேறொருவரது குரலையோ பயன் படுத்தினால் , மித்துஜாவை , துவாரகா எனக் காட்டியவர்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் போகலாம்.
எனவே வெளியாகியுள்ள வீடியோ AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படவில்லை. ஆனால் Green Screen Background அல்லது Chromakey தொழில் நுட்பத்தை பாவித்தே துவாரகா வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக அந்த வீடியோவை அவதானித்தால் மித்துஜா நிறுத்தி , நிறுத்தி பேசுவதை அவதானிக்க முடியும். கமரா ஒரே இடத்தில் இருக்கிறது. ஆனால் அநேகமுறைகள் Jump ஆவதோடு , ஒரே இடத்தில் நிற்காமல் சற்று விலகி விலகி நிற்கிறார். அந்த வீடியோவை பாருங்கள். அதை பார்த்து முடிவெடுங்கள்.
அதனால்தான் அது AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படவில்லை என முடிவு செய்ய இலகுவாகிறது. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கினால் இந்த தவறை அதை உருவாக்குவோர் விட மாட்டார்கள்.
செயற்கை நுண்ணறிவினால் தயாரிக்கப்பட்டது என்றால் வீடியோவில் பேசும் சம்பந்தப்பட்டவரை தேட மாட்டார்கள். அவருக்கு பிரச்சனையும் வராது. இது சிலருக்கு பரப்பும் கதை! ஆனால் அவர்தான் பேசினார் என நம்புவோருக்கு சொல்ல நினைத்தது வேறு கதை.
இன்னொன்று இலங்கையில் மாநிலங்கள் முறை இல்லை. மாகாண முறையே உள்ளது. ஆனால் அவரது பேச்சில் மாநிலங்கள் என அவர் சொல்கிறார். எனவே அவரது பேச்சை , தமிழகத்தில் அல்லது இந்தியாவில் உள்ள ஒருவரே எழுதிக் கொடுத்துள்ளார். அதை இந்த குழுவினர் கூட அவசரத்தில் அவதானிக்கமால் விட்டு விட்டார்கள்.
பொதுவாக அவரது பேச்சை , ஆரம்ப காலங்களில் அன்டன் பாலசிங்கம் அவர்களே எழுதிக் கொடுத்தார். அதன் பின் எழுதிய பேச்சு பாலக்குமார் அவர்களால் எழுதிக் கொடுக்கப்பட்டது. பாலசிங்கம் அவர்களது எழுத்துக்களில் இருந்த வீரியம் , பாலக்குமார் அவர்களது எழுத்தில் இருக்கவில்லை.
புதிய வீடியோவில் இந்திய – தமிழக ஆதரவாளர்களது பேச்சிலும் , எழுத்திலும் வரும் வார்த்தை பிரயோகங்களே உள்ளன. அவர்களது பரப்புரை என்பதை யாரும் தவறு சொல்ல முடியாது. ஆனால் ஈழ தலைவர்களது பேச்சில் அவர்களது எண்ணக் கருத்துகள் வந்தால் , அங்கே உள்ள இடைவெளியை அனைவரும் உணருவார்கள். அதை இங்கே உணர முடிகிறது.
அடுத்து சிலர் டப் (யாரோ குரல் கொடுத்துள்ளார்கள்) பண்ணியது சரியில்லை என எழுதியிருந்தார்கள். குரல் வாயசைப்புக்கு ஏற்ற விதத்தில் சிங் ஆகவில்லை (பொருந்தவில்லை) என்பது உண்மைதான். அதற்கு காரணமே பலமுறை நிறுத்தி நிறுத்தி மித்துஜா பேசியதால் , அதை எடிட்ங்கில் கோர்க்கும் அல்லது இணைக்கும் போது , ஒலியை சரியாக சிங் பண்ணாமல் அலட்சியமாக இருந்துள்ளார்கள்.
ஆனால் அதில் உள்ளது மித்துஜாவின் குரல்தானே தவிர வேறு யாரும் டபிங் கொடுக்கவில்லை. இப்படியான அநேக குளறுபடிகளால் , அநேகரது எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான காணோளி (விடியோ) நகைப்புக்கு இலக்காகிவிட்டது.
SHARE