சுந்தர் சி. கதை நாயகனாக நடித்து, டைரக்டு செய்துள்ள புதிய படம், ‘அரண்மனை.’ இது, நகைச்சுவையுடன் கூடிய திகில் படம். படத்தை பற்றி சுந்தர் சி. கூறியதாவது:–
‘‘ஒரு கிராமத்தில் பூர்வீக அரண்மனை ஒன்று இருக்கிறது. அந்த அரண்மனையின் வாரிசுகள் வெவ்வேறு ஊர்களில் வசிக்கிறார்கள். அரண்மனையை விற்பதற்காக, அவர்கள் அந்த அரண்மனைக்கு வந்து மூன்று நாட்கள் தங்குகிறார்கள். அவர்களுக்கு என்ன நேர்கிறது? என்பதே கதை.
இந்த படத்தில் எனக்கு ஜோடி கிடையாது. என்னுடன் ஹன்சிகா, ஆன்ட்ரியா, லட்சுமிராய், கோவை சரளா, வினய், சந்தானம், சரவணன், மனோபாலா, சந்தானபாரதி, காதல் தண்டபாணி, சாமிநாதன், சித்ரா லட்சுமணன், கணேஷ், விச்சு ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். பரத்வாஜ் இசையமைக்க, யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
படத்தின் கதையை நான் (சுந்தர் சி.) எழுதியிருக்கிறேன். திரைக்கதையை உதயன் எழுத, வெங்கட் வசனம் எழுதியிருக்கிறார். விஷன் ஐ நிறுவனம் சார்பில் தினேஷ் கார்த்திக் தயாரிக்கிறார். படப்பிடிப்பு பொள்ளாச்சி, காரைக்குடியில் நடந்தது. படத்துக்காக ஐதராபாத்தில் மிக பிரமாண்டமான அரண்மனை அரங்கு அமைக்கப்பட்டு, பெரும்பகுதி காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டன.
‘கிராபிக்ஸ்’ வேலைகள் கடந்த 4 மாதங்களாக நடைபெறுகின்றன. படம், அடுத்த மாதம் திரைக்கு வரும்.’’