‘நம் அணிக்கு பும்ரா சவாலாக இருப்பார்’ – தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் தலைவர் எச்சரிக்கை

88

 

தென்னாபிரிக்க அணிக்கு இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா, சவாலாக இருப்பார் என தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் தலைவர் ஏ.பி.டி.வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

முன்னாள் தலைவர் ஏ.பி.டி.வில்லியர்ஸ் எச்சரிக்கை
இந்திய கிரிக்கெட் அணி, தென்னாபிரிக்காவிற்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் செய்யவுள்ளது.

இந்த சுற்றுப் பயணத்தின் போது இந்திய – தென்னாபிரிக்க அணிகள் தலா 03 சர்வதேச 20 க்கு 20 மற்றும் ஒருநாள் போட்டிகளிலும் 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடவுள்ளன.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான சர்வதேச 20 க்கு 20 தொடர் எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பமாகும் அதேவேளை தொடர்ந்து சர்வதேச ஒருநாள் தொடர் இடம்பெறவுள்ளது.

அதன்பின்னர் முதல் டெஸ்ட் போட்டி 26 ஆம் திகதி செஞ்சுரியனிலும் 2 ஆவது டெஸ்ட் போட்டி ஜனவரி மாதம் 3 ஆம் திகதி கேப்டவுனிலும் ஆரம்பமாகவுள்ளது.

இந்த தொடரில் தென்னாபிரிக்க அணிக்கு இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா, சவாலாக இருப்பார் என தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் தலைவர் ஏ.பி.டி.வில்லியர்ஸ் கூறியுள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி முதல் இரண்டு இடங்களைப் பிடிக்க வேண்டும் என்றால் தென்னாபிரிக்காவுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியமாகும் என கூறியுள்ளார்.

எனினும் தென்னாபிரிக்காவில் இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை வெற்றிகொண்டதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

ஜஸ்பிரீத் பும்ரா, தென்னாபிரிக்க வீரர்களுக்கு கடும் நெருக்கடியை கொடுப்பார் எனவும் பும்ரா பந்து வீசத் தொடங்கினால், எதிரணி வீரர்களுக்கு அழுத்தம் கொடுப்பதை நிறுத்தவே மாட்டார் எனவும் ஏ.பி.டி.வில்லியர்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜஸ்பிரீத் பும்ராவிடம் அனைத்து திறமைகளும் இருப்பதாகவும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

கடந்த முறை இந்திய அணி வீரர்கள் தென்னாபிரிக்காவில் விளையாடிய போது பும்ராவே தொடர்ந்து நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தார் எனவும் தென்னாபிரிக்காவின் முன்னாள் தலைவர் நினைவுகூர்ந்துள்ளார்.

ஜஸ்பிரீத் பும்ரா எந்த சூழ்நிலையிலும் சிறப்பாக பந்து வீசக் கூடியவர் எனவும் விக்கெட்டுக்களை நோக்கி பந்துகளை வீசுவதில் வல்லவர் எனவும் ஏ.பி.டி.வில்லியர்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த முறை ஒட்டுமொத்த இந்திய வேகப்பந்து வீச்சும் தென்னாபிரிக்க வீரர்களுக்கு பாரிய அச்சுறுத்தலாக இருக்கும் எனவும் ஏ.பி.டி.வில்லியர்ஸ் மேலும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE