நடிகர் நாசரின் மூத்த மகன் பைசல் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த சாலை விபத்தில் பலத்த காயம் அடைந்து தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் நாசரின் அக்காள் மகன் உள்பட 3 பேர் மரணம் அடைந்தனர். பைசல் உள்பட இரண்டு பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
பைசல் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையிலேயே இருக்கிறார். அவர் கோமா நிலையில் இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கிறது. பைசலுக்கு தற்போது செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. பிரபல நரம்பியல் நிபுணர் டாக்டர் சந்திரசேகர் தலைமையான மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். நாளை (மே 26) பைசலுக்கு முக்கிய ஆபரேஷன் ஒன்று நடக்க இருக்கிறது.
நாசரும் அவரது மனைவி கமீலா நாசரும் மருத்துவமனையிலேயே இருந்து மகனை கவனித்து வருகிறார்கள். கமீலா நாசர் தொடர்ந்து கண்ணீரும், கம்பலையுமாகவே இருப்பதால் அவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மைசூரில் படப்பிடிப்பில் இருக்கும் ரஜினிகாந்த் நாசரையும், அவரது மனைவியையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். “டாக்டர்கள் மீது நம்பிக்கை வையுங்கள். இறைவனிடம் சரணாகதி அடையுங்கள்” என்று ரஜினி கூறியிருக்கிறார். “சென்னை வரும்போது பைசிலை சந்தித்து பேசுவேன்” என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.