பாதுகாப்பு செயலாளரான கோத்தபாய ராஜபக்ஷவை இந்த நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக உருவாக்க வேண்டும் என்பதற்காகவே பொதுபலசேனாவினர் பெளத்த சிங்கள மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர் என்று நவசமசமாஜ கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். அரசியல் அமைப்பின் 18ஆம் திருத்தச்சட்டத்தின்படி தான் மீண்டும் ஜனாதிபதியாகலாம் என்று மஹிந்த கண்ட கனவு தொடர்பில் பல்வேறு சட்ட சர்ச்சைகள் எழுந்துள்ளமையினால் கோத்தபாயவை அடுத்த ஜனாதிபதியாக களம் இறக்குவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சி திட்டங்களில் ஒன்றே பொதுபலசேனாவினர் ஏற்பாடு செய்துள்ள இந்த பெளத்த சிங்கள மாநாடாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;
பல்வேறு இன மக்கள் வாழும் இந்த நாட்டில் மத இனவாதங்களை ஏற்படுத்தி பல்வேறு வன்முறை சம்பவங்களுக்கு காரணமான பொதுபலசேனாவினர் பெளத்த சிங்கள மாநாடு என்ற ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளமை இன மத நல்லிணக்கங்களுக்கு எதிரான ஒன்று. இதற்கான அனுமதியை கொடுத்தது யார் என்று யோசிக்க வேண்டும்.
எதிர்வரும் 28ஆம் திகதி சுகததாச விளையாட்டு அரங்கில் பொதுபலசேனாவினர் இம்மாநாட்டினை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர். இது சர்ச்சைக்குரிய மாநாடு இதனை அரசாங்கம் தடுத்து நிறுத்தாமல் சுகததாச அரங்கில் குறித்த மாநாடு நடைபெறுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது என்பது தெட்ட தெளிவான உண்மை.
பொதுபலசேனாவினர் என்றபெயரில் இந்த மாநாட்டினை நடாத்துவது அரசாங்கம்தான். அரசாங்கத்தினால்தமிழ் – முஸ்லிம் மக்களின்வாக்குகளை ஒருபோதும் பெற முடியாது. செல்வாக்கு சரிந்து விட்டது என்பதனால் சிங்கள மக்களின் வாக்குகளை பெறுவதற்கு நாடகம் நடத்துகின்றது. இதனை ஊவா தேர்தல் நமக்கு படம் போட்டு காட்டி விட்டது. பதுளையில் சிறுபான்மையினரின் வாக்கு தனக்கு கிடைக்காது என்பதனை அறிந்த அரசாங்கம் அங்கு வன்முறைகளில் பெரியளவில் ஈடுபடவில்லை. ஆனால் சிங்கள மக்கள் செறிந்து வாழும் மொனராகலையில் தனது வெறியாட்டத்தை நடத்தியது. சிங்கள மக்களிடம் வன்முறைகளை ஏற்படுத்தி தனது வாக்குகளை பலப்படுத்தியது.
மொனராகலை மாவட்டமே இனிவரும் தேர்தல் எவ்வாறு நடைபெறும் என்பதற்கான முன்னுதாரணமாக திகழ்கின்றது. வன்முறைகளினால் ஆட்சியினை எப்படியும் கைப்பற்றலாம் என்பதனை இத்தேர்தல் தெட்டத்தெளிவாக வெளிக்காட்டியுள்ளது. கலகொட ஞானசார தேரர் மற்றும் பிரதம மந்திரி
டி.எம். ஜயரத்ன ஆகியோர் இதனை இன எழுச்சியின் வெற்றி என்று கூறியுள்ளனர்.
உண்மையில் மொனராகலையில் நீதியான தேர்தல் நடைபெறவில்லை. அவ்வாறு ஒரு தேர்தல் நடைபெற்று இருந்தால் இந்த அரசாங்கம் வீட்டுக்கு செல்வதற்கான முதல் தளம் இடப்பட்டிருக்கும். பாஸிஸ வாதியான மஹிந்த ராஜபக் ஷ இன மத பேதங்களை ஏற்படுத்தி ஆட்சியை தக்க வைக்கலாம் என்று கனவு காண்பது தவறானது. ஊவா தேர்தலில் இனஇ மத பேதம் பார்க்காது ஐ.தே.க. வேட்பாளர் ஹரீன் பெர்னா
ண்டோ வெற்றியீட்டியுள்ளார். அவருக்கு மொத்த தமிழ் முஸ்லிம்இ சிங்கள மக்களின் வாக்குகளும் கிடைத்துள்ளன. இது மக்கள் என்றும் இனவாதத்தினை மதவாதத்தினை விரும்பவில்லை என்பதை எடுத்துக்காட்டியுள்ளது.
யுத்த வெற்றி என்று கூறி நவீன ஹிட்லர் மஹிந்த ராஜபக் ஷவினால் இனியும் மக்களை ஏமாற்ற முடியாது. ஹிட்லரும் தேர்தல் நடத்தினார். ஆனால் அவரே வென்றார். அதுபோலதான் மஹிந்த ராஜபக் ஷவும் என்பதனை நாம் மறந்து விடக்கூடாது.
எனக்கு எதிராக அரசாங்க ஊடகங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. உண்மையில் நான் அதிக வாக்குகளை பெற்று வெற்றியீட்டிய பாராளுமன்ற உறுப்பினர் அல்ல. எனக்கு கிடைக்கும் வாக்குகள் ஆயிரம் கூட இல்லை. எனது கட்சி பல்லாயிரம் அங்கத்தவர்களை கொண்டது அல்ல. இந்நிலையில் எதற்காக அரசாங்கம் என்னை விமர்சிக்கிறது என்றால் பயம் நான் உண்மையை பேசுகின்றேன். இதனால் அரசாங்கத்திற்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவே என்னை விமர்சிக்கின்றது.
அரசாங்கம் சிங்கள மக்களை புதிய யுத்திகளை பயன்படுத்தி ஏமாற்றுகிறது. ஆனாலும் இந்த ஏமாற்று வித்தையினால் என்றைக்கும் ஜெயிக்கலாம் என்று கனவு காண்பது தவறானதாகும் என்றார்.