தற்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 வீதமாக அதிகரித்துள்ளது- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

508

 

வெளிநாடுகளின் தேவையற்ற அழுத்தங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ளதாக, ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தலைவர் கலாநிதி ஜோன் வில்லியம் ஆஷ்ஷிடம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உலக இளைஞர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்துள்ள கலாநிதி ஜோன் வில்லியம் ஆஷ், நேற்று அலரிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்திருந்தார். இதன்போது, முப்பது வருட யுத்தத்தின் பின் வெற்றி கொண்டுள்ள முன்னேற்றம் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த தெளிவுபடுத்தினார்.

தற்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 வீதமாக அதிகரித்துள்ளது. வட மாகாணத்தில் அது 22 வீதமாக உள்ளது.ஆசிய நாடுகளில் சீனாவுக்கு அடுத்த படியாக துரித முன்னேற்றத்தைக் கண்டுவரும் நாடுகளில் ஒன்றாக இலங்கையைக் குறிப்பிட முடியும். பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு முன்னாள் புலி உறுப்பினர்கள் 12,000 பேருக்கு புனர்வாழ்வளித்து. அவர்கள் சமூகத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். சகல சிறுவர் போராளிகளும் பெற்றோர்களிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள், நீர்ப்பாசனம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் என பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகள் நாட்டில் இடம்பெறுகின்றன. சுகாதாரம் மற்றும் கல்வித்துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது. தற்போது யாழ்ப்பாண மாவட்ட மாணவர்களே அதிகளவில் உயர்கல்விக்குத் தெரிவாகியுள்ளனர். 2005ஆம் ஆண்டு நாட்டில் மூன்று வீதத்தினரே தொழில்நுட்ப அறிவைப் பெற்றிருந்தனர். தற்போது அரசாங்கத்தினால் இதனை 50 வீதமாக அதிகரிக்க முடிந்துள்ளது. வெளிநாடுகளின் தேவையற்ற அழுத்தங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ளது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

 

SHARE