நாம் ஒருபோதும் முஸ்லீம்கள் விடயத்தில் தலையிடுவதில்லை, ஆனால் எமது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. எம்மைச் சீண்டிப் பார்க்க வேண்டாம் என பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
முஸ்லீம்களுக்கு இறுதி ஆதரவு நாம் தான் என தெரிவித்த பொதுபலசேனா இஸ்லாமிய மார்க்கம் என்ன என்பதை முஸ்லீம் இனவாத தலைவர்களுக்கு நாம் கற்றுத் தருகின்றோம் எமது வகுப்புக்கு வாருங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இந்த அமைப்பு மேலும் குறிப்பிடுகையில்,
நாம் ஒருபோதும் முஸ்லிம்கள் விடயத்தில் கடுமையாக செயற்படவில்லை. நாம் ஓர் இறுதிக் கொள்கையை மக்கள் மனதில் திணிக்கவில்லை. முஸ்லிம் மதத்தையோ ஏனைய மதக் கடவுள்களையோ கொச்சைப்படுத்தவில்லை. மதமாற்று நடவடிக்கைகளில் ஈடுபடவுமில்லை. எனினும் முஸ்லிம் அமைப்புக்கள் சில இதனை செய்து கொண்டிருக்கின்றன.
பௌத்த மதத்தை இழிவுபடுத்தி பேசுகின்றனர். புத்தர் மனித மாமிசம் உண்டதாக இணையத்தளங்களில் கருத்துக்களை பரப்புகின்றனர். இவை எதுவும் தவறாக தெரியவில்லையா? ஊடகங்களும் இவை தொடர்பில் எழுத மறுக்கின்றன. எனினும் நாம் நியாயத்திற்காக போராடுவதை ஊடகங்களும் ஏனைய மத அமைப்புக்களும் பெரிதுபடுத்தி விடுகின்றமையானது கண்டிக்கத்தக்கது.
குறிப்பாக முஸ்லிம் தலைவர்கள் பொதுபலசேனா அமைப்பை தாக்கிப் பேசுவதையே வேலையாக செய்கின்றனர். வாக்குகள் பெறுவதற்கும் கட்சி கூட்டங்களை நடத்துவதற்கும் நாமே அவர்களுக்கு துரும்புச்சீட்டாக கிடைத்துள்ளோம். உண்மையிலேயே முஸ்லிம்களை பாதுகாக்க வேண்டுமென்ற எண்ணம் இவர்களுக்கு கிடையாது. ஆபத்தான நிலையிலும் பௌத்தர்களே முஸ்லிம் சமூகத்திற்கு உதவுகின்றனர். முஸ்லிம்களுக்கு இறுதி ஆதரவு நாம் என்பதை எவரும் மறந்து விட வேண்டாம்.
அதேபோல் தொடர்ந்தும் எம்மை சீண்டிப்பார்க்கும் வேலையினை முஸ்லிம் அமைப்புக்களும் ஏனையவர்களும் கைவிட வேண்டும். எமது பொறுமைக்கு ஓர் எல்லை உண்டு என்பதை மறந்து விட வேண்டாம்.
மேலும், நாட்டில் எல்லாப் பக்கமும் பிரச்சினைகள் உள்ளன. தமிழ் பிரிவினை வாத அமைப்புக்கள் நாட்டை பிரிக்கும் நோக்கில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. மறுபுறம் முஸ்லிம் அமைப்புக்கள் ஏனையோரை மதம் மாற்றுவதிலும் நாட்டில் தீவிரவாதத்தினை பரப்புவதிலும் மும்முரமாகச் செயற்படுகின்றன. சர்வதேசம் இலங்கையை பழிவாங்கும் நோக்கில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இவ்வாறான நிலையில் அரசாங்கம் எதையும் கண்டுகொள்ளாது வாய்மூடி செயற்பட்டால் யார் நாட்டை காப்பாற்றுவது? இதனை நாம் செய்து வந்தால் இனவாதிகள் என்ற பெயரை சூட்டி எம்மை இழிவுபடுத்துகின்றனர். நாட்டில் மத விடயங்களில் யாரும் தலையிடக்கூடாது.
என்பதை நாமும் தொடர்ந்து வலியுறுத்துகின்றோம். எனினும் முஸ்லிம் தலைமைகள் மதத்தை மாத்திரம் கையில் எடுத்துக்கொண்டு ஏனையோரை இழிவுபடுத்துவதை நாம் உண்மையாக கண்டிக்கின்றோம். இஸ்லாமிய மதம் என்ன சொல்கின்றது என்பது எமக்கு தெரியும். எனினும் இஸ்லாமிய அமைப்புக்களும் அரசியல் தலைவர்களும் இதனை தெரிந்து கொள்ளாது நாட்டிற்கு பொருந்தாத விடயங்களை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
இவர்களுக்கு மார்க்கத்தின் விடயங்கள் தெரியவில்லை. எனவே எம்மிடம் வாருங்கள் நாம் பாடம் சொல்லித் தருகின்றோம். அதேபோல் முஸ்லிம் சமூகத்திற்கு பயந்து அரசாங்கம் செயற்படலாம். ஆனால் நாம் ஒருபோதும் பௌத்த கொள்கைகளை விட்டுக்கொடுத்து செயற்படத் தயாரில்லை.
என்று இஸ்லாமிய கொள்கைவாதம் கிழக்கில் மட்டுமன்றி மாவனல்லை, கண்டி,கம்பஹா ஆகிய பகுதிகளிலும் மிக வேகமாக பரவி வருகின்றது. இதனை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.