நீதியரசர் விக்னேஸ் வரனின் வாழ்க்கை குறிப்பின்படி அரசியலில் களவு பொய் தெரியாதவர் ஏனைய அரசியல் வாதிகளுடன் ஒப்பிடுகையில்;

525

 வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஒரு மனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் இரா. சம்பந்தன் திங்கட்கிழமை அறிவித்தார்.

IMG_5686 (1)

நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் இலங்கையின் உச்சநீதிமன்ற இளைப்பாறிய நீதியரசர் ஆவார். இவர் ஒரு முன்னணி தமிழ் வழக்கறிஞர். மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் நீதிபதியாகவும், நீதித் துறை நடுவராகவும் பணியாற்றியவர்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட நீதியரசர் விக்னேஸ்வரன் கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்றவர். பின்னர் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்குழரைஞராக பணியாற்றியவர்.

1979 மே 7 இல் இவர் நீத்துறையில் இணைந்தார். தொடக்கத்தில் மட்டக்களப்பு, சாவகச்சேரி, மல்லாகம் ஆகிய நீதிமன்றங்களில் நீதித்துறை நடுவராகவும் மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றினார். 1988 ஆம் ஆண்டில் உயர் நீதிமன்ற நீதியரசராகப் பதவியேற்று, வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மற்றும் மேல் மாகாணங்களில் பணியாற்றினார். 1995 ஆம் ஆண்டில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதியரசரானார்.

2001 மார்ச்சு மாதத்தில் உச்சநீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டார். 2004 ஒக்டோபரில் இளைப்பாறினார். நீதியரசர் விக்னேஸ்வரன் நீதித்துறையில் 30 ஆண்டுகளாகக் கடமையாற்றியுள்ளார். உண்மையின் பக்கம், நீதியின் பக்கம் நிற்க ஒரு பொழுதும் அவர் பின்வாங்கியதில்லை.

cv-vigneswaran

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவின் பதவியை மகிந்த இராசபக்சே அரசு அநீதியாகப் பறித்த போது நிறைவேற்றதிகாரம் கொண்ட சனாதிபதிக்குள்ள அதிகாரங்களை விட 18 ஆவது திருத்தச் சட்டமூலத்தில் வழங்கப்பட்டுள்ள அபரிமிதமான அதிகாரங்களின் பிரதிபலனாகவே முதன்மை நீதியரசர் மீதான குற்றப் பிரேரணைக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலையேற்பட்டது என்று கடந்த ஆண்டு டிசெம்பர் 22, 2012 இல் தாஜ் சமுத்தரா ஹோட்டலில் நடைபெற்ற நீதிபதிகளின் ஆண்டு மாநாட்டில் முதன்மைப் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

அண்மையில் நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை நிராகரித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவை வரவேற்றுப் பேசிய நீதியரசர் “அரசின் முடிவுகளுக்குத் தலையாட்டும் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இந்தத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்குபற்றியிருந்தால் தமிழ் பேசும் மக்களுக்குச் சார்பாக அங்கு 4 நாடாளுமன்ற உறுப்பினர்களின் குரல்கள் மட்டும்தான் ஒலித்திருக்கும். தெரிவுக் குழுவுக்கு வாருங்கள், நீங்கள் சொல்வதை நாங்கள் கேட்கிறோம், ஆனால், நாம் நினைப்பதையே செய்து முடிப்போம் என்ற திமிருடன் இருந்த இந்த அரசுக்கு தமிழ்க் கூட்டமைப்பினர் தக்க பதிலை வழங்கியுள்ளனர்” என்று காட்டமாகக் குறிப்பிட்டார்.

இளைப் பாறிய பின்னர் அவர் பொது அரசியல் தளத்தில் தொடர்ந்தும் கவனிக்கப்பட்டு வரும் ஆளுமைமிக்க ஒருவராவர். தமிழ்த் தேசியம் தொடர்பான சிக்கல்களில் துணிவான கருத்துக்களை முன்வைத்துப் பேசிவருகிறார். எனினும் நேரடியான அரசியல் களத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டதன் மூலம் முதல் முறையாக அரசியல் களத்தில் காலடி எடுத்து வைக்கிறார்.
“என்னைவிட மாவை.சேனாதிராசாவிற்கே அரசியலில் அதிக அனுபவம் உண்டு” என நீதியரசர் விக்னேஸ்வரன் கூறியிருப்பது அவரது தன்னடக்கத்தைக் காட்டுகிறது.

தமிழ்த் தேசியம், மொழி, மரபு, மண் காக்கப்பட வேண்டும் என்கிற கருத்தியலை அடிக்கடி பொது மேடைகளில் விதைத்து வந்தவரது அரசியல் வரவை பல தளத்திலிருக்கிறவர்களும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். குறிப்பாக, இளையோர்களிடமும் அறிவுப் பிழைப்பாளர்களிடமும் புதிய ஆளுமை மிக்க தலைமைபற்றிய எதிர்பார்ப்புக் கூடுதலாக இருந்தது. அதனை, அவர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை எல்லாத் தரப்பிலும் உள்ளது.

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் முன்னிறுத்தப்படுவதை ஆளும் அய்க்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசு அவ்வளவாக இரசிக்காது என்பது நிச்சயம். இவரது நியமனம் பன்னாட்டு சமூகத்தின் மத்தியில் தமிழ் ஆதரவு நிலைப்பாட்டை ஏற்படுத்தும் என்று நம்பலாம்.

பன்னாட்டு மட்டத்தில் வெளிநாட்டு அரசியல் தலைவர்களை, இராசதந்திரிகளை, ஊடகத்துறையினரை சந்தித்து அறிவுபூர்வமாக உரையாடும் திறமை நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களுடன் உண்டு. அதற்கான சட்ட அறிவு, மும்மொழிப் புலமை, கண்ணோட்டம், ஆளுமை முதலியன அவரிடம் நிறைய இருக்கிறது.

ஏனைய அரசியல் வாதிகளுடன் ஒப்பிடுகையில்

 அரசியலில் களவு பொய் தெரியாதவர்.

TPN NEWS

SHARE