நைஜீரியா: உலகக் கோப்பை கால்பந்து போட்டியைப் பார்வையிட்ட மக்கள் மீது வெடிகுண்டு தாக்குதல்

395
பிரேசிலில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இந்த விளையாட்டில் மிகவும் விருப்பம் கொண்ட ஆப்பிரிக்க நாட்டு ரசிகர்கள் பொது இடங்களில் வைக்கப்படும் பெரிய திரைகளிலோ அல்லது சாலை ஓரத்தில் கூடி கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் தொலைக்காட்சிகளிலோ போட்டிகளைக் கண்டு ரசிப்பார்கள்.

இதுபோல் வடகிழக்கு நைஜீரியாவில் இந்த மாதத் துவக்கத்தில் மக்கள் கூடி போட்டியை ரசித்துக்கொண்டிருந்த இடத்தில் நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதலில் 14 பேர் பலியாகினர். 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தற்போது மீண்டும் யோபே மாநிலத்தின் தலைநகரான டமடுருவில் நேற்று ஒரு பொதுஇடத்தில் மக்கள் கூடி போட்டியை கண்டு களித்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிகின்றது. இரண்டு முறை வெடிசத்தம் கேட்டதாக அங்கு வாழும் மக்கள் குறிப்பிட்டனர்.

காவல்துறை கமிஷனர் மார்கஸ் டன்லடி இந்த விபத்து குறித்து உறுதி செய்துள்ளார். இருப்பினும், இதில் பலியானவர்கள் அல்லது காயமடைந்தவர்கள் விபரம் உடனடியாகத் தெரிவிக்கப்படவில்லை. இதனை ஒட்டிய போர்னோ மாநிலத்திலிருந்துதான் கடந்த ஏப்ரல் மாதம் 2௦௦-க்கும் மேற்பட்ட மாணவிகள் போகொஹாரம் தீவிரவாதக் குழுவால் கடத்திச் செல்லப்பட்டனர்.

எனவே இத்தகைய தாக்குதல்கள் தீவிரவாதக் குழுக்களால் மேற்கொள்ளப்படக்கூடும் என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. நைஜீரியா அரசும் இத்தகைய தாக்குதல்களைக் கருத்தில்கொண்டு பொது இடங்களில் கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

SHARE