பட்டுப்புடவை நீண்ட நாட்கள் பாதுகாக்க செய்ய வேண்டிவை

290
பட்டுப்புடவையை நீண்ட நாட்கள் பாதுகாக்க செய்ய வேண்டிவை

பெண்களே பட்டுப்புடவை நீண்ட நாட்கள் பாதுகாக்க செய்ய வேண்டிவை

 

ஆசையாய் பார்த்து பார்த்து அதிக விலை கொடுத்து பட்டு சேலைகளை வாங்குகிறோம். திருமணம் போன்ற விசேஷங்களுக்குத்தான் அச்சேலைகளை நாம் உடுத்துகிறோம். எனவேதான் பட்டுச்சேலைகளை பராமரிப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகவே இருக்க வேண்டும். பட்டுச்சேலை பராமரிப்பது என்பதே ஒரு கலைதான். அவற்றை தோய்ப்பது, காய வைப்பது, மடிப்பது என்று ஒவ்வொன்றையும் கவனமாக கருத்தோடு செய்தால் தான் பல வருடங்களுக்கு அச்சேலைகளை புதியதுபோல் பாதுகாத்து வைத்துக் கொள்ள முடியும்.

புடவையை அப்படியே மடித்து வைக்காமல் ஒரு காட்டன் துணியில் சுற்றி வைக்க வேண்டும். புடவையை கடையில் போட்டு கொடுக்கும் அட்டை பெட்டியில் வைத்திருக்கக்கூடாது. அதேபோல் ஹேங்கர்களில் தொங்க விடவும் கூடாது. அப்படி செய்தால் நாளாவட்டத்தில் இழைகள் விலகி துணி பாழாகி விடும்.

நீண்ட காலங்களுக்கு அடிக்கடி உபயோகிக்காமல் வைத்திருக்கும் புடவைகளை ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது வெயிலில் கொஞ்ச நேரம் காய வைத்து மடித்து வைக்க வேண்டும். இதனால் அதன் நிறமும் பளபளப்பும் பாதுகாக்கப்படும். அயர்ன் செய்த பட்டுப்புடவையை ஒரே மாதிரி மடிப்புடன் நீண்ட நாட்கள் வைத்திருந்தால் மடிப்பு உள்ள இடங்களில் கிழிந்துவிடும். எனவே புடவையை சுருட்டி வைப்பதோ, மாற்றி மடித்து வைப்பதோ வேண்டும்.

சரிகை அதிகமுள்ள புடவையாக இருந்தால் ஜரிகை உட்புறம் இருக்குமாறு மடித்து வைக்க வேண்டும். இல்லையென்றால் ஜரிகையின் உலோகம் காற்று பட்டு மங்கிவிடும். பட்டு புடவைகளை உடுத்தி முடித்த உடன் ஒவ்வொரு முறையும் தோய்க்க வேண்டிய அவசியமில்லை. நன்றாக காற்றாட போட்டு வைத்து மடித்து வைக்கலாம். ட்ரை க்ளினிங் கொடுத்து வாங்கி வைத்துக் கொள்வதும் சிறந்தது. வீட்டில் துவைப்பதை முடிந்தவரை தவிர்ப்பது ஜரிகை அதிகமுள்ள புடவைகளுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட நிறங்கள் கொண்ட புடவைகளுக்கும் நல்லது.

அப்படியே வீட்டில் துவைப்பதாக இருந்தால் தலைக்கு போடும் ஷாம்பு, பாடி வாஷ் அல்லது கடலைமாவு போட்டு லேசாக கசக்கி நிறைய நீர்விட்டு அலசி நிழலில் காய வைக்க வேண்டும். உடுத்துவதற்கு முன்பு அயர்ன் செய்துக் கொள்வதும் நல்லது. கடலை மாவு அல்லது பயத்தம் மாவு போட்டு தோய்த்தால் நிறைய தண்ணீர் விட்டு அலச வேண்டும். இப்படி தோய்க்கும் புடவைகள் சற்று மினுமினுப்பாகவும், மொறமொறவென்றும் இருக்கும்.

பூச்சி வராமல் இருப்பதற்கு ரசக்கற்பூரம் (நேப்தலின் பால்ஸ்) போன்றவைகளை பட்டுச் சேலை வைக்கும் கப்போர்டில் போட்டு வைக்க வேண்டும். வேப்பிலைகளை கூட போட்டு வைக்கலாம். பட்டுப்புடவையில் எண்ணெய் பட்டுவிட்டால் டேல்கம் பவுடர் உலர்ந்த கோதுமை அல்லது கடலை மாவை அதன் மீது தேய்த்து வைத்து பிறகு மென்மையான டிட்டர்ஜென்ட் கொண்ட சோப் அல்லது ஷாம்பு போட்டு அலசி விடலாம்.

ஜரிகை அதிகமுள்ள புடவைகளுக்கு சாரி ஃபால் தைப்பது நல்லது. பட்டு ப்ளவுஸ் அணியும்போது வியர்வையை உறிஞ்சும் ஸ்வெட் பேட்டை உபயோகிப்பது ப்ளவுஸின் ஆயுளை அதிகரிக்க உதவும்.

SHARE