பத்ம பூஷன் விருது பெற்றார் பயஸ்

744

Paes, tennis, india

புதுடில்லி: நாட்டின் மூன்றாவது மிக உயர்ந்த ‘பத்ம பூஷன்’ விருது பெற்றார் டென்னிஸ் நட்சத்திரம் லியாண்டர் பயஸ்.இந்தியாவின் சீனியர் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், 40. இதுவரை 14 கிராண்ட்ஸ்லாம் (8 ஆண்கள் இரட்டையர்,6 கலப்பு இரட்டையர்) பட்டம் வென்றுள்ளார். ஏற்கனவே ராஜிவ் கேல் ரத்னா, அர்ஜுனா விருது பெற்றுள்ளார்.

நேற்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் இருந்து ‘பத்ம பூஷன்’ விருதை பெற்றார்.

இது குறித்து இவர் கூறியது:

பத்ம பூஷண் விருது பெற்றது மிகவும் தனிச்சிறப்பானது. ஒரு வெற்றிக்கோ அல்லது ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்திற்கோ கிடைக்கவில்லை. எனது 30 ஆண்டுகால கடின உழைப்பிற்காக இவ்விருதை பெற்றுள்ளேன். எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி.

17 இலக்கு: 

லண்டன் (2012) ஒலிம்பிக் போட்டி நான் பங்கேற்ற 6வது ஒலிம்பிக். இருப்பினும், தொடர்ந்து விளையாடுவேன். சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் இதுவரை 17 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். இதை எட்டுவதே என் இலக்கு. இதை அடைவேன் என நம்புகிறேன்.

இவ்வாறு பயஸ் கூறினார்.

யார் யார்

விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்குபவர்களில் 9 நபர்கள் பத்ம விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதில் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், பாட்மின்டன் பயிற்சியாளர் கோபிசந்த் பத்ம பூஷன் விருதுக்கு தேர்வானர்கள். பத்ம ஸ்ரீ விருதுக்கு அஞ்சும் சோப்ரா (கிரிக்கெட்), சுனில் சோப்ரா (கபடி), ராஜ் சிங் தரம்சாக்டு (மலை ஏறுதல்), தீபிகா பல்லீகல் (ஸ்குவாஷ்), போனிபேஷ் (வீல்சேர் டென்னிஸ்), யுவராஜ் சிங் (கிரிக்கெட்), மம்தா சோதா (மலை ஏறுதல்) உள்ளிட்ட 7 பேருக்கு தரப்பட்டது. இவர்களில் பயஸ், அஞ்சும் சோப்ரா மட்டும் விருது பெறாமல் இருந்தனர். இவர்களுக்கு நேற்று வழங்கப்பட்டது.

லியாண்டர் பயஸ்

இந்திய அணியின் நட்சத்திர டென்னிஸ் வீரர் பயஸ்,40. கோவாவில் 1973ம் ஆண்டு ஜூன் 17ல் பிறந்தார். முதல் முதலாக கடந்த 1991ல் நடந்த யு.எஸ்., மற்றும் விம்பிள்டன் தொடரில் ஜூனியர் பிரிவில் கோப்பை வென்றார். இந்திய டேவிஸ் கோப்பை தொடருக்கு கேப்டனாகவும் இருந்துள்ளார். அட்லாண்டா (1996) ஒலிம்பிக் போட்டியில் ஒற்றையர் பிரிவில் வெண்கலம் வென்றார். கடந்த 1992 முதல் கடந்த 2012ல் நடந்த லண்டன் ஒலிம்பிக் வரை பங்கேற்றார். இதன் மூலம், 6 ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட முதல் இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். கடைசியாக கடந்த ஆண்டு நடந்த யு.எஸ்.,.ஓபனில் இரட்டையர் பிரிவில் செக் குடியரசின் ஸ்டெபானக்குடன் இணைந்து பட்டம் வென்றார்.

அஞ்சும் சோப்ரா

பத்ம ஸ்ரீ விருதை இந்திய கிரிக்கெட் வீராங்கனை அஞ்சும் சோப்ரா, 36 பெற்றார். இவர் கடந்த 1977, மே 20ல் டில்லியில் பிறந்தார். கடந்த 1995ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அறிமுகமானார். பேட்டிங்கில் அசத்தும் இவர், பந்துவீச்சும் செய்துள்ளார். ஒட்டு மொத்தமாக 12 டெஸ்ட் (548 ரன்கள்), 127 ஒரு நாள் (2856), 18 ‘டுவென்டி–20’ (241) போட்டியில் விளையாடிள்ளார்.

யுவராஜ் ‘ஆப்சென்ட்’

இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், ‘பத்ம ஸ்ரீ’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார். இவர்,

அபுதாபியில் நேற்று நடந்த ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் பெங்களூரு அணி சார்பில் விளையாடினார். இதனால் டில்லியில் நடந்த விழாவில் பங்கேற்று  ‘பத்ம ஸ்ரீ’ விருதை  நேரடியாக பெற இயலவில்லை.

 

SHARE