பஸ் நிலையத்தை சுத்தம் செய்து வாழ்க்கை நடத்தும் நியூசிலாந்து வீரர்!

434

நியூசிலாந்து அணியில் சகலதுறை வீரராக வலம் வந்த கிறிஸ் கெயின்ஸ், தற்போது பஸ் நிலையத்தை சுத்தம் செய்து வாழ்க்கையை நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.நியூசிலாந்து அணியின் சகலதுறை வீரர் கிறிஸ் கெயின்ஸ், 1989ல் அணியில் வருகை தந்து 2004ல் ஓய்வு பெற்றார். பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்டம் என இரண்டிலும் அசத்தும் கெயின்ஸ் அணியை விட்டு ஓய்வு பெறும் போது நட்சத்திர வீரராக விடைகொடுத்தார்.

உலகத்தின் சிறந்த சகலதுறை வீரர் என வர்ணிக்கப்பட்ட கிறிஸ் கெயின்ஸூக்கு ஐ.சி.சி, விஸ்டன் விருது வழங்கி கெளரவித்தது. ஆனால் தற்போது இவருடைய நிலை பலருக்கும் வருத்தம் அளிக்க கூடியது.

கிறிஸ் கெயின்ஸ் தற்போது ஒரு பஸ் நிலையத்தை சுத்தம் செய்யும் வேலையையும், மணிக்கு 17 டொலர் என்ற விகிதத்தில் ட்ரக் டிரைவராகவும் வேலை செய்து வருகிறார். அதுமட்டுமின்றி 44 வயதான இவரை தற்போது இங்கிலாந்து அதிகாரிகள் மேட்ச் பிக்சிங் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இவரது நிலை குறித்து கருத்து தெரிவித்துள்ள சக வீரரான டியோன் நாஷ், அவரது நிலை எனக்கு வருந்ததக்கதாக உள்ளது. இந்த நிலையில் இருக்கும் அவரை பார்க்கவே சங்கடமாக உள்ளது. அவருக்கு எங்களால் முடிந்த உதவியை செய்வோம் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த கிறிஸ் கெயின்ஸின் மனைவி மெல் க்ராஸர் கூறுகையில், அவருக்கு வேறு வழியில்லை அவர் இதனை சந்தித்து தான் ஆக வேண்டும். நாங்கள் இப்போது சொந்த வீட்டில் கூட இல்லை. வாடகை வீட்டில் தான் இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 3000 ஓட்டங்கள் மற்றும் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய கிறிஸ் கெயின்ஸ் உலகின் சிறந்த சகலதுறை வீரராக ஓய்வு வரை கருதப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் அசத்துமா கொல்கத்தா? லாகூர் லயன்ஸூடன் இன்று மோதல்

SHARE