பாகிஸ்தானில் தீவிரவாதிகள் மீது தொடர் தாக்குதல்: 30 பேர் பலி

439
பழங்குடியின பகுதியான வடக்கு வசிரிஸ்தானில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ள பகுதிகளில் இன்று பாகிஸ்தான் அரசு நடத்திய தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த 30 பேருடன் சேர்த்து இதுவரை 260 தீவிரவாதிகள் அந்நாட்டு ராணுவத்தின் தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

மாலை 5 மணியளவில் வடக்கு வசிரிஸ்தானில் உள்ள ஹஸ்சு கேல் பகுதியில் மூன்று தீவிரவாதிகளின் மறைவிடங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 20 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவ தளபதியான அசிம் சலீம் பஜ்வா கூறியுள்ளார். அதே போல் பாகிஸ்தான்-ஆப்கன் எல்லைப்பகுதியில் நிகழ்ந்த மற்றொரு சம்பவத்தில், தீவிரவாதிகளின் இரண்டு பதுங்கு குழிகள் விமான தாக்குதல் மூலம் அழிக்கப்பட்டதுடன், மேலும் 10 பேர் பலியானதாக கூறப்படுகிறது.

இத்தாக்குதல் நடைபெற்ற இடத்தில் பொது மக்கள் நடமாட்டமே இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கராச்சி விமான நிலையம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, அவர்கள் மீது அந்நாட்டு ராணுவம் தீவிர தாக்குதல் நடத்த முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

SHARE