பாக்தாத்தில் கண்களும் கைகளும் கட்டப்பட்ட நிலையில் 50 உடல்கள் கண்டுபிடிப்பு

462
ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை இணைத்து தீவிர இஸ்லாமிய ஆட்சியை செயல்படுத்தும்விதமாக அங்குள்ள சன்னி போராளிகள் கடந்த சில வாரங்களாகத் தீவிரமாகப் போரிட்டு வருகின்றனர். இந்த நிலையில் அந்நாட்டின் தலைநகர் பாக்தாத்திற்கு தெற்கே உள்ள விவசாயப் பகுதி ஒன்றில் கண்களும், கைகள் பின்னாலும் கட்டப்பட்டுக் கிடந்த 50 சடலங்களைக் கண்டெடுத்துள்ளதாக ஈராக்கிய ராணுவம் இன்று தெரிவித்துள்ளது.

பாக்தாத்திலிருந்து 95 கி.மீ தொலைவில் உள்ள ஷியா பெரும்பான்மையினர் வசிக்கும் ஹில்லா என்ற நகரின் தெற்கே இந்த உடல்கள் கிடைத்துள்ளன. இந்த உடல்களில் துப்பாக்கிசூட்டு காயங்கள் காணப்பட்டன என்று ராணுவ செய்தித் தொடர்பாளரான பிரிகேடியர் ஜெனரல் சாத் மான் இப்ராகிம் தெரிவித்தார். இறந்தவர்களின் அடையாளங்களையும், கொலை நடந்த சூழ்நிலைகளையும் கண்டுபிடிப்பதற்கான விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கொலைக்கான நோக்கங்கள் தெளிவாக இல்லாதபோதும் கொடூரமான இத்தகைய கொலைகள் கடந்த 2006 மற்றும் 2007ல் ஈராக்கில் நடைபெற்ற ரத்தக்களரியான இனக்கலவரங்களின்போது நடைபெற்ற கொலைகளை நினைவூட்டுவதாக அமைந்துள்ளன என்று கூறப்படுகின்றது. அப்போது சாலைகளின் ஓரங்களிலும், காலியான இடங்களிலும், சாக்கடைகளிலும், வாய்க்கால்களிலும் இதுபோல் பிணங்கள் வீசப்பட்டிருந்தன. பின்னாளில் இந்த வன்முறைகள் குறைந்ததால் பிணக்குவியல்கள் காணப்படுவதும் அரிதான ஒரு நிகழ்வாக மாறியது.

ஆனால் கடந்த ஒரு மாதமாக வடக்கு மற்றும் மேற்கு ஈராக் முழுவதும் அதிகரித்துக் காணப்படும் சன்னி போராளிகளின் தாக்குதல்கள் வகுப்புவாத இனக்கலவரங்கள் நிறைந்த காலகட்டத்திற்கு ஈராக் திரும்புகின்றது என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

SHARE