பாஹுபலி முதல் பார்ட்டில் அனுஷ்கா இல்லையா? ரசிகர்கள் ஷாக் 

318




தமிழ், தெலுங்கில் ராஜமவுலி இயக்கும் படம் ‘பாஹுபலி’ . இதில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்க அனுஷ்கா, தமன்னா ஹீரோயின்களாக நடித்து வருகின்றனர். கடந்த ஒன்றரை வருடத்துக்கும் மேலாக இப்படத்தில் அனுஷ்கா நடித்து வருகிறார். இதற்காக முதல் ஒரு வருடம் புதியபடம் எதையும் ஒப்புக்கொள்ளாமல் தவிர்த்தார். வருட இறுதியில் லிங்கா, என்னை அறிந்தால் படங்களில் மட்டும் நடிக்க ஒப்புக்கொண்டார். பாஹுபலியில் தேவசேனா கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடித்து வந்தார். தற்போது அவர் நடிக்கும் பகுதி திரைக்கு வராது என்று பரவிவரும் தகவல் திரையுலகினரை அதிர்ச்சியில் அழ்த்தி உள்ளது. பிரமாண்ட அரண்மனை, அதிகபட்ச நடிகர்களுடன் சுமார் ரூ. 100 கோடியில் உருவாகி வந்த இப்படம் தற்போது இரண்டு பாகங்களாக வெளிவரவுள்ளதாக கூறப்படுகிறது.

முதல் பாகத்தில் தமன்னா நடிக்கும் காட்சிகள் மட்டுமே இடம்பெறும். அனுஷ்கா நடித்த காட்சிகள் இடம்பெறாது என கூறப்படுகிறது. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்பட பலர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். இதன் வசன பகுதி முழுவதும் படமாக்கப்பட்டுவிட்டது. படமாகாமல் இருந்த 2 பாடல்கள் இம்மாதம் படமாகி வருகிறது. முதல்பாகத்தில் நடிக்கும் தமன்னாவிடம் இது பற்றி கேட்டபோது, ‘பாஹுபலி முதல் பாகத்தில் நான் வருகிறேன். போராடும் இளவரசியாக வேடம் ஏற்றிருக்கிறேன். இப்படம் எதிர்பார்ப்புக்கும் மேலாக இருக்கும். இதை எப்படி வடிவமைத்திருக்கிறார்கள் என்பதை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. இப்படத்தில் நான் நடித்தாலும் ராஜமவுலி இப்படத்தில் என்ன செய்கிறார் என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அவர் ஒருவருக்குத்தான் படம் பற்றிய முழு விவரமும் தெரியும்’  என்றார்

 

SHARE