பிரசாந்த் உடன் ஆடும் ராக்ஸ்டார் நடிகை

491

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் பிரசாந்த். பொன்னர் சங்கர், மம்பட்டியான் படங்களுக்கு பிறகு அவர் நடித்து வரும் புதிய படம் ‘சாகசம்’. இப்படத்தில் வேலை தேடும் இளைஞராக பிரசாந்த் நடிக்கிறார். இவருடன் முன்னணி நடிகை ஒருவரை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது. பிரசாந்த்தின் அப்பாவாக நாசரும், அம்மாவாக துளசியும் நடிக்கின்றனர். இவர்கள் தவிர தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், லீமா, தேவதர்ஷினி, கோட்டா சீனிவாசராவ், மலேசியா அபிதா, சோனு சூட் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.
முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கி, சென்னை, டில்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் படமாக்கப்பட்டுள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஸ்பெயின், அயர்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் படமாக்கப்பட இருக்கிறது. மேஜர் ரவியிடம் உதவியாளராக இருந்த அருண் ராஜ் வர்மா என்பவர் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய, தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். பிரசாந்தின், அப்பா தியாகராஜனே தனது ஸ்டார் மூவிஸ் சார்பில் இப்படத்தை பிரமாண்டமாக தயாரிக்கிறார்.
இதற்கிடையே, இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்காக இந்தி நடிகை நர்கீஸ் பக்ரியை, தமிழுக்கு அறிமுகம் செய்கிறார் பிரசாந்த். நர்கீஸ் பக்ரி, இந்தியில் பிரலமான நடிகையாவர். இவர் ரன்பீர் கபூருடன் ராக்ஸ்டார், ஜான் ஆபிரஹாம் உடன் மெட்ராஸ் கபே, ஷாகீத் கபூர் உடன் போஸ்டர் நிக்லா ஹீரோ போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் தற்போது ஹாலிவுட்டில் தயாராகும் ஸ்பை எனும் படத்தில் நடித்து வருகிறார். பிரசாந்த்-நர்கீஸ் இணைந்து ஆடும் பாடலை இந்தியாவின் முன்னணி நடன அமைப்பாளர் ஒருவர் நடனம் அமைக்கிறார். தற்போது இந்தபாடலுக்கான பிரமாண்ட செட் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் இவர்கள் இணைந்து ஆடும் ஆட்டம் படமாக்கப்பட இருக்கிறது.
SHARE