இலங்கையின் வடக்கில் உள்ள கடற்கரை நகரான வல்வெட்டித்துறையில் திருவேங்கடம் வேலுப்பிள்ளைக்கும், பார்வதிக்கும் கடைசி மகனாக பிரபா கரன், 1954 நவம்பர் 26ல் பிறந்தார். வேலுப்பிள்ளை இலங்கை அரசில் பணிபுரிந்தவர். பிரபாகரனுக்கு அண்ணனும், இரண்டு அக்காவும் இருக்கின்றனர். ஊரிக்காடு எனும் இடத்தில் சிதம்பரா கல்லூரியில் 10ம் வகுப்பு வரை பிரபாகரன் கல்வி கற்றார். 1958ம் ஆண்டில் தமிழர்களுக்கு எதிராக சிங்கள வர்கள் நடத்திய கலவரம், 4 வயது சிறு வனாக இருந்த பிரபாகரன் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது.
மாணவராக இருந்த போதே பிரபாகரன் தமிழ் ஆதரவாளர்கள் குழுவில் இருந்தார். தன் பள்ளித் தோழர்களுடன் சேர்ந்து கைக்குண்டுகளை தயாரிக்கப் பழகினார். ஒருமுறை குண்டு வெடித்து அவரது காலில் தழும்பை ஏற்படுத்தியது. ஒருமுறை அதிகாலை மூன்று மணிக்கு பிரபாகரனை தேடி பொலீஸார் அவரது வீட்டுக்கு வந்தனர். அப்போதுதான் தங்களது மகன் புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டிருக்கிறான் என்ற உண்மை பெற்றோருக்கு புரிந்தது. கதவு தட்டுவதை வைத்து பொலீஸார்தான் தன்னை தேடுகின்றனர் என்பதை உணர்ந்து கொண்ட பிரபாகரன் தப்பிவிட்டார்.
பிரபாகரனை தேடி சென்று கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்து வந்தார் அவரது தந்தை. அப்போது தன் நிலைமையை அவரிடம் பிரபாகரன் கூறிய போது, ‘உங்களுக்கோ, குடும்பத் துக்கோ நான் பயன்படமாட்டேன். என்னால் உங்களுக்கு எந்த தொல்லையும் வேண்டாம். என்போக்கில் விட்டு விடுங் கள். என்னை எதிர்பார்க்காதீர்கள்’ என்று கூறி வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அதன் பின் வீடு திரும்பவேயில்லை. கடந்த 1970களில் தமிழர்களுக்கு எதிராக ஏவிவிட்ட கடுமையான அணுகுமுறை யும், கல்வித்துறையில் புறக்கணிப்பு உள்ளிட்டவை தமிழ் இளைஞர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்புணர்வை உருவாக்கியிருந்தது.
பாராளுமன்றில் தமிழ்த்தலைவர் களின் போராட்டங்களுக்கு இலங்கை அரசு செவி சாய்க்கவில்லை. எனவே, தமிழ் பகுதியில் 1970ல் தமிழ் மாண வர் பேரவை துவங்கப்பட்டது. வல்வெட்டித்துறையை சேர்ந்த பிரபா கரனும், நண்பர்களும், உறவினர்களுமே அதில் முக்கிய பங்கு வகித்தனர். இக்குழு மாணவர்கள் மத்தியில் செல்வாக்கு பெறத் தொடங்கியது. அக்குழுவிலேயே மிக இளையவராக இருந்ததால் அவரை ‘தம்பி’ என்றே எல்லோரும் அழைத்தனர். சிங்கள எதிர்ப்பை காட்டும் விதமாக பஸ்சை எரிப்பது என்று முடிவு செய்தனர். அதன் படி 16 வயதாக இருந்த பிரபாகரன், பஸ்சை எரித்து தனது போராட்டத்தை துவக்கினார்.
மாணவர் பேரவையில் இருந்தவர்களை, சிங்கள பொலீஸார் கைது செய்து கொழும்பில் சித்திரவதை செய்தனர். இச்சூழ்நிலையில் பிரபா கரன் தமிழகம் வந்தார். பின் 1972ல் இலங்கை திரும்பிய அவர், ‘புதிய தமிழ்ப் புலிகள்’ என்ற பெயரில் ஓர் இயக்கத்தை துவக்கினார். ஆயுதம் ஏந்துவதன் மூலமே இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று அவர் தீர்மானமாக இருந்தார்.
கடந்த 1974ம் ஆண்டில் யாழ்ப் பாண நகரில் தமிழ் ஆதரவு மாநாடு நடந்தது. இம்மாநாட்டில் துப்பாக்கிச் சூடு நடந்ததில் ஒன்பது பேர் பலியாகினர். இச்சம்பவத்துக்கு பழி தீர்க்கும் விதமாக, 1975ல் பொன்னாலை எனும் இடத்தில் கோவிலுக்கு சென்று கொண்டிருந்த, யாழ்ப்பாண மேயர் அல்பிரட் துரையப்பா சுட்டுக்கொலை செய்யப்பட்டார். துரையப்பா, இலங்கை சுதந்திரக்கட்சியை சேர்ந்தவர், தமிழ் இன உணர்வை நசுக்கும் நோக்கத்தை கொண்டிருந்தவர். இச்சம்பவத்தை முன்னின்று நடத்தியவர் பிரபாகரன். இதுதான் பிரபாகரனின் முதல் கொலை நடவடிக்கை.
கடந்த, 1975ல் புத்தூர் வங்கிக்குள் தனது தோழர்களுடன் நுழைந்து, ஐந்து இலட்ச ரூபாய் மற்றும், இரண்டு இலட்ச ரூபாய் நகைகளை கொள்ளையிட்டுச் சென்றார். இதனால் சிங்கள பொலீ ஸார் புதிய தமிழ்ப்புலிகளை அழிக்க தீவி ரம் காட்டினர். கடந்த, 1976 மே 5ம் நாள் தமிழ் புதிய புலிகள் இயக்கத்தை தமிழ் ஈழ விடுதலைப்புலிகளாக, புதிய இயக்கமாக பிரபாகரன் நிறுவினார். இலங்கை உளவுப் படையினரை அழித்தல், பொலீஸ் நிர்வாகத்தை சீர்குலைத்தல், இராணுவத்தினர் மீது நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்குதல் நடத்துதல் ஆகிய மூன்று அம்சங்களை புலிகளின் பணிகளாக அப்போது அறிவித்தார்.
கொரில்லா இயக்கமாக வெளிக் காட்டுவதற்காகவே, இயக்கத்தின் சின்னமாக புலியை தேர்வு செய்தார். புலிகள் இயக்கத்தை உருவாக்கியதால், இலங்கை இராணுவம் அவரை தேடத் தொடங்கியது. பொலீஸார் மீதும், இராணுவத்தினர் மீதும் புலிகள் தாக்குதல் நடத்தினர். 1978ல், 11 முக்கிய தாக்குதல் சம்பவங்களுக்கு தாங்கள்தான் பொறுப்பு என்று பிரபாகரன் அறிக்கை விட்டார். இதையடுத்து அந்த ஆண்டே விடுதலைப்புலிகள் தடை சட்டம் இலங்கை பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.
அதே ஆண்டில், ஐக்கிய தேசிய கட்சியின் ஜெயவர்த்தன அரசு புதிய அரசியல் அமைப்பை உருவாக்கி, தமிழ் மொழியை இரண்டாம் பட்ச நிலைக்கு தள்ளியது. ஒருவரை எந்த விசாரணையும் இன்றி 18 மாதம் சிறையில் தள்ளும் சட்டத்தையும் 1979ல் இலங்கை அரசு நிறைவேற்றியது. இதனால், 1979-80ல் ஆயுத நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு, இயக்கத்தை பலப்படுத்தும் வேலை யில் பிரபாகரன் ஈடுபட்டார். 1981ல் சிங்கள இராணுவமும், ஐக்கிய தேசிய கட்சியினரும் இணைந்து யாழ்ப்பாண நூல கத்தை எரித்தனர். தெற்காசியாவில் சிறந்ததாக கருதப்பட்டது இந்த நூலகம். 94 ஆயிரம் புத்தகங்கள் சாம்பலாகின.
கடந்த, 1981ல் யாழ்ப்பாண காங்கேசன் துறைமுகத்தில் இராணுவ வாகனத்தின் மீது புலிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதுவே இராணுவத்தினர் மீது புலியினர் நடத்திய முதல் தாக்குதல். 1982ல், அதிபர் ஜெயவர்த்தன தேர்தல் பிரசாரத்துக்கு வந்த போது, பொன்னாலைப் பகுதியில் கண்ணிவெடிகுண்டுகளை புதைத்து வைத்து தாக்குதல் நடத்தினர். கடந்த, 1983 உள்ளுராட்சி தேர்தலின் போது, நடத்திய தாக்குதல், இராணுவத்தினரை நிலை குலையச்செய்தது, கண்ணி வெடித்தாக்குதலில் 13 இராணுவத்தினரை கொன்றது ஆகிய சம்பவங்களை பிரபா கரன் நேரில் நடத்தினார். இதுபோன்று பிரபாகரனின் தீவிர செயல்கள் தொடங்கின. இதையடுத்து கண்ட இடத்தில் போராளிகளை சுடவும், சுட்டுத் தள்ளிய பின் பிணங்களை பிரேத பரி சோதனை இன்றி புதைக்கவும் வழிசெய்யும் ஆணையை சிங்கள அரசு பிறப்பித்தது.
அப்பாவி தமிழர்கள் மீதான தாக்குதல்களை சிங்கள இராணுவம் அதிகரித்தது. கருப்பு ஜூலை என்று அழைக்கப்படும், 1983 ஜூலை 23ல், சிங்களவர்களால் 400 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 1983 ஜூலை, தமிழ் ஈழப்போரின் கொந்தளிப்பான காலகட்டம் என்று சொல்லலாம். இராணுவத்தினர் மீதான கொரில்லா தாக்குதலை பிரபா கரன் தொடங்கினார். அரசியல் மற்றும் இராணுவ அமைப்புகளையும் விரிவாக்கம் செய்தனர்.
கருப்பு ஜூலை கலவரத்தை கணக்கில் கொண்டு, அப்போது பிரதமர் இந்திரா, இலங்கை பிரச்சினையில் தலை யிடுவது என்று முடிவு செய்தார். இதற்கு அப்போது தமிழகத்தில் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் முயற்சி செய்தார். புலிகளுக்கு இராணுவ பயிற்சியும் ஆயுத மும் வழங்குவது என்று இந்தியா முடிவு செய்தது. இந்நேரத்தில், தமிழீழத்துக்குத் தேவையான ஆயுதங்களையும் வெளியிலிருந்தும் பிரபாகரன் பெற்றார். இதனால், இராணுவத்தினர் மீது கடுமையான தாக்குதலை புலிகள் நடத்தினர். இந்நேரத்தில் இலங்கை அரசு கலக்கம் அடைந்திருந்தது. தமிழ் ஈழ மக்கள் மகிழ்ச்சி அடைந்த நேரத்தில், 1984ம் ஆண்டில் இந்திரா படுகொலை செய்யப்பட்டார்.
அடுத்து பிரதமராகப் பதவியேற்ற ராஜிவுக்கும், பிரபாகரனுக்கும் இடையில் இணக்கமான சூழ்நிலை உருவாகவில்லை. இலங்கை அரசுக்குச் சாதகமாக ராஜிவ் செயற்படுவதாக பிரபாகரன் கருதி னார். இதற்கிடையில், புங்குடுதீவைச் சேர்ந்த மதிவதனியை பிரபாகரன் 1984ம் ஆண்டு ஒக்.1ம் திகதி சென்னையை அடுத்த திருப்போரூர் முருகன் கோவி லில் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு இரு மகன்கள் சார்ல்ஸ் அன்ரனி, பாலச்சந்திரன் மற்றும் ஒரு மகள் துவாரகா பிறந்தனர். இவர்களில் சார்ல்ஸ் அன்ரனி தற்போது போர் முனையில் மரணமடைந்துவிட்டார்.
கடந்த, 1985ம் ஆண்டில் இருதரப்பினருக்கும் போர்நிறுத்தம் ஏற்பட்டது. பூட்டான் தலைநகர் திம்புவில் இந்திய அரசின் முயற்சியில் தமிழ்க் குழுக்கள் மாநாடு நடந்தது. இங்கு புலிகள் முன்மொழிந்த தமிழர் தன்னாட்சி உரிமை தீர்மானத்தை இலங்கை அரசு ஏற்கவில்லை. பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதன்பின், திரிகோண மலை அருகே, இலங்கை இராணுவம் தாக்குதல் நடத்தி, 200 பேரைக் கொன்றது. இந்தியாவிலிருந்து அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் வெளியேறினார். இதையடுத்து, இந்தியாவுக்கும், பிரபாகரனுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.
கடந்த, 1986ம் ஆண்டில் தமிழகத்தில் விடுதலைப்புலிகளின் தகவல் தொடர்பு சாதனங்கள் பறிக்கப்பட்டன. அப்போது பிரபாகரன் தமிழகத்தில் தான் இருந்தார். பிரபாகரனின் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து அவை திருப்பியளிக்கப்பட்டன. 1987ம் ஆண்டில் அவர் ஈழம் திரும்பினார். அப்போது பேசிய அவர், ‘தனி அரசை அமைக்க உயிர், உடல், ஆன்மாவை அர்ப்பணித்துப் போராடுவோம்’ என்றார். கடந்த, 1987ம் ஆண்டில் டில்லியில் ராஜிவைச் சந்திக்கும் வழியில், தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரையும் பிரபாகரன் சந்தித்தார். ராஜிவ் – ஜெயவர்தனா ஒப்பந்தம் பற்றி அப்போது அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. இது தனக்கு அதிர்ச்சி அளித்ததாக பிரபாகரன் கூறினார்.
மற்ற தமிழ்க்குழுக்கள் ஏற்றுக் கொண்டன என்று கூறி, அப்போது ராஜிவ்-ஜெயவர்தனா ஒப்பந்தம் நிறை வேறியது. இந்த ஒப்பந்தப்படி, ஆயுதங்களை புலிகள் இந்திய அரசி டம் ஒப்படைக்க வேண்டும். இலங்கை அவர்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்கவேண்டும். இந்திய அமைதிப் படை இரு தரப்புக்கும் இடையில் மோதல் நடக்காமல் கன்காணிக்கும். இதுபற்றி பேசிய பிரபாகரன், ‘மக்களது விடுதலைக்காக, விமோசனத்துக்காக நாங்கள் ஏந்திய ஆயுதங்களை இந்திய அரசிடம் ஒப்படைக்கிறோம். தமி ழீழ மக்களின் ஒரே பாதுகாப்பு சாதன மாக இருந்த இந்த ஆயுதங்களை இந்திய அரசு எங்களிடமிருந்து பெற்றுக் கொள்வதிலிருந்து, தமிழ் ஈழ மக்களின் பாதுகாப்பை ஏற்றுக்கொள்கிறது.
நாங்கள் ஆயுதங்களை அளிக்காவிட்டால் இந்திய இரா ணுவத்துடன் மோதும் நிலை ஏற்படும். இதை நாம் விரும்பவில்லை. தமிழ் ஈழ தனி அரசே நிரந்தரத் தீர்வைத் தரும்’ என்றார். பலாலி இராணுவ முகாமில் இந்திய இராணுவத்திடம் ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டன. இந்திய இலங்கை ஒப்பந்தத்திலிருந்த விஷயங்களை இலங்கை அரசு நிறைவேற்றக் கோரி திலீபன் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார். தொடரும்….
அவருடைய கொள்கை உறுதியால் உண்ணாவிரதத்திலேயே மரணமும் அடைந்தார்.
திலீபன் மரணத்துக்குப் பின், விடுதலைப்புலிகளை இலங்கைக் கடற்படை கைது செய்தது. ‘இது ஒப்பந்த விதிகளுக்கு முரணானது’ என்று கூறிய ஏழு புலிகள் சயனைடு குப்பிகளைச் சாப்பிட்டு மரணம் அடைந்தனர். புலிகளும் போர் நிறுத்தத்தைக் கைவிட்டனர். இந்திய அமைதிப்படைக்கு எதிராகப் புலிகள் போராடுவது குறித்து, தமிழக முதல்வர் எம்.ஜி.ஆருக்கு எழுதிய கடிதத்தில், ‘இந்திய ராணுவம் புலிகளை ஒழிக்க வேண்டும் என்று நினைப்பதால் தான் எங்களது தற்காப்புக்காகப் போராடி வருகிறோம்’ என்று பிரபாகரன் எழுதியிருந்தார்.
1987 மற்றும் 1988ம் ஆண்டுகளில், இடைக்கால அரசை தமிழ்ப்பகுதியில் ஏற்படுத்த வேண்டும் என்று ராஜிவுக்கு எழுதினார் பிரபாகரன். இந்த சமயத்தில் பெண்களையும் போராளிகளாக பிரபாகரன் அனுமதித்தார். பெண்புலிகளும் போர்க்களத்தில் ஈடுபட்டனர். தமிழ் ஈழத்துக்காகப் போரிட்டு உயிர் நீத்த மாவீரர் ளை நினைவு கூறும் தினம் 1989ம் ஆண்டில் பிரபாகரனால் துவக்கப்பட்டது. இந்த சமயத்தில் அதிபராகப் பதவியேற்ற பிரேமதாசா புலிகளைச் சமாதானப் பேச்சுக்கு அழைப்பு விடுத்தார். இதனால், 1990ம் ஆண்டில் இந்திய அமைதிப்படை நாடு திரும்பியது. தமிழர்களுக்கு எதிராக இந்திய ராணுவம் நடந்து கொண்டது எனக் கூறி, அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, ராணுவத்தினரை வரவேற்க விமான நிலையம் செல்லவில்லை. அதிபர் பிரேமதாசாவுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாததால், 1990 ஜனவரி 10ல் மீண்டும் இலங்கை ராணுவம் மற்றும் புலிகளிடம் மோதல் ஏற்பட்டது.
குற்றச்சாட்டுகள்: கடந்த, 1991 மே 21ல், ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரத்துக்கு வந்த காங்கிரஸ் தலைவர் ராஜிவ், புலிகளின் மனித குண்டுக்கு பலியானார். இதில் பிரபாகரன் குற்றம் சாட்டப் பட்டார். ராஜிவ் -ஜெயவர்தனே மற்றும் அமைதிப்படை விவகாரங்களில் பிரபாகரன் அதிருப்தி அடைந் தது அதற்கு காரணமாக சொல்லப் பட்டது. 2006ல் ராஜிவ் படுகொலை பற்றி பிரபாகரன் கூறிய போது, ராஜிவ் கொலையை, ‘ஒரு துன்பியல் சம்பவம்’ என்றார்.
தமிழ் ஈழ விடுதலை அமைப்பு தலைவர் உமா மகேஸ்வரன், டெலோ தலைவர் சிறிசபாரத்தினம் படுகொலைகளிலும், 1990ல் சென்னையில் ஈ.பி.ஆர்.எல்.எப்., தலைவர் பத்மநாபா மற்றும் அவரது சகாக்கள் 14 பேரை சுட்டுக் கொன்றது தொடர்பாகவும் இவர் மீது குற்றம் சாட்டப் பட்டது. அதிபர் பிரேமதாசா, அதிபர் வேட்பாளர் காமினி திசநாயகா மற்றும் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் மற்றும் லட்சுமண் கதிர்காமர் ஆகியோர் படுகொலையிலும் பிரபாகரன் குற்றம் சாட்டப்பட்டார். 33 நாடுகள் விடுதலைப் புலிகள் மீது தடை விதித்தன. இன்டர்போலும் இவரைத் தேடியது.
முப்படை அமைப்பு: புலிகள் (தரைப்படை), கடற்புலிகள் (கடல் படை – 1984 ம் ஆண்டு முதல் பிரபாகரன் முயற்சி செய்ததன் விளைவாக 1992ல் உருவாக்கப் பட்டது) மற்றும் வான்புலிகள் (விமானப்படை) ஆகிய மூன்று படைகளையும் கொண்ட ஒரே போராளி அமைப்பு என்ற பெயரைப் பெற்றது. 1993ல் உயிரை துச்சமாக எண்ணி, ரகசியமாக தாக்கும் கரும்புலி தற்கொலை படையினரையும் பிரபாகரன் துவக்கினார்.
கடந்த, 2002ல் நார்வே முயற்சியால் அமைதி முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது பிரபாகரன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அமைதி முயற்சிகள் வழக்கம் போல் வெற்றி பெறவில்லை. இருதரப்பினர் இடையிலும் மோதல் தவிர்க்க முடியாதது ஆனது.
2005ல் ராஜபக்ஷே அதிபர் ஆனபின், நார்வே அமைதி முயற்சி முற்றிலுமாக முடிவுக்கு வந்தது. புலிகள் ராணுவப்பிரிவில் இருந்த கருணா அம்மான், 2004 மார்ச்சில் பிரபாகரனிடமிருந்து விலகியது, அந்த அமைப்புக்கு பெரிய சவாலாக அமைந்தது.
கடந்த ஆண்டு இறுதியில், புலிகளின் கிழக்குப் பகுதியில் கடுமையாக சண்டை நடந்தது. 2009 புலிகளுக்கு சோகமானதாகவே இருந்தது. ஜனவரி 2ல், கிளிநொச்சியை ராணுவம் கைப் பற்றியது புலிகளுக்கு பெரிய அடியானது. ஜனவரி 25ல் முல்லைத்தீவை கைப்பற்றியது. வன்னியில் புதுக்குடியிருப்பு பகுதிக்குள் புலிகளின் எல்லையை ராணுவம் நெருக்கியது. இப்பகுதியில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் தமிழர்கள், இரு தரப்பு சண்டையில் சிக்கினர். பின் முள்ளிவாய்க்கால் தீபகற்ப பகுதியில் வேறு இடங்களுக்கு தப்ப முடியாத படி ராணுவம் நெருக்கியது.
இப்பகுதியில், பொதுமக்கள் மீதும் புலிகள் மீதும் ராணுவம் தாக்கியதில் நூற்றுக் கணக் கான புலிகள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் பலியாகினர். புலிகள் இருக்கும் இடத் துக்கு சில மீட்டர் தூரம் வரை சென்ற ராணுவம், தாக்குதல் நடத்தியதில் பிரபாகரன் மற்றும் அரசியல் பிரிவு தலைவர் நடேசன், பிரபாகரன் மகன் அந்தோணி மற்றும் பொட்டு அம்மான் உள்ளிட்டோர் பலியாகிவிட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் ஈழப் போராட்டத்தில் 70 ஆயிரம் பேர் பலியாகியிருக்கின்றனர்.
வான்படை உருவாக காரணமான சார்லஸ்: புலிகளின் வான்படை உருவாக காரணமாக இருந்த சார்லஸ் அந்தோணி பலியானது எப்படி என்பது குறித்து இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கை: புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் நேற்று அதிகாலை ராணுவம் கடும் தாக்குதல் நடத்தியது. தாக்குதல் முடிவுக்கு வந்த பின், ராணுவ வீரர்கள் இங்கு தேடுதல் வேட்டை நடத்தினர். சண்டையில் பலியான புலிகளின் உடல்களை அடையாளம் காணும் பணி நடந்தது. இதில், 24 வயது மதிக்கத்தக்க சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது, புலிகள் தலைவர் பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் அந்தோணியின் சடலம் என தெரிய வந்துள்ளது. புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் நடேசனும் சண்டையில் பலியானார். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்லஸ் அந்தோணி இறந்த நிலையில் இருப்பது போல் எடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தையும் இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ளது. சார்லஸ், ஏரோ நாட்டிகல் இன்ஜினியரிங் படித்தவர். புலிகள் வான்படையை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர். தகவல் தொடர்பு பிரிவையும் கவனித்து வந்தார். சமீப காலமாக நடந்த சண்டைகளை சார்லஸ் தான் தலைமையேற்று நடத்தியதாக தகவல்கள் வெளியாயின. அதேபோல், தமிழ்ச்செல்வன் மறைவுக்குப் பின் புலிகள் அரசியல் பிரிவு தலைவராக பதவியேற்றவர் நடேசன். இவர், இலங்கையில் முன்பு போலீஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ய முயன்றது இலங்கை ராணுவம். ஆனால் அவர் கடைசிவரை ராணுவத்திடம் சிக்கவில்லை என்று விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த மே 15, 2009ல் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட ஆவணங்களில் கூறப்பட்ட தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. அதில், விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போரின்போது பிரபாகரனை உயிருடன் கைது செய்வதற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ராணுவத்தினருக்கு கடும் உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார்கள்.
அதற்காக என்ன விலை கொடுக்கவும் அவர்கள் தயாராக இருந்தனர். அதன் காரணமாகவே போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்கள் இழப்பு குறிப்பு அரசாங்கமோ பாதுகாப்புப் படைகளோ கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை.
ஆனாலும் ராஜபக்சேவுக்கும் அவரது சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாயவுக்கும் போர் களத்தின் உண்மையான நிலவரம் பற்றிய சரியான தகவல்
ஒருங்கிணைப்பு கிடைக்கவில்லை. இதனால் இலங்கை அரசு விரும்பியதுபோல பிரபாகரன் உயிருடன் அராசங்கப் படைகளிடம் சிக்கவில்லை, என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், ஏப்ரல் 25, 2009 ல் புலிகளுடனான போர் நிறுத்தத்துக்கு சம்மதிப்பதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரிடம் ராஜபக்சே கூறியதாகவும், இந்தத் தகவல் இந்திய வெளியுறவுச்செயலர் நாராயணனுக்கு தெரியும் என்றும், ஆனால் கடைசி வரை அதனை வெளியிடாமலேயே விட்டுவிட்டதாகவும் விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ள இந்நிலையில் சர்வதேசப் பேச்சுக்களாக திம்பு முதல் டோக்கியோ தொடர்ந்து ஜெனிவா வரை தமிழர் போராட்டம் தொடர்பாகவும் தமிழ் மக்களின் இனப்படுகொலை தொடர்பாகவும் உலகத்தில் வாழ்கின்ற தமிழ் மக்கள் தொடர்பாகவும் முகவரியை எடுத்துத்தந்தவர் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் என்பதும் குறிப்பிடத்தக்கவிடயம்.