பிரெஞ்ச் ஓபன்: முதல் சுற்றில் ஜோகோவிச், ஷரபோவா வெற்றி

579
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டங்களில் நோவாக் ஜோகோவிச், ஷரபோவா ஆகியோர் வெற்றி கண்டனர். ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் திருவிழா பாரிஸ் நகரில் நடந்து வருகிறது.

இதன் 2-வது நாளான நேற்று ஆட்டம் தொடங்கும் முன்பே மழை பெய்ததால் ஆட்டங்கள் தாமதமாக ஆரம்பமானது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் 2-ம் நிலை வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா), போர்ச்சுக்கல் வீரர் ஜோ சோசாவை சந்தித்தார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 6-1. 6-2, 6-4 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் உலகின் 10-ம் நிலை வீரர் நிஷிகோரி (ஜப்பான்) 6-7 (4-7), 1-6, 2-6 என்ற நேர்செட்டில் சுலோவக்கியா வீரர் மார்ட்டின் கிசானிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். இன்னொரு ஆட்டத்தில் செக் குடியரசு வீரர் ஜிரி வெஸ்லி 6-2, 7-6, 7-5 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீரர் லூகாஸ் ரசூலிடம் தோல்வி கண்டார்.

மற்றொரு ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் பினொய்ட் பெய்ர் 6-3, 6-4, 7-6 என்ற நேர்செட்டில் கொலம்பியா வீரர் அலெஜான்ட்ரா பாலாவை தோற்கடித்தார். மற்ற ஆட்டங்களில் ராபின் ஹாஸ் (நெதர்லாந்து), மரின் சிலிச் (குரோஷியா), டாமி ராபர்டோ (ஸ்பெயின்) ஆகியோர் வெற்றி கண்டனர். பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் 8-ம் நிலை வீரர் மரியா ஷரபோவா (ரஷியா) 6-1, 6-2 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீராங்கனை செனியா பெர்வாக்கை எளிதில் தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் சுலோவக்கியா வீராங்கனை டோமினிகா சிபுல்கோவா 7-5, 6-0 என்ற நேர்செட்டில் விர்ஜினி ரசனோவை (பிரான்ஸ்) தோற்கடித்தார். மற்ற ஆட்டங்களில் தமிரா பாசெக் (ஆஸ்திரியா), டிமெ பாசின்ஸ்கை (சுவிட்சர்லாந்து), மோனா பார்தெல் (ஜெர்மனி), இவ்ஜினி பவுச்சார்ட் (கனடா), ஷபின் லிஸ்கி (ஜெர்மனி), பிளாவியா பென்னட்டா (இத்தாலி), யாரோஸ்லாவா (கஜகஸ்தான்), ஜிலெச் சிமோன் (பிரான்ஸ்), சமந்தா ஸ்டோசுர் (ஆஸ்திரேலியா) ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்குள் நுழைந்தனர்.

SHARE