பீகாரில் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து மாவோயிஸ்ட் சதி காரணமா?: விசாரணைக்கு அரசு உத்தரவு

473

பீகாரில் நேற்று அதிகாலை ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் தடம்  புரண்டு விபத்துக்குள்ளானது. இதில், 4 பயணிகள் பலியாகினர். 8 பேர்  காயமடைந்தனர். இந்த விபத்துக்கு மாவோ தீவிரவாதிகள் சதி  காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது பற்றி விசாரிக்க  அரசு உத்தரவிட்டுள்ளது. டெல்லி- திப்ரூகர் இடையே செல்லும்  ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில், பீகார் மாநிலம், சரண் மாவட்டத்தில்  உள்ள சாப்ரா வழியாக நேற்று அதிகாலை 2 மணியளவில் சென்று  கொண்டிருந்தது. கோல்டன் கஞ்ச் ரயில் நிலையம் அருகே வந்தபோது,  ரயில் திடீரென தடம் புரண்டு ஓடியது. இதில் 3 பெட்டிகளும், சமையல்  பெட்டியும் கவிழ்ந்தன. அதை தொடர்ந்து, அடுத்தடுத்து 12 பெட்டிகள்  தடம் புரண்டன. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பயணிகள்  பலியாகினர், 8 பேர் படுகாயம் அடைந்தனர். ஒருவர்  மருத்துவமனையில் பலியானார்.

தகவல் அறிந்த ரயில்வே போலீசார் மற்றும் மீட்பு படையினர் சம்பவ  இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு  மருத்துவமனைக்கு அனுப்பினர். ரயிலில் இருந்த மற்ற பயணிகள் சிறப்பு  ரயில் மூலம் திப்ரூகர் அனுப்பப்பட்டனர். இதேபோல், பீகார் மாநிலம்  கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் சகியா, மெஹ்சி ரயில்  நிலையங்களுக்கு இடையே நேற்று முன்தினம் 11 மணியளவில் சரக்கு  ரயில் ஒன்று தடம் புரண்டது. இதில் 18 பெட்டிகள் தண்டவாளத்தை  விட்டு இறங்கின. இந்த விபத்தில் 100 மீட்டர் தூரத்துக்கு ரயில் பாதை  சேதம் அடைந்தது.  இந்த விபத்துக்கள் குறித்து, ரயில்வே வாரிய  தலைவர் அருணேந்திர குமார் கூறுகையில், ‘‘தண்டவாளத்தில் குண்டு  வெடித்ததற்கான அறிகுறிகள் இருக்கின்றன.

இதன் காரணமாக ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டுள்ளது என  முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த ரயில்  நிலையத்தில் இருந்து 60 கி.மீ தொலைவில், மற்றொரு சரக்கு ரயிலும்  தடம் புரண்டுள்ளது. இந்த விபத்துக்கும் தண்டவாளம் குண்டு வைத்து  தகர்க்கப்பட்டதுதான் காரணம் என சந்தேகிக்கப்படுகிறது’’ என்றார். இந்த  விபத்துகளை தொடர்ந்து பீகார் முழுவதும் ரயில் நிலையங்களில் பலத்த  பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விபத்து குறித்து ரயில்வே  பாதுகாப்பு கமிஷனர் தலைமையில் விசாரணை நடத்த  உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்துக்கு ரயில்வே அமைச்சர்  சதானந்த கவுடா, இணை அமைச்சர் மனோஜ் சின்கா ரயில் ஆகியோர்  சென்று விசாரணை நடத்தினர். விபத்தில் பலியானவர்களின்  குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா  ரூ.20 ஆயிரமும் நிவாரணம் அளிக்க ரயில்வே அமைச்சர் சதானந்த  கவுடா உத்தரவிட்டுள்ளார். இதேபோல் பிரதமரும் பலியானோர்  குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்து கவுடா கூறுகையில், ‘‘விபத்துக்கான காரணத்தை  இப்போது கூற முடியாது. அது விசாரணைக்கு பின்பே தெரியவரும்.  குண்டு வெடிப்பு நடந்ததா, இல்லையா என அனைத்து கோணங்களிலும்  விசாரணை மேற்கொள்ளப்படும்’’ என்றார். அப்பாவி மக்கள் மீது  பாதுகாப்பு படையினர் நடத்தும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து,  சரண், கோபால்கஞ்ஜ் மற்றும் சிவன் பகுதியில் நேற்று முன்தினம்  நள்ளிரவு முதல் 2 நாள் பந்த் நடத்த மாவோயிஸ்ட்கள் அழைப்பு  விடுத்திருந்தனர். இதனால், அவர்கள்தான் தண்டவாளத்தை குண்டு  வைத்து தகர்த்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படை உயரதிகாரி ஒருவர் கூறுகையில்,  ‘‘பீகாரின் திர்குத் மற்றும் சரண் பகுதியில் உள்ள தர்பங்கா, சாப்ரா,  ஹாஜி பூர் ஆகிய பகுதிகளில் உள்ள ரயில்வே சொத்துகள் மீது  மாவோயிஸ்ட் தாக்குதல் நடத்தலாம் என உளவுத் தகவல்  முன்கூட்டியே கிடைத்தது. இது குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை  எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடந்த 20ம் தேதி தகவல்  தெரிவித்தோம்’’ என்றார்.

முதல்வர் மறுப்பு

சரண் மாவட்ட கலெக்டர் குண்டன் குமார் கூறுகையில், ‘‘ராஜதானி  எக்ஸ்பிரஸ் தடம் புரண்ட சம்பவத்துக்கு 15 நிமிடங்கள் முன்பாக  கவிகுரு எக்ஸ்பிரஸ் ரயில் அந்த வழியாக பாதுகாப்பாக கடந்து சென்றது.  ரயில் தடம் புரண்ட இடம், நகரத்தின் மையப் பகுதியில் உள்ளது. இங்கு  மாவோயிஸ்ட்கள் குண்டு வைத்திருந்தால், அது எளிதில்  கண்டுபிடிக்கப்பட்டு இருக்கும். தண்டவாளம் குண்டு வைத்து  தகர்க்கப்பட்டு இருந்தால் பலி இன்னும் அதிகமாக இருந்திருக்கும்’’  என்றார்.

பீகார் முதல்வர் ஜிதன் ராம் மன்ஜி கூறுகையில், ‘‘குண்டு வெடிப்பால்  ரயில் தடம் புரண்டதற்கான எந்த அடையாளமும் இல்லை.  ரயில்வேயின் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து  நடந்ததுபோல் தெரிகிறது’’ என்றார்.

SHARE