பீரங்கிகளைத் தொட்டு சுட்டுப்பழகியவர்கள் நாம், விளையாட்டு துப்பாக்கிகளுக்கு அஞ்சப்போவதில்லை:

518

 

நீதியானதும் சுதந்திரமானதுமான  தேர்தலொன்று   நடைபெறுமானால்  தற்போதைய  ஆட்சியாளர்கள்  நாட்டைவிட்டு  தப்பியோட  வேண்டிய  நிலை வரும். பீரங்கிகளைத்  தொட்டு சுட்டுப்பழகியவர்கள்  நாம், விளையாட்டு  துப்பாக்கிகளுக்கு  அஞ்சப்போவதில்லை என  ஜனநாயகக் கட்சியின் தலைவரும் முன்னாள்  இராணுவத்தளபதியுமான  சரத் பொன்சேகா  தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை  புத்ததாஸ மைதானத்தில்  ஜனநாயகக் கட்சியின் இரண்டாவது  மேதினக் கூட்டம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய  முன்னாள்  இராணுவத்தளபதியும்  ஜனநாயகக் கட்சித் தலைவருமான  சரத் பொன்சேகாவே  இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர்  தொடர்ந்து  உரையாற்றுகையில்;

ஜனாதிபதித்  தேர்தலை   மிக விரைவில்  நடத்துவதற்கு  நாட்டின் ஆட்சியாளர்  தீர்மானித்துள்ளதாக  தகவல்  வெளியாகியுள்ளது.  அத்துடன் ‘இத்தேர்தலில்  பொது வேட்பாளராக  சரத் பொன்சேகாவை  போட்டியிட விடமாட்டேன்’  என அவர் தெரிவித்துள்ளார்.  இம்முறை   ஆட்சியாளர்  என்னைக் கொல்ல தயாராகிறார்.  நாட்டினை  அதள பாதாளத்தில்  தள்ளிய  ஆட்சியாளரின்  அச்சுறுத்தலுக்கு  நாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை.

ஜனநாயகத்தைப்  பாதுகாக்கும் வகையில்  சுதந்திரமானதும் நியாயமானதுமான  தேர்தலை  நடத்துங்கள்.  அரசியல்  களத்தில்  நேருக்கு  நேர் போட்டியிடுவோம்.  அவ்வாறானதொரு தேர்தலை   நடத்தினால்  தற்போதைய  ஆட்சியாளர்  நாட்டைவிட்டு  தப்பியோட வேண்டிய நிலை ஏற்படும்.

அத்துடன்  நாட்டில்  ஏற்பட்டுள்ள பல்வேறு  பிரச்சினைகளுக்கு  நாட்டின்  ஆட்சியாளரும் அவரது  எடுபிடி அமைச்சரவையும் பொறுப்புக்கூற வேண்டும். நாட்டிற்கு  வருகின்ற  வெளிநாட்டவர்கள்  கொல்லப்படுகின்றனர்.  மக்களுக்காக  செயற்படும்  அரச அதிகாரிகளுக்கு  எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

அண்மையில் பிரதம  நீதியரசர்  சிரானி பண்டாரநாயக்கவுக்கு  எதிராக  மேற்கொள்ளப்பட்ட  நடவடிக்கைகளைப்  போல பொலிஸ் திணைக்களத்தில்  நூற்றுக்கு  90 சதவீதமானவர்கள்  நியாயமாக  செயற்பட்டுவருகின்ற  போதும்  ஊழல்  மோசடிகளுடன்  சம்பந்தப்பட்ட  10 சதவீதத்தினரை  திணைக்களத்திற்குள்  நுழைத்து  இவ்வரசாங்கம் அத்திணைக்களத்தை  மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளியுள்ளது.

இன்று  மக்களுக்காக செயற்பட  வேண்டிய நீதிமன்றங்கள்  ஆட்சியாளரின் பழிவாங்கல் நடவடிக்கைகளை  முன்னெடுத்துச் செல்கின்றன. அண்மையில்  அம்பாந்தோட்டைக்குச்  சென்றிருந்த  ஐக்கிய தேசியக் கட்சியின்  பாராளுமன்ற  உறுப்பினர்களை  விளையாட்டு  துப்பாக்கிகளைக் காட்டி அச்சுறுத்திய  சம்பவமொன்று  இடம்பெற்றது. இச்சம்பவத்தையடுத்து  மொரட்டுவ பகுதியிலுள்ள  ஆளும் தரப்பு  உறுப்பினர்கள் ‘சரத் பொன்சேகாவோ அல்லது  மக்கள் விடுதலை முன்னணியினரோ  வந்தால்  நடப்பதை  பார்த்துக்கொள்ளலாம்’ என அச்சுறுத்தி  வருகின்றனர்.

நாம் பீரங்கிகளைத்  தொட்டு சுட்டுப்பழகியவர்கள்.  விளையாட்டு  துப்பாக்கிகளுக்கு நாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை.

இந்து சமுத்திரத்தில்  முத்தாக  விளங்கிய  இலங்கையை  இன்று  போதைப்பொருட்களின்  மையமாக  இந்த அரசு  மாற்றியுள்ளது.  2015 ஆம் ஆண்டுக்குள்  இந்த நாட்டை மீண்டும் இந்து சமுத்திரத்தின்  முத்தாக மாற்றுவோம் எனவும் தெரிவித்தார்.

SHARE