புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு எதிரான தடை குறித்து கனேடிய எதிர்க்கட்சி, அந்நாட்டு அரசாங்கத்துடன் பேச்சு:-

521

canadian_tamil_congress_pressconference

இலங்கையில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து, கனேடிய எதிர்க்கட்சி, அந்நாட்டு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளது. கனடாவின் புதிய ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகள், அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயார்ட்டை சந்திக்க உள்ளனர். இலங்கை அரசாங்கத்தின் தடை காரணமாக சில கனேடிய நிறுவனங்களினால் இலங்கை வாழ் தமிழர்களுக்கு உதவிகளை வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

குறிப்பாக சில கனேடிய நிறுவனங்களினால் இலங்கைத் தமிழர்களுடன் தொடர்புகளைப் பேணவோ அல்லது உதவிகளை வழங்கவோ முடியா நிலைமை காணப்படுவதாக புதிய ஜனநாயகக் கட்சி அறிவித்துள்ளது. புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு எதிரான தடை மனித உரிமை செயற்பாட்டாளர்களின் களச் செயற்பாடுகளை பாதிக்கும் என சுட்டிக்காட்டியுள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைளை கோரி வரும் அமைப்புக்களே தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவளித்த இரண்டு கனேடிய நிறுவனங்களும் தடை செய்யப்பட்டுள்ளன. தடை உத்தரவினால் கனேடிய நிறுவனங்களினால் இலங்கை நிறுவனங்களுடன் தொடர்புகளைப் பேணவோ அல்லது அவர்களுக்கு உதவி வழங்க நிதி திரட்டவோ முடியாது போகும் என புதிய ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ராதீகா சிற்சபேசன் உள்ளிட்ட உறுப்பினர்கள் கடிதம் ஊடாக அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளனர். மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை தொடர்ச்சியாக தடை ஏற்படுத்தி வருவதாகவும், அந்த விவகாரத்தில் கனேடிய அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து அறிந்து கொள்ள விரும்புவதாகவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE