பொது பல சேனாவின் கடும்போக்கு நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

691

 

140402125809_galagoda_aththe_chanasara_304x171_bbc
ஜாதிக பல சேனாவின் அறிமுக ஊடகவியலாளர் சந்திப்பை பொது பல சேனா கலகம் விளைவித்து தடுத்ததாக முறைப்பாடு

இலங்கையில் சமூகங்களுக்கு இடையிலான ஒற்றுமையை வலியுறுத்தி தொடங்கப்பட்டுள்ள அமைப்பொன்றின் ஊடகவியலாளர் சந்திப்புக்குள் அதிரடியாக நுழைந்த பொது பல சேனா அமைப்பின் பிக்குகள், ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தவிடாமல் தடுத்து தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக காவல்துறையிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜாதிக பல சேனா என்ற பெயரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அமைப்பே கொழும்பில் ஹோட்டல் ஒன்றில் இன்று புதன்கிழமை காலை இந்த ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது.

ஜாதிக பல சேனா அமைப்பைச் சேர்ந்த பௌத்த பிக்கு வட்டரெக்க விஜித்த தேரர், முஸ்லிம் மதபோதகரான மௌலவி ஆர்.எம். நியாஸ் ஆகியோர் மீது பௌத்த கடும்போக்கு அமைப்பான பொது பல சேனாவின் பிக்குகள் தாக்குதல் நடத்தியதாக கொழும்பு கொம்பெனித் தெரு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ரமீஸ் பஷீர் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

140409110926_bbs_incident_624x351_bbcபொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர், ஜாதிக பல சேனா அமைப்பின் முக்கிய ஆவணங்கள் அடங்கிய கோப்புகளையும் பறித்துச் சென்றுவிட்டதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி ரமீஸ் பஷீர் தெரிவித்தார்.

ஜாதிக பல சேனா அமைப்பை நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்த முயன்றபோதே தாம் தடுக்கப்பட்டதாக வட்டரெக்க விஜித்த தேரர் பிபிசியிடம் கூறினார்.

‘இலங்கையின் அனைத்து மக்களினதும் சமூக, கலாசார அடையாளங்களையும் மத சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்காக குரல்கொடுப்பது தான் ஜாதிக பல சேனாவின் பிரதான நோக்கம்’ என்றார் வட்டரெக்க விஜித்த தேரர்.

ஞானசார தேரர் தலைமையிலான பொது பல சேனா சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான வெறுப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டுவருவதாக கடும் விமர்சனங்கள் உள்ளன

‘சமூகங்களுக்கு இடையில் அச்சமும் சந்தேகமும் வளர்ந்து வருகின்ற இன்றைய சூழ்நிலையை மாற்றி, சமாதானமான சூழலை உருவாக்குவது தான் எங்களின் நோக்கம்’ என்றும் அவர் கூறினார்.

ஜாதிக பல சேனாவின் ஊடகவியலாளர் சந்திப்புக்குள் புகுந்து கலகம் விளைவித்தமை பற்றி பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலபொடஅத்தே ஞானசாரத் தேரரிடமும் பிபிசி விளக்கம் கேட்டது.

‘உண்மையை திரிபுபடுத்தி, முஸ்லிம் பள்ளிவாசல்களுக்குச் சென்று நாட்டின் புத்த சாசனத்துக்கு பிக்குகளுக்கும் பாதிப்பு ஏற்படும் விதத்தில் போலியான பிரச்சாரங்களை (வட்டரெக்க தேரர்) மேற்கொண்டுவருகிறார்’ என்றார் கலபொடஅத்தே ஞானசார தேரர்.

‘பல சந்தர்ப்பங்களில் நாங்கள் பொறுத்திருந்து பார்த்தோம். இன்றும் இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் அடிப்படைவாதக் குழுக்களுடன் சேர்ந்துகொண்டு தவறான கருத்துக்களை அவர் பரப்பிவருகிறார். இது தொடர்பாக கேட்டுப்பார்க்கவே நாங்கள் அங்கு சென்றோம்’ என்றும் ஞானசார தேரர் கூறினார்.

தாம் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டையும் அவர் நிராகரித்தார்.

கடந்த காலங்களில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மதக்குழுக்களுக்கு எதிராக நடந்த தாக்குதல்கள் தொடர்பிலும் வெறுப்புணர்வுப் பிரச்சாரங்கள் தொடர்பிலும் பொது பல சேனா அமைப்பு மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்துள்ளன.

 

.BBC  NEWS

SHARE