பொருளாதார தடை விதித்தால் விமானம் பறக்க தடை விதிப்போம்: ரஷியா கடும் எச்சரிக்கை

391

உக்ரைனின் கிழக்கு பகுதியில் மெஜாரிட்டி ஆக வாழும் ரஷிய ஆதரவாளர்கள் தங்களுக்கு தன்னாட்சி உரிமை கோரி போராட்டம் நடத்தினார்கள். அது தீவிரமடைந்து உள்நாட்டு போர் ஆக மாறியது. அதில் 3000 பேர் பலியாகினர்.

கிழக்கு உக்ரனை சேர்ந்தவர்களுக்கு அண்டை நாடான ரஷியா ஆயுதம் மற்றும் நிதி உதவி வழங்குவதாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டின.

எனவே ரஷியாவுக்கு பொருளாதார தடை விதித்தன. அதைத்தொடர்ந்து தற்போது உக்ரைன் அரசுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைன் அதிபர் பெட்ரோ பொரொஷென்கோ ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி போர் நிறுத்தம் ஏற்படுத்தினர்.

இந்த நிலையில் ரஷியா மீது மேலும் பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா மற்றும் பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் முடிவு செய்துள்ளன.

இதற்கு ரஷிய பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

”ரஷியா மீது விதிக்கப்படும் பொருளாதார தடையை எதிர்த்து நின்று மாற்றும் சக்தி சீனா போன்று எங்களுக்கும் உண்டு. எங்கள் மீது பொருளாதார தடை விதித்தால் மேற்கத்திய நாடுகளின் விமானங்கள் எங்கள் வான் எல்லையில் பறக்க தடை விதிப்போம்.

இதன்மூலம் மேற்கத்திய நாடுகளின் பல நிறுவனங்கள் திவாலாகும் நிலை ஏற்படும்’’ என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

SHARE