போராட்டக்காரர்களை சந்தித்து பேசும்படி பாக். பிரதமருக்கு கோர்ட் அறிவுறுத்தல்

386
பாகிஸ்தானின் சுதந்திர தினத்தை வரும் 14-ம் தேதி பிரமாண்டமாக கொண்டாட நவாஸ் ஷரிப் தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ள நிலையில், அதே நாளில் தாகிர் அல் காத்ரியின் அவாமி தெஹ்ரிக் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்ஸாப் கட்சி ஆகியவை அரசை எதிர்த்து பாராளுமன்றம் வழியாக தனித்தனியாக மாபெரும் பேரணிகளை நடத்தப் போவதாக அறிவித்துள்ளன.

இதற்கிடையில், பாகிஸ்தானில் அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் மதகுரு தாகிர் அல் காத்ரியின் ஆதரவாளர்களுக்கும் போலீசாருக்குமிடையே கடந்த வாரம் ஏற்பட்ட மோதலில் 7 பேர் இறந்தனர்.

இந்நிலையில், தாகிர் அல் காத்ரி மற்றும் இம்ரான் கானின் தலைமையிலான பேரணிகளுக்கு தடை விதிக்க வெண்டும். இந்த பேரணிகளை அனுமதித்தால் நாட்டின் அமைதியும், ஸ்திரத்தன்மையும் சீர்குலைந்து ஜனநாயகம் ஸ்தம்பித்துப் போகக் கூடும் என்பதால் இந்த பேரணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று முஹம்மது கம்ரான் என்பவர் லாகூர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இவ்வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி காலித் முஹம்மது தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்வு, அவாமி தெஹ்ரிக் கட்சியின் தலைவர் தாகிர் அல் காத்ரி மற்றும் தெஹ்ரிக் இ இன்ஸாப் கட்சி தலைவர் இம்ரான் கான் ஆகியோரை நாளை (இன்று) கோர்ட்டில் ஆஜராகும்படி உத்தரவிட்டது.

மேலும், நாட்டில் நிலவிவரும் எதிர்மறை அரசியல் நிலைப்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக போராட்டம் நடத்தும் எதிர்க்கட்சி தலைவர்களை பிரதமர் நவாஸ் ஷரிப் சந்தித்துப் பேச வேண்டும் எனவும் இந்த அமர்வு அறிவுறுத்தியுள்ளது.

தனது வீட்டின் அருகிலேயே வசிக்கும் இம்ரான் கானை நாட்டின் ஸ்திரத்தனமைக்காக பிரதமர் நவாஸ் ஷரிப் ஒரு நாளைக்கு பத்து முறை கூட சந்திக்கலாம் என்று இந்த அமர்வுக்கு தலைமையேற்றுள்ள நீதிபதி காலித் முஹம்மது குறிப்பிட்டுள்ளார்.

SHARE