போலந்து நாட்டில் ஏற்பட்ட விமான விபத்தில் 11 பேர் பலி

401
போலந்து நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள செஸ்டோசோவா பாராசூட் கிளப்பிற்கு அருகில் நடைபெற்ற ஒரு விமான விபத்தில் 11 பேர் பலியானதாகவும், ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டுவந்த அவசர சேவைகளின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.பைபர் நவஜோ என்ற அந்த விமானம் 11 பாராசூட் வீரர்கள் மற்றும் ஒரு விமானியுடன் தெற்கிலிருந்து பறந்து வந்துகொண்டிருந்ததாகவும், அதன் என்ஜினிலிருந்து வினோதமான சப்தங்கள் வந்துகொண்டிருந்ததாகவும் விமானம் விழுந்த டோபொலோ கிராமத்திலிருந்து விபத்தை நேரில் பார்த்த பார்பரா மின்சிகிவிக்ஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

வீடுகளுக்கு மிக மேலாக பறந்துவந்த அந்த விமானம் ஒரு பக்கமாக சாய்ந்து பின்னர் தீப்பற்றி கீழே விழுந்தது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.  விமானம் கீழே விழுந்தவுடன் கிராமத்து மக்கள் விரைந்து சென்று அதிலிருந்து இரண்டு சடலங்களையும், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஒருவரையும் மீட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான இந்த லகு ரக விமானம் செஸ்டோசோவா அருகில் உள்ள ருட்னிகி விமான தளத்திலிருந்து கிளம்பியது தெரியவந்தது.இந்த விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்றபோதும் அதில் அதிக எண்ணிக்கையில் பயணம் செய்ததே விபத்து ஏற்படக் காரணமாக இருந்திருக்கும் என்று கூறப்படுகின்றது.

SHARE