மகிந்த ராஜபக்சேவின் ஆட்சிக் காலத்தில் 2004 ஏப்ரலில் இருந்து 2009 பெப்ரவரி வரை 33 ஊடகப் பணியாளர்கள் படுகொலை

415
சண்டே லீடர் ஆசிரியர் கொல்லப்பட்டு ஆறு மாதங்களுக்கு மேலாகியும் அவருடைய படுகொலை தொடர்பான விசாரணை ஒரு அடிகூட முன்னகரவில்லை என்று இலங்கைப் பொலிஸாரினதும் நீதித்துறையினதும் செயலற்ற தன்மையை ஊடக அமைப்புகளும் மனித உரிமை அமைப்புகளும் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், லசந்தவின் படுகொலையுடன் தொடர்புபட்ட இரண்டு தகவல்கள் அண்மையில் வெளிவந்திருக்கின்றன.முதலாவது, உலகிலேயே மிகப் பெரிய அமைச்சரவையைக் கொண்டுள்ள இலங்கை அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய அமைச்சர்களுள் ஒருவரான தொழில் அமைச்சர் மேர்வின் சில்வா பொலிஸாரினதும் நீதித்துறையினதும் பாத்தியதையை நன்குணர்ந்ததாலோ என்னவோ லசந்த விக்ரமதுங்கவைக் கொன்றது நானே என்று பகிரங்கக் கூட்டமொன்றில் வைத்துத் தெரிவித்திருக்கிறார்.இந்தக் கூற்றைக் கடந்த ஜூலை 9ஆம் திகதி களனி, ஹூணுப்பிட்டியவில் சதொச விற்பனை நிலையத்தைத் திறந்துவைத்து உரையாற்றும்போது அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

“சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க அதிகமாகத் துள்ளினார். அவருக்கு வேலையைக் கொடுத்தேன். போத்தலவும் (போத்தல ஜயந்த) துள்ளினார். அவரது காலை உடைத்துப் போட்டேன். தற்போது எனது தேர்தல் தொகுதியில் ஒருவர் எனக்கு விளையாட்டுக் காட்ட முயல்கிறார். அவருக்கு நான் இன்னமும் ஐந்து நாட்கள் மாத்திரம் கொடுக்கின்றேன். அவர் களனி பிரதேச சபையின் தலைவர் பதவியிலிருந்து விலகவில்லையென்றால், நான் கெட்டவன் எனக் கூற வேண்டாம். அதன்பின்னர் என்னை யாரும் குறைகூறக் கூடாது. எனது வார்த்தையை மீறினால் அவரையும் லசந்தவை அனுப்பிய இடத்திற்கே அனுப்பிவிடுவேன்” என்று அமைச்சர் மேர்வின் சில்வா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருக்கிறார். அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே ஆட்சியிலிருக்கும்வரையில் தாம் யாருக்கும் அஞ்சப் போவதில்லை எனவும், எந்தவொரு சக்திக்கும் அடிபணியப் போவதில்லை எனவும் மேர்வின் சில்வா அங்கு தெரிவித்திருக்கிறார்.

இது நடந்து மூன்றாவது நாளான ஜூலை 12ஆம் திகதி அதிகாலை களனி, ஹூணுப்பிட்டி, பண்டாரநாயக்க மாவத்தையில் உள்ள களனி பிரதேச சபையின் தலைவர் பிரசன்ன ரணவீரவின் வீட்டிற்குள் பிரவேசித்த இனந்தெரியாத குழுவினர் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இந்தத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பிரதேச சபைத் தலைவரின் மனைவி, சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக ஜூன் 29ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் உரையாற்ற எழுந்த அமைச்சர் மேர்வின் சில்வா, நிகழ்ச்சியை அறிக்கையிட அரசத் தொலைக்காட்சியைத் தான் அனுமதிக்கப் போவதில்லை என்று கூறி அதன் ஒலிவாங்கியைப் பிடுங்கி எறிந்தார்.

ஏற்கெனவே 2007 டிசம்பர் 27இல், அமைச்சராகத் தானிருந்தும் தனது செய்தி ஒன்றை ஒளிபரப்பாததால் அரசத் தொலைக்காட்சி நிலையமான ரூபவாஹினிக்குள் அமைச்சரும் அவரது அடியாட்களும் புகுந்து பணிப்பாளரைத் தாக்க முயன்றபோது பணியாளர்களால் அங்குள்ள அறையொன்றினுள் தடுத்துவைக்கப்பட்ட அமைச்சர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கும்வரை வெளியேற அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை.

அமைச்சரைத் தடுத்துவைத்த சம்பவத்துடன் தொடர்புபட்டிருந்த ரூபவாஹினிப் பணியாளர்கள் ஒவ்வொருவராகத் தாக்குதலுக்குள்ளானது பின்னர் நடந்த சம்பவங்கள். கடந்த ஜூன் மாதம் முதலாம் திகதி கடத்தப்பட்டுத் தாக்குதலுக்குள்ளான போத்தல ஜயந்தவும் ரூபவாஹினிச் சம்பவத்தில் அமைச்சரின் நடத்தையைக் கடுமையாக எதிர்த்தவர்களுள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் மேர்வின் சில்வாவின் இந்தப் பகிரங்க உரையின் ஒலிநாடாவைத் தான் ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திராக் கட்சியின் பொதுச்செயலருக்கும் அனுப்பிவைத்துள்ளதாகப் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

இரண்டாவது சம்பவம் இந்த ஒலிநாடா யாருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதோ அவர் பற்றியது.

சண்டே லீடரின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க நாட்டில் இல்லாத ஒரு நாள். லசந்தவின் சகோதரர் லால் விக்ரமசிங்கவைத் தன்னிடம் அழைத்து வரும்படி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபாவைப் பணித்தார். லால் விக்ரமசிங்க லசந்த விக்ரமதுங்கவின் சகோதரர் மட்டுமல்ல, லீடர் வெளியீட்டு நிறுவனத்தின் தலைவரும்கூட. பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா, லாலுக்குத் தொலைபேசி எடுத்து தான் முக்கியமான ஒரு செய்தியைப் பிரசுரிப்பதற்காக லீடர் நிறுவனத்திற்கு வர வேண்டி இருப்பதாகத் தெரிவித்தார். லால், பைஸரின் வருகைக்காகக் காத்திருந்தார். பைஸர் வாக்குறுதியளித்தபடி வந்து லாலை வாகனத்தில் ஏறுமாறும், வாகனத்தில் பிரயாணம் செய்யும் போது அது பற்றிப் பேசலாமென்றும் தெரிவித்தார். லால் பைஸரின் வாகனத்தில் ஏறினார். அதேநேரம் லாலைச் சுமந்துகொண்டு அந்த வாகனம் ஜனாதிபதி தங்கியிருக்கும் அலரி மாளிகைக்குள் நுழைந்தது. லால் ஒன்றும் பேசவில்லை. லால் இப்போது ஜனாதிபதிக்கு முன்னால் நின்றார். லால் எப்படி இருக்கிறீர்கள்? நாங்கள் நேரடியாகவே விடயத்திற்கு வருகிறோம், லீடர் வெளியீட்டு நிறுவனத்தின் விற்பனை விலை என்ன? இந்தப் பேரத்தை நாங்கள் 400 மில்லியனோடு முடித்துவிடுவோமா? என்று ஜனாதிபதி கேட்டார்.

இவ்விரு சம்பவங்களும் போர் தீவிரம் பெறுவதற்கு முன்னரேயே ஊடகவியலாளர் மீதான வன்முறை ஆரம்பமாகிவிட்டதையும் போர் முற்றுப்பெற்ற பின்னரும் அது தொடர்வதையும் எடுத்துக்காட்டும் இரண்டு உதாரணங்கள்.

தமிழ் மக்கள் தரப்பு நியாயம் சற்று ஓங்கியிருந்த காலத்தில், அதைத் தவிடுபொடியாக்கும் செயல்பாடுகளுடன் சேர்த்து அரசத் தரப்பினரால் திட்டமிடப்பட்டதுதான் இந்த ஊடகவியலாளர் மீதான ஒடுக்குமுறைகள்.

தமிழ் மக்கள் தரப்பு நியாயத்தை எடுத்துரைக்கவல்ல நபர்களை இனம்கண்டு அவர்களை ஒழித்துக் கட்டுவதன் ஊடாக அந்த நியாயத்தை எடுத்துரைப்பதைத் தடுப்பது, அவ்வாறு எடுத்துரைக்க முன்வரும் ஏனைய நபர்களுக்கு இந்நடவடிக்கைகளூடாக அச்சமூட்டுவது, மெல்ல மெல்லத் தெற்கில் சிங்கள மக்களிடையே உருவாகிவந்த தமிழர் தரப்பு நியாயத்திற்கான குரல்களை நசுக்கிவிடுவது. அவ்வாறு தெற்கில் குரல்கள் எழக் காரணமாகத் தென்னிலங்கை மக்களுக்கு வடக்கு கிழக்குத் தமிழ் மக்களின் உண்மை நிலவரங்களை எடுத்துரைத்து வந்தவர்களை அழித்தொழிப்பதனூடாகத் தெற்கைத் தமது சிங்கள பௌத்தப் பேரினவாதக் கருத்து மேலாண்மைக்குள் எப்போதும் வைத்திருப்பது என நீண்டு செல்லும் திட்டமிடலின் ஒரு பகுதிதான் ஊடகவியலாளர்கள் மீதான இந்த அடக்குமுறைகள்.

இனப்படுகொலை ஒன்றின் ஊடாகத் தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளைத் துடைத்தெறியவும், எதிர்காலத்தில் தமிழ் மக்களிடமிருந்து மட்டுமல்லாமல் ஏனைய சிறுபான்மை மக்களான முஸ்லிம் மற்றும் மலையக மக்களிடமிருந்தும் உரிமைகளுக்கான கோரிக் கைகளோ போராட்டங்களோ எழாதவாறு தடுக்கவுமாக சிங்கள பௌத்த பேரினவாத அரசு மேற்கொண்ட முயற்சியை வெற்றிகரமாகச் சாத்தியப்படுத்துவதென்றால் ஊடகங்களைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று அது கருதியது.

முதற்கட்டமாகத் தமிழர் தரப்பு நியாயங்களை எடுத்துரைக்க வல்லவர்களை அதுவும் சிங்கள மக்கள் மத்தியில் எடுத்துரைக்க முற்பட்டவர்களை அழித் தொழிப்பதில் ஈடுபட்டது. சிங்கள மற்றும் தமிழ் மக்களிடையே ஒரு சுமூகமான உறவுப் பாலம் ஏற்படுவது தமது அதிகாரத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடும் என அவர்கள் எண்ணினர். எனவே முதலில் அவ்வாறானவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டன.

அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் தலைவரான குமார் பொன்னம்பலம் (05.01.200), தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கம் (25.12.2005), அதன் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் செயற்பாட்டாளருமான நடராஜா ரவிராஜ் (10.11.2006), மற்றும் சிவனேசன் கிட்டினன் (06.03.2008), ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான தியாகராஜா மகேஸ்வரன் (01.01.2008) போன்றோர் இலக்கு வைக்கப்பட்டனர்.

இவ்வாறு ஒரு புறத்தில் தமிழர் தரப்பின் நியாயங்களை எடுத்துரைத்து வந்தவர்களும் களச் செயற்பாட்டாளர்களும் சுட்டுக் கொல்லப்பட்டு தமிழர் தரப்பின் குரல்கள் ஒடுக்கப்பட்டு வந்த அதேவேளை இந்த அடக்குமுறைகளை மக்களிடமும் சர்வ தேசத்திடமும் எடுத்துச்சென்ற ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் குறிவைக்கப்பட்டனர்.

தமிழ்நெற் ஆசிரியர் டி. சிவராமிலிருந்து சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க வரை இந்தப் படுகொலையானோர் பட்டியல் நீண்டு வருகிறது. இது தவிர அரச இராணுவத்தின் துணையுடன் செயற்படும் கொலைக்குழுக்களால் கடத்தப்பட்டுத் தாக்குதலுக்குள்ளானோரின் பட்டியல் இதனைவிட நீளமானது. இறுதியாகக் கடந்த ஜூன் 24ஆம் திகதி நீண்டகாலமாக வீரகேசரிப் பத்திரிகையில் பணி யாற்றிவந்தவரும் தற்போது சுதந்திரப் பத்திரிகை யாளராகப் பணிபுரிபவருமான கிருஷ்ணி இர்பாம் என்ற பெண் ஊடகவியலாளர் வெள்ளை வானில் வந்த ஆயுததாரிகளால் கொழும்பில் வைத்துக் கடத்தப்பட்டுக் கண்டிக்குக் கொண்டுசெல்லும் வழியில் விசாரணைக்குள்ளாக்கப்பட்ட பின்னர் கண்டியில் இறக்கிவிடப்பட்டிருக்கிறார். அதற்கு முன்னதாக உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் செயலாளரும் சுதந்திர ஊடக இயக்கத்தின் செயற்பாட்டாளருமான போத்தல ஜயந்த நுகெகொடையில் வைத்து வெள்ளை வானில் வந்த ஆயுததாரிகளால் கடத்தப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்ட பின்னர் தெருவோரம் வீசப்பட்டார். இது நடந்தது கடந்த ஜூன் முதலாம் திகதி.

மறுபுறத்தில் அவசரகால மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டங்களைப் பயன்படுத்தி ஊடகவியலாளர்களை ஒடுக்கும் நடைமுறைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. அவுட்றீச் இணையதளத்தைச் சேர்ந்த ஜே. எஸ். திஸநாயகம், வி. ஜசிகரன், அவரது துணைவியும் ஊடகவியலாளருமான வளர்மதி ஆகியோர் மார்ச் 06, 2008இலிருந்து ஒரு வருடத்திற்கும் மேலாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். நீதிக்கும் சமாதானத்திற்குமான தேசிய கிறிஸ்தவ அமைப்பின் செயலாளரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான சாந்த பெர்ணாண்டோ கூட்டம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக இந்தியாவுக்குச் செல்லும்போது மார்ச் 29ஆம் திகதி கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். இதேபோல் சந்திரசிறி பண்டார என்னும் சோதிடர் எதிர்வரும் செப்டம்பர் 9ஆம் திகதிக்குப் பின் இப்போது பிரதமராக இருப்பவரே ஜனாதிபதி ஆவார் எனத் தெரிவித்ததால் ஜூன் 26ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டபின் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அரசாங்கத்தை அல்லது அதன் படையினரை விமர்சிப்பவர்களைத் தேசத்தின் துரோகிகளாக இனங்காட்டிவிடும் நடவடிக்கையை அரசாங்கம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. ஏற்கெனவே போரில் விடுதலைப்புலிகள் முற்றாக அழிக்கப்பட்டதைக் கொண்டாடும்முகமாக நாடாளுமன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே இலங்கையில் சிறுபான்மையினர் என்று யாருமே இல்லை. இருப்பது தேசத்தை ஆதரிப்பவர்களும் தேசத்திற்கு எதிரானவர்களுமே என்று மிக வெளிப்படையாகவே பேசியிருந்தார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு எதிராக சண்டே லீடர் தொடுத்திருந்த வழக்கின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளைத் துரோகிகள் என்று குறிப்பிட்டுப் பாதுகாப்பு அமைச்சின் இணையதளம் ஜூலை பத்தாம் திகதி செய்தி வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் இந்த நடவடிக்கையைச் சட்டத் தரணிகள் சங்கம் வன்மையாகக் கண்டித்திருக்கிறது.

தற்போது ஊடகவியலாளர்கள் சுயகட்டுப்பாட்டை மேற்கொள்ளுமுகமாகத் தாமே உருவாக்கிச் செயற்படுத்தி வரும் இலங்கைப் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவை அகற்றி, பதிலாக இலங்கைப் பத்திரிகைப் பேரவையை நிறுவ முயல்கிறது அரசாங்கம். இது ஊடகவியலாளர்களை கிரிமினல் குற்றங்களின் கீழ் தண்டிப்பதற்கு அரசாங்கத்தால் எடுக்கப்படும் முயற்சி என்று கூறி ஊடக அமைப்புகள் அதை எதிர்த்துவருகின்றன.

இது தவிர ஊடக நிறுவனங்கள்மீது தாக்குதல் நடாத்தி அச்சுறுத்துவது, அது சாத்தியமற்ற பட்சத்தில் அவற்றை விலைகொடுத்து வாங்கிவிட முயல்வது அதுவும் சாத்தியமற்ற பட்சத்தில் அந்நிறுவனங்களுக்குப் பொறுப்பானவர்களைப் படுகொலை செய்வதனூடாக அந்நிறுவனங்களைச் செயலிழக்கச் செய்துவிடும் நடவடிக்கைகளிலும் அரசு ஈடுபட்டு வருகிறது.

யாழ்ப்பாணத்திலுள்ள உதயன் பணிமனையும் அதன் ஊடகவியலாளரும் பலமுறை தாக்குதலுக்குள்ளானார்கள். அதன் ஆசிரியர் வித்தியாதரன் கடத்தப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டார். இவற்றிற்கும் பின்னரும் கடந்த ஜூன் 25ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன், தினக்குரல், வலம்புரி ஆகிய மூன்று பத்திரிகைகளும் விநியோகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டபோது ஆயுததாரிகளால் வழிமறிக்கப்பட்டு அவை நடுரோட்டில் வைத்துத் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. உதயன் பத்திரிகையின் ஆசிரிய பீடப் பணியாளர்கள் சிலர் வருடக்கணக்கில் அலுவலகத்தை விட்டு வெளியேறாது அலுவலகத்திற்குள்ளேயே இருந்து பணியாற்றி வருகின்றனர்.

அரசாங்கத்தை விமர்சித்து வந்த சண்டே லீடர் பத்திரிகையை வாங்க முயன்றதற்கு இன்னொரு காரணம் ஏற்கெனவே அரசை விமர்சித்து வந்த நேசன் என்கிற ஆங்கிலப் பத்திரிகையை வாங்கியதில் கிட்டிய வெற்றிதான். நேசன் பத்திரிகைக்குப் பலமுறை பல்வேறு வகைகளில் அச்சுறுத்தல்களைக் கொடுத்தும் அது அரசாங்கத்தைத் தொடர்ந்து விமர்சித்து வந்ததால் அதன் பாதுகாப்புச் செய்தியாளரான கெய்த் நொயாரைக் கடத்தித் தாக்கி அச்சுறுத்தியது. அதுவும் சாத்தியமற்றுப் போக ஜனாதிபதியின் மைத்துனரான பிரசன்ன விக்ரமசூரிய ஊடாக நேசன் பத்திரிகையின் 51 சதவீதப் பங்குகளை வாங்கியதோடு அரசை விமர்சித்து வந்த ஆசிரிய பீடப் பணியாளர்களைத் தூக்கி வெளியில் வீசியது. அத்தோடு நேசன் அரச ஆதரவுப் பத்திரிகையாக மாறிற்று.

“அவ்வாறு பேரம் பேசுவது சாத்தியமற்றுப் போனதால், அதற்கு லசந்த விக்ரமசிங்க இணங்கிப் போகாததால்தான் அவர் தனது உயிரை இழக்க வேண்டியதாயிற்று” என்கிறார் ஒரு மூத்த ஊடகவியலாளர்.

ஏற்கெனவே தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை சிங்களர் மத்தியில் எடுத்துச் சொல்ல முயன்ற மௌபிம எனும் சிங்களப் பத்திரிகையையும் அதனது ஆங்கிலப் பத்திரிகையான சண்டேஸ்ரான்டர்ட்டையும் புலி ஆதரவுப் பத்திரிகை என்று குற்றம்சாட்டி அதன் நிதி நிர்வாகிகளைக் கைதுசெய்து சிறையிலடைத்து, வங்கிக் கணக்குகளை முடக்கிப் பத்திரிகையை மூடவைத்தது. ஆனால் இன்று வரை அதற்கும் புலிகளுக்குமான தொடர்பு என்னவென்று அரசாங்கம் நிறுவவில்லை. இவற்றோடு சேர்த்து யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ஈழநாடு பத்திரிகையையும் சேர்த்தால் (ஈழநாடுவின் முகாமையாளர் சின்னத்தம்பி சிவமகாராஜா 20.08.2006 இல் சுட்டுக் கொல்லப்பட்டதால் அது மூடப்பட்டது.) மூன்று பத்திரிகைகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவின் ஆட்சிக் காலத்தில் மூடப்பட்டுள்ளன.

ஏற்கெனவே இலங்கையில் தமிழ் நெற் பார்வையிடுவதற்குத் தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மும்மொழிகளிலும் வெளியாகும் லங்கா நியூஸ் வெப் இணையதளத்தையும் பார்ப்பதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. இவ்விணையதளத்திலேயே பிரபாகரனின் இளைய மகன் அடித்துக் கொல்லப்பட்டதான செய்தி புகைப்படத்துடன் வெளியாகி இருந்தது. அதேபோல் மெனிக் முகாமுக்கு விஜயம் செய்த ஜனாதிபதியின் மூத்த மகனுக்கு இடம்பெயர்ந்த மக்கள் சேறடித்தார்கள் என்ற செய்தியும் அதில் வெளியாகி இருந்தது. இச்செய்திகளே அது தடைசெய்யப்படக் காரணமாயிற்று என்று கருதப்படுகிறது.

போர் ஓய்ந்தாலும் ஊடகவியலாளருக்கு எதிரான போர் விரிவடைந்து வருவதால் நாட்டை விட்டு வெளியேறும் ஊடகவியலாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகச் சுட்டிக்காட்டியிருக்கிறது இலங்கையின் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் என்ற அமைப்பு. இலங்கையிலிருந்து வெளியேறி உலகெங்குமுள்ள பல்வேறு நாடுகளில் வாழும் ஊடகவியலாளர்களால் அண்மையில் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பு இலங்கையின் ஊடக நிலைமை குறித்து வெளியிட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறது.

மகிந்த ராஜபக்சேவின் ஆட்சிக் காலத்தில் 2004 ஏப்ரலில் இருந்து 2009 பெப்ரவரி வரை 33 ஊடகப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் மூன்று சிங்கள ஊடகவியலாளர்களையும் ஒரு முஸ்லிம் ஊடகவியலாளரையும் தவிர்த்துப் பார்த்தால் 29 சிறுபான்மையான தமிழ் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதை இனங்காணக்கூடியதாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள அவ்வமைப்பு கொல்லப்பட்ட ஊடகப் பணியாளர்களின் பெயர் விபரங்களையும் வெளியிட்டிருக்கிறது.

இது தவிர ஒஸ்ரியா 01, அவுஸ்ரேலியா 03, கனடா 03, டென்மார்க் 01, பிரான்ஸ் 12, ஜேர்மனி 04, இந்தியா 05, மலேசியா 01, நெதர்லாந்து 02, நேபாளம் 02, சுவிற்சர்லாந்து 16, லண்டன் 10, அமெரிக்கா 02 என ஏற்கெனவே ஐம்பதுக்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் அது சுட்டிக்காட்டியிருக்கிறது.

இலங்கை அரசாங்கத்தின் ஊடகங்களுக்கெதிரான இவ்வாறான நடவடிக்கைகள் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தையும் மக்களுடைய தகவல் அறியும் உரிமையையும் பாரியளவில் பாதிப்பதோடு ஊடகவியலாளர்கள் தங்களைத் தாங்களே சுயதணிக்கைக்கு உள்ளாக்கும்படி கடுமையாக நிர்ப்பந்திப்பதாக இருப்பதாக அது சுட்டிக்காட்டி அரசின் இவ்வாறான நடவடிக்கைகளைக் கடுமையாகக் கண்டித்துள்ளது.

போர் ஓய்ந்துவிட்டாலும் ஊடகங்களுக்கெதிரான போர் இன்னும் ஓய்ந்துவிடவில்லை. அது பல்வேறு தளத்திலும் களத்திலும் அச்சம் தரும் வகையில் விரிவடைந்து செல்வதையே அவதானிக்கக்கூடிய தாயிருக்கிறது.

ஊடகவியலாளரைத் தானே கொன்றதாகக் கூறும் அமைச்சரும், அவர்மீது எந்த நடவடிக்கையையும் எடுக்காது பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் மீதே திரும்பவும் பாயும் நீதித்துறையும் உள்ள தேசமாக இது ஆகிவிட்டிருக்கிறது.

பேய்களின் ஆட்சியில் பிணம் தின்னும் சாத்திரங்களை!

சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் அரசியலாளர்

அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் தலைவராகவும், சட்டத்தரணியாகவும் இருந்த குமார் பொன்னம்பலம் தமிழர் தரப்பு நியாயங்களை எடுத்துரைத்து வந்தவராக இருந்தார். மூன்று மொழிகளிலும் ஆற்றல் மிக்கவராக இருந்த இவர் சிங்கள மற்றும் ஆங்கிலத் தொலைக்காட்சி அலைவரிசைகளில் நடைபெறும் தமிழர் பிரச்சினை தொடர்பான விவாதங்களில் தொடர்ச்சியாகக் கலந்துகொண்டு தமிழ் மக்கள் சிங்கள அரசுகளால் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருவதை அம்பலமாக்கி வந்தார். பின்னர் சுட்டுக் கொல்லபட்ட சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் நெருங்கிய நண்பரான இவர் சண்டே லீடரிலும் எழுதிவந்தார். கொழும்பு வெள்ளவத்தையில் பட்டப்பகலில் காரில் வைத்துச் (05ஜனவரி, 2000) சுட்டுக் கொல்லப்பட்டார்.

  

இதேபோன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக் களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கமும் சுட்டுக் கொல்லப்பட்டார். நீண்டகாலமாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துவந்த இவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை அரச படையினரால் மேற்கொள்ளப்பட்ட கொக்கட்டிச் சோலை, மைலந்தனை, படுவான்கரைப் படுகொலைகள் உட்பட பல்வேறு படுகொலைச் சம்பவங்களும் சர்வதேசத்தின் கவனத்தைப் பெற முன்னின்று செயற்பட்டவர். அப்படு கொலைகள் தொடர்பாக நீதி விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும் என மனித உரிமை அமைப்புகளோடு இணைந்து அழுத்தம் கொடுத்தவர். 24 டிசம்பர் 2004 கிறிஸ்மஸ் தினத் தன்று இரவு மட்டக்களப்பு சென் மேரிஸ் தேவாலயத்தில் இடம்பெற்ற கிறிஸ்மஸ் ஆராதனைகளில் கலந்துகொண்டிருந்த போது தேவாலயத்தில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ் அதற்கு முன்னர் யாழ். முலீநகர சபையின் மேயராகவும் இருந்தவர். அது மட்டுமல்லாமல் ஒரு சமூகச் செயற்பாட்டாளராகவும் விளங்கியவர். குமார் பொன்னம்பலம் போன்று மும்மொழி களையும் சரளமாகப் பேசக்கூடிய இவர் தொலைக்காட்சி மற்றும் வானொலி விவாதங்களில் கலந்துகொண்டு தமிழர் தரப்பு நியாயங்களை முன்வைத்ததோடு தென்னிலங்கையில் தமிழர் உரிமைகளுக்காகப் பணியாற்றிய தென்னிலங்கை அமைப்புகள், மனித உரிமை நிறுவனங்களோடு சேர்ந்து செயற்பட்டு வந்தவர். தென்னிலங்கையில் சமஸ்டிக்காக வேண்டி சிங்கள மக்கள் மத்தியில் பிரச்சாரப் பணிகளை முன்னெடுத்த அமைப்புகளோடு இணைந்து பிரச்சாரப் பணிகளையும் மேற்கொண்டு வந்தவர். இந்தப் பிரச்சாரங்கள் தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும் என்ற அழுத்தத்தை ஏற்படுத்தி வந்தன. இதனால் அரசு இவ்வாறான பிரச்சார நடவடிக்கைகளின் போது தனது குண்டர்களைப் பாவித்தும், ஜாதிக ஹெல உருமய என்கிற அமைப்பினூடாகவும் அதற்கெதிரான தாக்குதல்களைப் பலமுறை மேற்கொண்டு வந்தது. விளைவாக சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களுடைய பிரச்சினையை அரசியல்ரீதியாக அணுக வேண்டுமென்ற கருத்தை எடுத்துச் செல்ல முடியாத சூழ்நிலைக்கு இச்செயற்பாட்டாளர்கள் தள்ளப்பட்டார்கள். அந்தப் பிரச்சார நடவடிக்கைகளை முற்றாகவே நிறுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டது தான் நடராஜா ரவிராஜின் படுகொலை. 2006 நவம்பர் 10 ஆம் திகதி நாரஹேன்பிட்டி என்னுமிடத்தில் அவர் தனது வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

தியாகராஜா மகேஸ்வரனும் சிங்கள மொழியில் நடைபெறும் தொலைக்காட்சி மற்றும் வானொலி விவாதங்களில் கலந்துகொண்டு தமிழ் மக்களுடைய பிரச்சினையை எடுத்துப் பேசி வந்தவர். 2008 ஜனவரி முதலாம் திகதி கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் கோவில் வாசலில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள்

(ஏப்ரல் 2004இல் இருந்து 2009 பெப்ரவரி வரை)

2004:

1. அய்யாத்துரை நடேசன் ஊடகவியலாளர், மே 31

2. கந்தசாமி ஐயர் பாலநடராஜ், எழுத்தாளர், ஓகஸ்ட் 16

3. லங்கா ஜயசுந்தர, புகைப்படத்துறை ஊடகவியலாளர், டிசம்பர் 11

2005:

4. தர்மரட்ணம் சிவராம், ஆசிரியர், ஏப்ரல் 28

5. கண்ணமுத்து அரசகுமார், ஊடகப் பணியாளர், ஜூன் 29

6. ரேலங்கி செல்வராஜா, ஊடகவியலாளர், ஓகஸ்ட் 12

7. டீ. செல்வரட்ணம், ஊடகப் பணியாளர், ஓகஸ்ட் 29

8. யோககுமார் கிருஷ்ண பிள்ளை, ஊடகப் பணியாளர், செப்ரம்பர் 30

9. எல்.எம். பளீல் (நற்பிட்டிமுனை பளீல்) எழுத்தாளர், டிசம்பர் 02

10. கே. நவரட்ணம், ஊடகப் பணியாளர், டிசம்பர் 22

2006:

11. சுப்ரமணியம் சுகிர்தராஜன், ஊடகவியலாளர், ஜனவரி 24

12. எஸ். ரி. கணநாதன், உரிமையாளர், பெப்ரவரி 01

13. பஸ்றின் ஜோர்ஜ் சகாயதாஸ், ஊடகப் பணியாளர் மே 03

14. ராஜரட்ணம் ரஞ்சித்குமார், ஊடகப்பணியாளர் மே 03

15. சம்பத் லக்மால் டி சில்வா, ஊடகவியலாளர், ஜுலை 02

16. மரியதாசன் மனோஜன்ராஜ், ஊடகப் பணியாளர், ஓகஸ்ட் 01

17. பத்மநாதன் விஸ்வானந்தன், பாடகர், இசையமைப்பாளர், ஓகஸ்ட் 02

18. சதாசிவம் பாஸ்கரன், ஊடகப் பணியாளர், ஓகஸ்ட் 15

19. சின்னத்தம்பி சிவமகாராஜா, ஊடக உரிமையாளர், ஓகஸ்ட் 20

2007:

20. எஸ். ரவீந்திரன், ஊடகப் பணியாளர், பெப்ரவரி 12, 2007

21. சுப்ரமணியம் இராமச்சந்திரன், ஊடகப் பணியாளர், பெப்ரவரி 15

22. சந்திரபோஸ் சுதாகர், ஊடகப் பணியாளர், ஏப்ரல் 16

23. செல்வராஜா ரஜீவ்வர்மன், ஊடகவியாளர், ஏப்ரல் 29

24. சகாதேவன் நிலக்ஸன், ஊடகவியலாளர் ஓகஸ்ட் 01

25. அந்தோனிப்பிள்ளை செரின் சித்தராஞ்சன், ஊடகவியாளர், நவம்பர் 05

26. வடிவேல் நிமலராஜ், ஊடகப் பணியாளர், நவம்பர் 17

27. இசைவிழி செம்பியன் (சுபாஜினி), ஊடகப் பணியாளர், நவம்பர் 27

28. சுரேஷ் லிம்பியோ, ஊடகப் பணியாளர், நவம்பர் 27

29. ரி.தர்மலிங்கம், ஊடகப் பணியாளர், நவம்பர் 27

2008:

30. பரநிருபசிங்கம் தேவகுமார், ஊடகவியலாளர், மே 28

31. றஷ்மி முஹமட், ஊடகவியலாளர், ஒக்ரோபர் 06

2009:

32. லசந்த விக்ரமதுங்க, ஆசிரியர், ஜனவரி 08

33. புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி, ஊடகவியலாளர், பெப்ரவரி 12

34. சசி மதன், ஊடகப் பணியளார், மார்ச் 06, 2009

பாதுகாப்பு வலயத்துள் தமிழ்நெற்றின் இரண்டு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள்

தமிழ்நெற் ஆசிரியரும் சண்டே ரைம்ஸ் உட்படப் பல ஆங்கில இதழ்களில் தராகி என்ற பெயரில் எழுதிவந்தவருமான டி. சிவராம் 28 ஏப்ரல் 2005 இரவு கடத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் சர்வதேசரீதியாக நடைபெற்ற பல மாநாடுகளிலும் கருத்தரங்குகளிலும் இலங்கையில் தமிழ் மக்கள்மீது மேற்கொள்ளப்பட்டு வரும் ஒடுக்குமுறைகள் தொடர்பாக எடுத்துக் கூறி வந்தவர். அது மட்டுமல்லாமல் சிங்கள மக்கள் தொடர்பான பிரச்சினைகளையும் அவர் எடுத்தாண்டது அவர் இலக்கு வைக்கப்பட்டதற்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. பாட்டா தொழிற்சாலையில் தொழிலாளர்கள் நடாத்திய போராட்டத்தின்போது பொலிஸார் தொழிலாளர் மீது தாக்குதல் நடாத்தியதையும் ரெயில்வே தொழிலாளர்களின் போராட்டத்தையும் அவர் உரிய முக்கியத்துவத்துடன் வெளிப்படுத்தினார். இவ்விரு போராட்டங்களும் பெருமளவில் சிங்களத் தொழிலாளர்கள் உள்ள தொழிற்சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள்.

இலங்கையை விட்டு வெளியேறிய ஊடகவியலாளர்கள்

Sunantha Desapriyaசுனந்த தேசப்ரிய (ஊடகவியலாளர்): முன்னர் சிங்கள மொழியில் வெளியான மாற்றுப் பத்திரிகையான யுக்தியவின் ஆசிரியராக இருந்த இவர் சுதந்திர ஊடக இயக்கத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவராவார். பின்னர் பலய என்ற சஞ்சிகை யின் ஆசிரியராக இருந்தவர். ஊடகச் செயற்பாட் டாளரும் கூட. இலங்கை ஊடகவியல் கல்லூரி, இலங்கைப் பத்திரிகைப் பேரவை போன்றவற்றின் தோற்றத்திற்கும் ஊடகவியலாளர்களுக்கான ஊடக ஒழுக்கக் கோவையின் உருவாக்கத்திற்கும் ஊடக அமைப்புகளின் கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கும் உழைத்தவர். ஊடக சுதந்திரத்திற்காகப் பல தளங்களில் பணியாற்றியவர். அச்சுறுத்தல் காரணமாக ஐரோப்பாவிற்குப் புலம்பெயர்ந்துள்ளார்.

Sanath Balasuriyaசனத் பாலசூரிய (தலைவர், உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம்): ஊடகவியலாளராகவும் ஊடகச் செயற்பாட்டாளராகவும் பணியாற்றி வந்தவர். கொல்லப்படுபவர்களின் பட்டியலில் இவருடைய பெயரும் இருந்ததால் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். அமைச்சர் மோர்வின் சில்வாவும் அவரது போதை வஸ்து கடத்தல் கூட்டாளிகளும் அரச தொலைக்காட்சி நிறுவனமான ரூபவாஹினிக்குள் புகுந்து மேற் கொண்ட அட்டகாசத்தை அடுத்து அங்கு உரையாற்றிய இவர் அமைச்சர் ரூபவாஹினி பணியாளர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கோரியிருந்தார். இதனையடுத்து இவர்மீதான அச்சுறுத்தல் அதிகரித்தது. தன்மீதான அச்சுறுத்தல் குறித்து இவர் பொலிஸாரிடம் முறையிட்டிருந்தபோதும் பொலிஸார் இதுவரை எவ்வித விசாரணைகளையும் மேற்கொள்ளவில்லை. அரச தொலைக்காட்சி நிறுவனம் தாக்கப்பட்டதை அடுத்தும் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையை அடுத்தும் உயிரைப் பாதுகாக்கும் பொருட்டு நாட்டைவிட்டு வெளியேறித் தற்போது ஐரோப்பிய நாடொன்றில் வாழ்ந்து வருகிறார்.

சிவகுமார் (ஆசிரியர் சரிநிகர்): 1990இல் இருந்து வெளிவந்த மாற்றுப் பத்திரிகையான சரிநிகர் மற்றும் நிகரி பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்தவர். சுதந்திர ஊடக இயக்கத் தின் பேச்சாளராக இருந்த இவர், அதன் ஆரம்பகால உறுப்பினருமாவார். இலங்கைத் தமிழ் ஊடக வியலாளர் ஒன்றியம் ஆரம்பிப்பதற்கு மூலகர்த்தாவாக இருந்தவர்களுள் ஒருவர். மார்ச் 08, 2008இல் பயங்கர வாதத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்குள்ளாக்கப் பட்ட இவர் பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸாரின் அச்சுறுத்தல் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறி யுள்ளார். இவர் கைதாவதற்கு முன்னர் மார்ச் 06ஆம் திதகி கைதான ஜசிதரன், வளர்மதி மற்றும் மார்ச்; 07ஆம் திகதி கைதான திஸநாயகம் ஆகியோர் ஒரு வருடத்திற்கும் மேலாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

Radhika Devakumarராதிகா தேவகுமார்: இன்ரநியூஸில் பணியாற்றி வந்தார். செப்ரம்பர் 08, 2008 அன்று மாலை அவரது வீட்டு வாசலில் வைத்து இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் அவர் மேல் துப்பாக்கிச்சூட்டை நடாத்தினர். பலத்த காயங்களுக்குள்ளான அவர் நீண்டநாள் சிகிச்சைக்கு ஆளாக வேண்டி இருந்தது. 2007ஆம் ஆண்டு சகிப்புத்தன்மை மற்றும் பொதுமக்கள் சேவை ஊடகவியலுக்கான விருதை இவர் பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அநுருத்த லொக்குஹப்பு ஆராய்ச்சி (றொய்ட்டர்ஸ்): றொய்ட்டர்ஸ் இன் புகைப்படப் பிடிப்பாளராகப் பணியாற்றி வந்தவர். வடக்கு கிழக்கு யுத்தப் பிரதேசங்கள் எங்கணும் சென்று புகைப்படங்கள் எடுத்து வந்தவர். இவர் எடுத்த பல புகைப்படங்கள் காரணமாகப் பாதுகாப்புப் படையினரால் பலமுறை விசாரணைக்குள்ளானவர். தொடர்ந்து அச்சுறுத்தலுக்குள்ளானவர். அவருடைய துணைவியார் பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்டவர். லசந்தவின் படுகொலையோடு நாட்டில் மாற்றுக் கருத்துகளுக்குத் துளியும் இடமில்லை என்பதால் நாட்டை விட்டுக் குடும்பத்தோடு வெளியேறியதாகச் சொல்கிறார்.

Namal Pereraநாமல் பெரேரா: ரிஎன்எல் என்னும் தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியராக முன்னர் கடமையாற்றியவர். பின்னர் இலங்கைப் பத்திரிகைப் பேரவையில் பணியாற்றி வந்தவர். ஒரு ஊடகச் செயற்பாட்டாளரும் கூட, இவரும் பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தில் பணியாற்றும் இவருடைய நண்பரும் வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது வாகனம் மறிக்கப்பட்டு வெளியே இழுக்கப்பட்டு தாக்குதலுக்குள்ளானார். தற்போது அவர் நாட்டில் இல்லை.

 

Keith-noyarகெய்த் நொயார் (துணையாசிரியர்): நேசன் எனும் ஆங்கிலப் பத்திரிகையின் துணையாசிரியர். 2008 மே 22ஆம் திகதி இவர் கடத்தப்பட்டுத் தாக்குதலுக்குள்னானதை அடுத்து அவுஸ்ரேலியாவுக்குக் குடும்பத்துடன் குடிபெயர்ந்துள்ளார்.

Uvindu Kurukulasuriyaஉவிந்து குருகுலசூரிய (ஊடகவியலாளர்): ஊடகவியலாளராகவும் ஊடகச் செயற்பாட்டாளராகவும் பணியாற்றி வந்தவர். சுதந்திர ஊடக இயக்கத்தின் இணைப்பாளராகச் செயற்பட்டு வந்தவர். அச்சுறுத்தல் காரணமாக லண்டனுக்குப் புலம்பெயர்ந்துள்ளார்.

 

Sonali Samarasingeசொனாலி சமரசிங்க (சண்டே லீடர்): மோர்ணிங் லீடர் பத்திரிகையின் ஆசிரியரும் சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் துணைவியுமான சொனாலி சமரசிங்க லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையை அடுத்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

Iqbal Athasஇக்பால் அத்தாஸ் (சண்டே ரைம்ஸ்): இக்பால் அத்தாஸ் சண்டே ரைம்ஸில் நீண்ட காலமாக சிற்றிவேசன் றிப்போர்ட் என்னும் பாதுகாப்புப் பத்தியை எழுதிவந்தவர். ஜேன்ஸ் டிபென்ஸ் வீக்லி உட்பட பல்வேறு இதழ்களின் செய்தியாளராகவும் பணிபுரிந்து வந்தவர். பல்வேறு தடவைகள் இவரது எழுத்துக்கள் காரணமாக அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டவர். அரசாங்கத்தாலும் அதன் பாதுகாப்புப் படையினரின் இணையதளத்தாலும் பயங்கரவாதி என வர்ணிக்கப்பட்டவர். அச்சுறுத்தல் காரணமாக ஏறத்தாழ ஒரு வருடகாலமாக இவர் எழுதுவதை நிறுத்திவிட்டார். தற்போது நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

Nadarajah kuruparanநடராஜா குருபரன்: சூரியன் எப்.எம் செய்தி முகாமையாளரான இவர் தனது வாகனத்தில் 28. ஓகஸ்ட், 2006 அன்று அதிகாலை பணிக்குப் புறப்பட்டபோது இனம் தெரியாதவர்களால் வெள்ளை வானில் கடத்தப்பட்டார். பின்னர் பல்வேறு தரப்பினரின் அழுத்தம் காரணமாக மறுநாள் அதிகாலை விடுவிக்கப்பட்டார். உயிரச்சம் கருதி நாட்டைவிட்டுப் புலம்பெயர்ந்து லண்டனில் வாழ்ந்து வருகிறார்.

Upali Thenakoonஉபாலி தென்னக்கோன் (றிவிர ஆசிரியர்): உபாலி; தென்னக்கோன் மீதான தாக்குதலைத் தொடர்ந்து அவர் தனது குடும்பத்தினருடன் ஐக்கிய அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்துவிட்டார்.

சுனேத்ரா அத்துகல்புர மற்றும் சசிகுமார்: சுனேத்ரா அத்துகல்புர லக்பிம என்ற சிங்களப் பத்திரிகையில் பணியாற்றி வந்தார். அவரது கணவர் சசிகுமார் எம்.ரி.வி தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தார். 2008ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் வீட்டில் இல்லாத சமயம் இவர்களுடைய வீடு இனம் தெரியாதவர்களால் தேடுதலுக்குள்ளானது. அதனையடுத்து அவர்கள் அச்சம் காரணமாக ஐரோப்பாவுக்குப் புலம்பெயர்ந்துவிட்டனர்.

IMG_1853 (1)சக்திவேல்பிள்ளை பிரகாஸ்(இரணியன்)  இவர் சுதந்திர ஊடகவியளாலர் மட்டுமல்லாது சர்வதேச சிறந்த படப்பிடிப்பாளரும் ஆவார் 1996 காலப்பகுதியில் தினக்கதிர் பத்திரிகையின் செய்தியாளராகவும்கடமை ஆற்றினார். பின்னர் 2000 அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடு சென்று மீண்டும் 2003 ஆண்டு இலங்கை வந்தார் 2005 ஆண்டு கருணாகுழூவால் கடத்தப்பட்டு 2 மாதங்களின் பின் விடுதலை செய்யப்பட்டார் பின்னர் 2005-2009 காலப்பகுதியில் மாத்திரம் 3தடவைகள் கடத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டார் 15-01-2009 அன்று வெளிநாட்டிற்கு செல்லும் போது இலங்கை சர்வதேச கட்டுனாயக்கா விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்;

கெமுனு அமரசிங்க (அசோசியட்டட் பிரெஸ்): அசோசியட்டட் பிரெஸ் புகைப்படப்பிடிப்பாள ரான கெமுனு அமரசிங்க அச்சுறுத்தல் காரணமாக நாட்டைவிட்டுப் புலம்பெயர்ந்துள்ளார்.

Manchula Wediwardanaமஞ்சுள வெடிவர்த்தன (எழுத்தாளர்): மஞ்சுள வெடிவர்த்தன ஊடகவியலாளர், எழுத்தாளர், ஊடகச் செயற்பாட்டாளர் எனப் பல பரிமாணம் கொண்டவர். இவருடைய சிறுகதைத் தொகுதி ஒன்று முன்னர் அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டது. தொடர்ச்சி யான அச்சுறுத்தல் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். தமிழ் மக்களுடைய பிரச்சினையைச் சிங்கள மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வதில் பெரும் பணியாற்றியவர்.

அத்துல விதானகே (ஊடகச் செயற்பாட்டாளர்): ஊடகவியலாளராகவும், ஊடகச் செயற்பாட்டாள ராகவும் பணியாற்றி வந்தவர். அச்சுறுத்தல் காரண மாக இவரும் நாட்டைவிட்டுப் புலம் பெயர்ந்துள்ளார்.

வீரகேசரிப் பத்திரிகையின் மட்டக்களப்பு செய்தியாளர் அய்யாத்துரை நடேசன் 31 மே, 2004இல் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த அச்சம் காரணமாக மட்டக்களப்பின் தினகரன் செய்தியாளரான இராதுரைரட்ணம், தினக்குரல் பத்தியாளரான நிராஜ் டேவிட், மற்றும் சண் தவராஜா, வேதநாயகம், சந்திரப்பிரகாஷ் ஆகியோர் நாட்டைவிட்டு வெளியேறித் தற்போது சுவிற்சர்லாந்தில் உள்ளனர்.

ராஜ்குமார்: சக்தி தொலைக்காட்சியில் பணியாற்றிய ராஜ்குமார் தற்போது அச்சுறுத்தல் காரணமாகப் புலம்பெயர்ந்து லண்டனில் உள்ளார்.

Jeeveendranஜீவேந்திரன்: யங் ஏசியா ரெலிவிச னில் பணியாற்றிய ஜீவேந்திரன் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளான மனித உரிமைகள், ஆட்கள் காணாமல் போதல், சிறு பான்மையினர் உரிமைகள் என்பன தொடர்பாக விழிப்பு எனும் நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கி வந்தவர். தொடர் அச்சுறுத்தல் காரணமாக அவர் நாட்டைவிட்டு வெளியேறிய தோடு அந்நிகழ்ச்சி தடைபட்டது. தற்போது சுவிற்சர்லாந்தில் உள்ளார்.

கனகரட்ணம் ரவீந்திரன்: கனகரவி என அறியப்பட்ட இவர் வீரகேசரி, தினக்குரல் உட்படப் பல்வேறு பத்திரிகைகளுக்கும் வவுனியாவிலிருந்து செய்தி யாளராகப் பணியாற்றியவர். வவுனியா மற்றும் வன்னிப் பிரதேசங்களில் இருந்து வெளியே தெரியவராத பல்வேறு செய்திகளையும் தகவல்களையும் வெளிப்படுத்தியவர். தொடர்ந்த அச்சுறுத்தல் காரணமாக நாட்டிற்குள்ளே பல்வேறு இடங்களில் மறைந்து வாழ்ந்த இவர் தற்போது நாட்டைவிட்டு வெளியேறி சுவிற்சர்லாந்தில் வாழ்ந்து வருகிறார்.

சிவபாலன் : தினக்குரல் பத்திரிகையின் யாழ்ப்பாணப் பதிப்பில் செய்தியாளராகவும் புகைப்படப் பிடிப் பாளராகவும் பணியாற்றிய இவர் இராணுவத்தால் தாக்குதலுக்குள்ளானவர். தற்போது அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி பிரான்ஸில் வாழ்ந்து வருகின்றார்.

 

தில்லையம்மா: மட்டக்களப்பு தினக்கதிர் மற்றும் சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் ஆகியவற்றில் பணியாற்றியவர். தற்போது நாட்டைவிட்டு வெளியேறி சுவிற்சர்லாந்தில் வாழ்ந்து வருகிறார்.

Munusamy Parameshwariமுனுசாமி பரமேஸ்வரி: மௌபிம எனும் வாராந்த சிங்களப் பத்திரிகையில் பணியாற்றியவர். தமிழ் மக்கள் எதிர்நோக்கும் இன்னல்கள் தொடர் பான பல்வேறு விடயங்களை வெளி யிட்டு வந்த அப்பத்திரிகையையும் அதன் ஆங்கிலப் பதிப்பான சண்டே ஸ்ரான்டர்ட் டையும் முடக்க நினைத்த அரசாங்கம் விடுதலைப் புலிகளின் பெண்கரும்புலி உறுப்பினரோடு தொடர்பு கொண்டிருந்தார் என்று கூறிக் கைதுசெய்தது. அதைத் தொடர்ந்து அதன் கணக்காளரையும் கைதுசெய்ததோடு அதன் வங்கிக் கணக்குகளையும் முடக்கியது. இதன் காரணமாகப் பத்திரிகை நிறுத்தப்பட்டது. நீண்ட நாட்கள் எவ்விதக் குற்றச்சாட்டுகளும் இன்றித் தடுத்துவைக்கப்பட்டிருந்த பரமேஸ்வரி குற்றச்சாட்டுகள் எதுவுமின்றியே விடுவிக்கப்பட்டார். பின்னரும் ஒரு நாள் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டு விடுதலையானார். தொடர் அச்சுறுத்தல் காரணமாக மன அழுத்தத்திற்குள்ளான அவர் நாட்டைவிட்டு வெளியேறி ஐரோப்பிய நாடொன்றில் உள்ளார்.

SHARE