மட்டக்களப்பில் 9 வயது சிறுமி படுகொலை

476
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஞ்சந்தொடுவாயில் 9 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று பிற்பகல் சுமார் 4.45 அளவில் இடம்பெற்றுள்ளது.

மஞ்சந்தொடுவாய் – ஜின்னா வீதியைச் சேர்ந்த, எம்.ஆர்.சஹாப்தீன் பாத்திமா சீமா என்ற சிறுமியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருதாவது,

மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் குறித்த சிறுமி, அயலவர் ஒருவரினால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு, பையொன்றினால் கட்டப்பட்ட நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் வழியிலேயே சிறுமி உயிரிழந்துள்ளார்.

மேலும் சிறுமியை துஸ்பிரயோகம் செய்ததாக சந்தேகிக்கப்படும் நபரின் சகோதரியின் வீட்டிலிருந்தே குறித்த சிறுமி உணர்விழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பிரதேசத்தில் மழை பெய்த போது, சிறுமியின் வீட்டுக்கு வந்த குறித்த அயலவருக்கு சிறுமியின் தாய் குடையொன்றை கொடுத்ததுடன், குடையை வாங்கி வருமாறு கூறி சிறுமியையும் அனுப்பியுள்ளார்.

எனினும் நீண்ட நேரமாக சிறுமி வீட்டுக்கு வராததையடுத்து, சிறுமியின் குடும்பத்தினரும் அயலவர்களும் சிறுமியை தேடியுள்ளனர்.

நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் பை ஒன்றினால் கட்டப்பட்ட நிலையில் சிறுமி மீட்கப்பட்டுள்ளார்.

சிறுமி உயிரிழந்த நிலையிலேயே வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் சிறுமியின் மரணம் தொடர்பாக பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் எம்.எஸ்.இப்றாலெவ்வை தெரிவித்தார்.

சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதுடன் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

சிறுமியைக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை இன்று அதிகாலை செங்கலடி- பதுளை வீதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் காத்தான்குடியை பிறப்பிடமாக கொண்டவர் என்றும் மூன்று பிள்ளைகளின் தந்தையெனவும் காத்தான்குடி பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

 

SHARE