ARTICLE
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு மேற்கொள்ளவுள்ள விசாரணைகள் மூலம்- உண்மைகளைக் கண்டறிவதற்கு இலங்கை அரசு ஒத்துழைக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பாகவும்- தமிழ் மக்களின் சார்பாகவும் தான் இந்த கோரிக்கையை அரசிடம் முன்வைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த சம்பந்தன்- கடந்த மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக ஐ.நா. விசாரணையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அன்றிலிருந்தே மேற்படி விசாரணைக்கு ஒத்துழைக்கமாட்டோம் என்று இலங்கை அரசு பகிரங்கமாகத் கூறிவருவதாகவும் கூறினார்.
போர் நிறைவுக்கு வந்து ஐந்து வருடங்கள் கடந்துள்ள நிலையில்- நம்பகரமான சுதந்திரமான ஒரு சுயாதீன விசாரணையை உள்நாட்டில் நடத்தியிருந்தால் இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டிருக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஐ.நா. குழுவின் விசாரணைக்கு ஒத்துழைக்கமாட்டோம் என்று இலங்கை அரசு சவால் விட முடியாது என்பதுடன் அதிலிருந்து தப்பவும் முடியாது என சுட்டிக்காட்டிய சம்பந்தன்- ஐ.நா. கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்தியே ஆக வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
வன்னியில் இறுதிகட்டப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது- மனிதாபிமான நடவடிக்கைகளிலேயே ஈடுபடுகின்றோம் என இலங்கை அரசு- சர்வதேச சமூகத்திற்கு கூறி ஏமாற்றி வந்ததுடன் தற்போதும் அதனையே தொடர்ந்தும் கூறிவருவதாகவும் தெரிவித்தார்.
உண்மையில் இலங்கை அரசு மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தால் ஐ.நா. விசாரணைக்கு முகம்கொடுக்கப் பின்னடிப்பது ஏன்? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
எனவே ஐ.நா. விசாரணை மூலம் உண்மையைக் கண்டறிவதற்கு இலங்கை அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலும் தமிழ் மக்கள் சார்பிலும் வேண்டிக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை ஏற்கனவே இது குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை- உண்மையைக் கண்டறியும் செயன்முறையுடன் ஒத்துழைக்க வழங்கப்பட்டுள்ள வாய்ப்பை இலங்கை அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கோரியிருந்தார். இவருடைய கருத்தை ஆமோதித்து பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் இவ்வாறே கோரிக்கை விடுத்துள்ளன.
எனினும் ஐ.நாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க- ஐ.நா விசாரணைக் குழுவுக்கு இலங்கை ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்காது எனக்குறிப்பிட்டு இருந்தார். அத்துடன் இலங்கைப் பாராளுமன்றத்திலும் இது குறித்து விவாதமொன்றிற்காக பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு எதிர்வரும் 17 ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
இவ்வாறான ஒரு சூழ்நிலையிலேயே ஐ.நா விசாரணைக் குழு மற்றும் அதன் விளைவுகள் குறித்து தமது நிலைப்பாட்டினைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெளிவுபடுத்தி உள்ளார்.