மன்னாரில் வெங்காய வெடி வெடித்தும்,கடல் உயிரி தாக்கியும் இருவர் பலி.

608
மன்னார் மாவட்டத்தின் தச்சனா மருதமடு பகுதியில் நேற்று மாலை வெங்காய வெடி வெடித்ததால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் ஒரு பிள்ளையின் தந்தையான 31 வயதுடைய தோமஸ் ஸ்ரீபன் என்பவராவார்.

இவர் விலங்கு வேட்டைக்காக வீட்டில் வெங்காய வெடி தயாரித்துக் கொண்டிருக்கும் போது தவறுதலாக வெடியொன்று வெடித்ததனால் இவர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளார்

படுகாயமடைந்த இவரை முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கடல் உயிரி தாக்கி ஒருவர் உயிரிழப்பு

மன்னார் பனகொட்டுப் பகுதியில் மீனவர் ஒருவர் கடல் வாழ் உயிரினம் ஒன்றின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

28 வயதான ராஜ்குரூஸ் வெலிங்டன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்றுப் புதன்கிழமை காலை மன்னார் பனங்கட்டுக்கொட்டை சேர்ந்த ஜந்து மீனவர்கள் கடற்றொழிலுக்கு சென்றுள்ளனர். இவர்களில் இருவர் கடலில் இறங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது சொறி என மீனவர்களால் அழைக்கப்படும் ஒருவகை கடல் வாழ் உயிரினம் குறித்த இரண்டு மீனவர்களையும் கடித்துள்ளது.

இதனால் உடல் அரிப்புக்கு உள்ளான மீனவர்கள் உடனே படகில் ஏறி கரைசேர்ந்தனர்.

இவர்களில் ஒருவர் கடலுக்குள்ளேயே மயக்கமடைந்துள்ளார்.

பின்னர் இருவரும் எருக்கலம்பிட்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். எனினும் ஒருவர் கடலுக்குள்ளேயே உயிரிழந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

மற்றையவர் மேலதிக சிகிச்சைக்காக மன்னார் பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

SHARE