மலேசியாவில் விடுதலைப்புலி தலைவர்களை கைது செய்ய நடவடிக்கை

458
இலங்கையில் ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான இறுதி கட்ட போர் கடந்த 2008–ம் ஆண்டு நடந்தது. அதை தொடர்ந்து விடு தலைப்புலிகள் தலைவர்களும், இலங்கை தமிழர்களும், அங்கிருந்து புலம் பெயர்ந்து பல்வேறு நாடுகளில் தங்கியுள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்தபடியே நாடு கடந்த தமிழீழம் அரசாங்கத்தை அமைத்துள்ளனர். இதனால் அச்சம் அடைந்துள்ள இலங்கை அரசு விடுதலைப்புலிகளை கைது செய்து தங்களிடம் ஒப்படைக்கும்படி உலக நாடுகளை வலியுறுத்தி வருகிறது.

மலேசியாவில் இலங்கை தமிழர்களும், விடுதலைப் புலிகளும் அதிக அளவில் தங்கியுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு அங்கு தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி விடுதலைப் புலிகள் 3 பேரை மலேசிய அரசு கைது செய்து இலங்கை அரசிடம் ஒப்படைத்தது.

அது போன்று மேலும் 10 விடுதலைப்புலி தலைவர்களை கைது செய்ய மலேசியா அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அவர்களில் ஜெயா என்கிற ஜெயலட்சுமி கோவிந்தன், பொன்குளி வீரமன், கரிகாலன் என்கிற சிவலிங்கம் சரவணன், பெருமாள் சின்னத்தம்பி உள்ளிட்டோர் அடங்குவர்.

இவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடங்கி விட்டன. இந்த தகவலை இலங்கையில் இருந்து வெளிவரும் ஒரு சிங்கள பத்திரிகை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே இவர்களை கைது செய்தால் இலங்கையிடம் ஒப்படைக்க கூடாது என வலியுறுத்தி மலேசியா போலீஸ் நிலையம் முன்பு மனித உரிமை ஆர்வலர்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.

SHARE