மாடல் அழகியை கற்பழித்த வழக்கு: இந்தி நடிகர் இந்தர் குமார் மீதான குற்றச்சாட்டு உறுதி மருத்துவ பரிசோதனையில் தகவல்

572

மாடல் அழகியை கற்பழித்த வழக்கில் நடிகர் இந்தர் குமார் மீதான குற்றச்சாட்டு உறுதியாகி உள்ளது. மாடல் அழகியிடம் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.

மாடல் அழகி புகார்

மும்பை வெர்சோவா போலீஸ் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 23 வயது மாடல் அழகி ஒருவர், இந்தி நடிகர் இந்தர்குமாருக்கு எதிராக பரபரப்பு புகார் மனு கொடுத்தார். புகாரில், நடிகர் இந்தர் குமார் தன்னை சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி, தன்னுடைய வீட்டில் தன்னை அடைத்து வைத்து மிரட்டி கற்பழித்தாக குறிப்பிட்டு இருந்தார்.

இதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து நடிகர் நடிகர் இந்தர்குமாரை கைது செய்தனர். இருப்பினும், தன் மீதான குற்றச்சாட்டை இந்தர்குமார் திட்டவட்டமாக மறுத்தார். ‘‘நானும், அந்த மாடல் அழகியும் ஒப்புதலின்பேரில் தான் செக்ஸ் வைத்தோம் என்றும், நான் அவரை துன்புறுத்தவில்லை’’ என்றும் அவர் போலீசில் கூறினார். இதன் காரணமாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில், மாடல் அழகியிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மருத்துவ அறிக்கை

இந்நிலையில், நேற்று மருத்துவ அறிக்கை வெளியானது. அதன்படி, அந்த மாடல் அழகி துன்புறுத்தப்பட்டு கற்பழிக்கப்பட்டது உறுதியாகி உள்ளது. இது குறித்து வெர்சோவா போலீஸ் இன்ஸ்பெக்டர் பர்மலே கூறியதாவது:–

மாடல் அழகியிடம் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையின் முடிவில், நடிகர் இந்தர்குமார் மீதான குற்றச்சாட்டு மட்டுமல்லாமல், கற்பழிப்பின்போது அவர் நடந்து கொண்ட மிருகத்தனமான விதமும் சேர்ந்து வெளியாகி உள்ளது. அவர் மாடல் அழகியை துன்புறுத்தி, தன் வீட்டில் சிறை வைத்து கற்பழித்து உள்ளார். இதை உறுதிபடுத்தும் விதமாக மாடல் அழகியின் தோள்பட்டை மற்றும் கழுத்தில் சிகெரட்டால் சூடு வைத்த தழும்புகள் உள்ளன.

குற்றச்சாட்டு உறுதி

மேலும், மாடல் அழகியின் கைகளை கடித்தும் கொடுமைப்படுத்தி இருக்கிறார். பின்னர், கூரிய ஆயுதங்கள் மற்றும் பீர் பாட்டில்கள் ஆகியவற்றால் தாக்கப்பட்ட தழும்பும் மாடல் அழகியின் உடலில் காணப்படுகிறது. எனவே, நடிகர் இந்தர் குமார் மீதான குற்றச்சாட்டு உறுதியாகி உள்ள நிலையில், வழக்கு விசாரணையின்போது இந்த மருத்துவ பரிசோதனை அறிக்கை மிகவும் உறுதிகரமாக இருக்கும்.

இவ்வாறு இன்ஸ்பெக்டர் பர்மலே தெரிவித்தார்.

SHARE