படித்தவர்கள், பண்பாடுள்ளவர்கள் வாழும் கலாசாரத்தின் சிகரம் எனக் கூறப்படும் யாழ். மண்ணில் மாணவிகளுக்கெதிராக அநீதிச் செயல் அரங்கேறிய போது அனைவரும் அமைதியாகவேயிருந்தார்கள்: யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் காட்டம்
அநீதிதிகள் நடந்து கொண்டிருக்கின்றது. அந்த அநீதியைத் தட்டிக் கேட்க எவரும் வரவில்லையா? என மாணவச் செல்வங்கள் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியை நோக்கி ஓடோடி வந்தார்கள். பின்னர் மல்லாகம் மாவட்ட நீதிபதியை நோக்கி ஓடிச் சென்றார்கள். இதனால், மாவட்ட நீதிபதி களத்தில் இறங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. பாருங்கள்…ஒரு அநீதியைத் தட்டிக் கேட்பதற்கு அந்தக் குழந்தைகள் ஓடோடிச் சென்ற இடங்களைப் பாருங்கள். வெட்கமாகவிருக்கிறது….படித்தவர்கள்,பாமரர்கள், பண்பாடுள்ளவர்கள் வாழும் கலாசாரத்தின் சிகரம் எனக் கூறப்படும் யாழ். மண்ணில் மாணவிகளுக்கெதிராக அநீதிச் செயல் அரங்கேறிய போது அனைவரும் அமைதியாகத் தானிருந்தார்கள். நீதிபதிகள் மட்டும் வீதியில் இறங்கினார்கள். மக்கள் அனைவரும் அமைதியாகத் தானிருந்தார்கள் என வேதனையுடன் தெரிவித்தார் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன்.
அகில இலங்கைக் கம்பன் கழகம் நடாத்தும் யாழ்ப்பாணக் கம்பன் விழா கடந்த வியாழக்கிழமை( 15-09-2016) பிற்பகல்-04.30 மணிக்கு யாழ். நல்லூர் ஸ்ரீ துர்க்கா தேவி மணிமண்டபத்தில் கொழும்புக் கம்பன் கழகத்தின் பெருந்தலைவர் முன்னாள் நீதியரசர் ஜெ. விஸ்வநாதன் தலைமையில் ஆரம்பமாகி இடம்பெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
மண்ணுக்காகவே போராடியது மகாபாரதம். பெண்ணுக்காகப் போராடியது இராமாயணம். பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் நீதி தவறினான். கண்ணகி மதுரை மாநகரத்தை எரித்தாள். பசுமாடு நீதி கேட்டு மனுத்தாக்கல் செய்த போது மனு நீதி கண்ட சோழன் மனு நீதி வழங்கினான். நீதி வரலாறுகள் இப்படியிருக்கும் போது நீதி தேடி மாணவச் செல்வங்கள் அண்மையில் நீதிமன்றத்தை நோக்கி ஓடிய காட்சிகள் யாழ்.மண்ணில் அரங்கேறியது.
ஐனாதிபதியிடம் காலில் விழுந்து மனுக் கொடுத்த காட்சிகளும் யாழ். மண்ணில் இடம்பெற்றது. பொறுப்பு வாய்ந்தவர்கள் பொறுப்புடன் செயலாற்றவேண்டும். பொறுப்பு வாய்ந்தவர்கள் பொறுப்புடன் செயலாற்ற வேண்டும். பொறுப்பு வாய்ந்தவர்கள் பொறுப்புடன் செயலாற்றத் தவறவேண்டாம். ஏனெனில், அந்த மாணவர்கள் ஒரு குழந்தைகள்…. அவர்கள் நீதிமன்றத்தில் நீதி கோருகின்ற சம்பவம் அனைவரையும் கலங்க வைத்த ஒரு சம்பவமாகத் தான் நான் காணுகின்றேன்.இனி வரும் காலங்களில் அவ்வாறான சம்பவங்கள் இந்த மண்ணிலே இடம்பெறக் கூடாது என்பது அதிபர்கள், ஆசிரியர்கள், நிர்வாகத்தினர், பெற்றோர்கள் அனைவரதும் கடமையாக இருக்க வேண்டும். அதனை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
தயவு செய்து சட்ட ஆட்சிக்குக் கட்டுப்பட்டு, சட்ட நியமங்களுக்குக் கட்டுப்பட்டு ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை நடாத்துவது உங்களுடைய உரிமை. ஆனால், வன்செயலைக் கையிலெடுப்பது உங்களுடைய உரிமையல்ல என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
பிரச்சினைகள் வருவது இயற்கை. அதில் தவறு இல்லை. ஆனால்,பிரச்சினையினைக் கையாளும் விதம் முக்கியமானது என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ளுங்கள் என நீதி தேவன் பாசறையிலிருந்து அறைகூவல் விடுக்கின்றேன் எனவும் தெரிவித்தார்.