மின் அணு வாக்களிப்பு இயந்திரத்தின் மூலம் வாக்கெடுப்பை நடத்துவதற்கு நடவடிக்கை- தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய

485

எதிர்கால தேர்தல்களின்போது மின் அணு வாக்களிப்பு  இயந்திரம் மூலம் வாக்களிப்பை மேற்கொள்வதற்கு  தங்களது அபிப்பிராயங்களை  முன்வைக்குமாறு  தேர்தல்கள்  ஆணையாளர்  அரசியல்  கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அரசியல் கட்சிகளின்  செயலாளர்களுடனான  சந்திப்பொன்றை  தேர்தல்கள்  ஆணையாளர்  மகிந்த தேசப்பிரிய  தேர்தல் செயலகத்தில்  நடத்தியபோதே இவ்வாறு கோரிக்கைவிடுத்துள்ளார்.

சுமார் 2 மணிநேரம் நடைபெற்ற  இச்சந்திப்பில்  வாக்காளர் பதிவு எதிர்வரும் மாதங்களில் நடைபெறவுள்ள  நிலையில்  அரசியல் கட்சிகள்  வாக்காளராகப்  பதியுமாறு மக்களை ஊக்கப்படுத்த  வேண்டுமெனவும் வாக்காளர் பதிவினை  மீள்பரிசீலனைக்கு  உட்படுத்தப்படும் சந்தர்ப்பத்தில்  அரசியல் கட்சிகள்,   முகவர்களை  நியமித்து மீள்திருத்தத்துக்கு  உதவவேண்டுமெனவும் தேர்தல் ஆணையாளர்   அரசியல் கட்சிகளிடம் கோரினார்.

அத்துடன்  எதிர்வரும் தேர்தல்களில்  மின் அணு வாக்களிப்பு  இயந்திரத்தின் மூலம் வாக்கெடுப்பை  நடத்துவதற்கு  நடவடிக்கை மேற்கொள்வதற்கு  சாதக,  பாதகங்களை  ஆராயுமுகமாக  அரசியல் கட்சிகள்  தங்கள்  கருத்துக்களை  முன்வைக்குமாறு  அரசியல்  கட்சிகளிடம்  தேர்தல்கள்  ஆணையாளர் கோரியதாக  இச்சந்திப்பில்  கலந்துகொண்ட  தமிழீழ விடுதலை  இயக்கத்தின்  பொதுச் செயலாளர்  ஹென்றி மகேந்திரன் தெரிவித்தார்.

இச்சந்திப்பின்போது  ஜாதிக ஹெல உறுமயவின்  செயலாளர்  சம்பிக்க  ரணவக்க  வடக்கிலிருந்து  வெளியேற்றப்பட்ட  சிங்களவர்கள்  நாட்டின் ஏனைய  இடங்களில் வாழ்கின்றனர்.அவர்களையும் வாக்காளராகப்  பதிய வேண்டுமெனவும் மலையகத்தில்  தமிழ்மொழி பேசுவோர் அதிகமாக வாழ்வதால்  தமிழ்மொழி மூலம் வாக்காளர் பதிவை  மேற்கொள்ளும் போது  கவனமாக  இருக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏனெனில்,   வாக்காளர்   பதிவின் போது  இந்தியர்களும் வாக்காளராகப்  பதிவுசெய்யமுடியுமென்பதால் அவதானம்  தேவையெனக் குறிப்பிட்ட அவர் இது போல் மாலைதீவு, பாகிஸ்தான் ,ஆப்கானிஸ்தான்  பிரஜைகள்  தொடர்பிலும் கவனம் தேவையெனவும் தெரிவித்ததாக ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் இச்சந்திப்பில்  பங்குகொண்ட தர்மலிங்கம் மனோகரன் குறிப்பிட்டார்.

இதன்போது வாக்காளர் பதிவு  மேற்கொள்ளும்போது  அசட்டை காணப்படுகின்றது.  அதுபோல் வாடகை வீட்டிலுள்ளவர்களை  வீட்டு உரிமையாளர்கள்  பதிவு செய்வதற்கு  இடமளிக்காத பிரச்சினையும் உள்ளதாக தாம் சுட்டிக்காட்டியதாக  மனோகரன் தெரிவித்தார்.

எனவே  வாக்காளர்  பதிவில் ஈடுபடுவோருக்கு  கொடுப்பனவினை  உயர்வாக  வழங்கி  உரியவகையில்  வாக்காளர் பதிவினை மேற்கொள்ளாதவர்களுக்கு  எதிராக சட்ட நடவடிக்கையெடுக்குமாறும்  யோசனையை முன்வைத்தேன். இது சிறந்த யோசனையென  தேர்தல்கள்  ஆணையாளர் குறிப்பிட்ட  அதேவேளை  சம்பிக்க  ரணவக்கவின்  கருத்துக்கு  தற்போது  அவ்வாறு  வெளியேறியவர்கள்   வெளியிடங்களில்  வாக்காளராக இருப்பதாக  சுட்டிக்காட்டியதுடன்  இது தொடர்பில்  ஆராயவேண்டியிருப்பதாகவும் பதிலளித்ததாக  தர்மலிங்கம் மனோகரன் தெரிவித்தார்.

SHARE