மீண்டும் வந்த கிரீஸ் மனிதன் வழக்கு!

40

 

2011 ஆம் ஆண்டு யாழ் குடா நாட்டில் ‘கிரீஸ் மனிதன்’ எனப்படும் அடையாளம் தெரியாத நபர்களின் மிரட்டல் செயல்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பாக நீதிமன்ற உத்தரவுகளின்படி ஆட்சேபனைகளை தாக்கல் செய்யவில்லை என உயர் நீதிமன்றம், சட்டமா அதிபருரை கடுமையாக சாடியுள்ளது.

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய செயற்பாடாமை தொடர்பில் சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மாலி கருணாநாயக்கவை கடுமையாக சாடிய உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ்.துரைராஜா, நீதிமன்ற நேரத்தை வீணடிக்காது மனுதார்களுக்கு ஆட்சேபனை நகலை ஒப்படைக்குமாறு அறிவித்தார்.

எஸ்.துரைராஜா, யசந்த கோதாகொட மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு அழைக்கப்பட்டிருந்தது.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், இந்த வழக்குகள் தொடர்பாக தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் கிடைக்கவில்லை என்று தெரிவித்தனர்.

இதன்போது பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மாலி கருணாநாயக்க, ஆட்சேபனைகள் உரிய முறையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வாதிட்டார்.

பின்னர் வழக்குப் பதிவை ஆய்வு செய்த மூவரடங்கிய நீதியரசர் குழாம், நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி ஆட்சேபனை எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை என்று நீதியரசர் எஸ்.துரைராஜா தெரிவித்தார்.

அப்போது, ​​பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சமர்ப்பணங்களை தெளிவுபடுத்த முயற்சித்த போதிலும், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்காமல், நூறு ரூபா செலவில் மனுதாரர்களிடம் ஆட்சேபனைகளை கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு நீதியரசர் எஸ்.துரைராஜா குறிப்பிட்டார்.

பின்னர் குறித்த மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 30ஆம் திகதி அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன், பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர், சட்டமா அதிபர் உள்ளிட்டோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

 

SHARE