முல்லைத்தீவு நகரில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மீது பொலிஸ் கான்ஸ்டபிள்

488

இலங்கையில் காணாமல்போனவர்களைக் கண்டுபிடித்துத் தரவேண்டும் எனக்கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முல்லைத்தீவு நகரில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மீது பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தாக்குதல் நடத்த முயன்றதாக குற்றம் சாட்டப்படுகின்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமசுரேஸ்ச்சந்திரனுடன், கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்டோரும், காணாமல்போனவர்களின் குடும்ப உறவினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

காவல்துறையின் அனுமதி பெற்று நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தைக் குழப்புவதற்காக, அந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு அருகில் அரச ஆதரவாளர்கள் பலர் கொண்டுவந்து இறக்கப்பட்டதையடுத்து இரு தரப்புக்களையும் சேர்ந்தவர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் ஒன்றையடுத்தே, இந்தத் தாக்குதல் முயற்சி சம்பவம் நடந்ததாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

‘ஏற்கனவே அனுமதி பெற்றிருந்த இடத்தில் நாங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, அதற்கு மிகவும் கிட்டிய இடத்தில் எதிர்த்தரப்பினரைச் சேர்ந்த ஆட்களை, இராணுவ புலனாய்வாளர்கள் கொண்டுவந்து இறக்குவதற்குப் பொலிசார் அனுமதி வழங்கியிருந்தமை முதலாவது தவறாகும்’ என்று இதுபற்றி கூறினார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

அவ்வாறு கொண்டுவந்து இறக்கப்பட்டவர்கள் தங்களின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி சத்தமிட்டதாகக் கூறிய பிரேமச்சந்திரன், தங்களை நோக்கிச் சத்தமிட்டவர்களை அப்பால் செல்லுமாறு கூறுவதற்கும், அவர்களை அப்புறப்படுத்துமாறு பொலிசாரிடம் தெரிவிப்பதற்குமாக தான் அவ்விடத்திற்குச் சென்றபோது, பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தன்னைத் தோளில் தொட்டு தள்ளிவிட முயன்றதாகவும் கூறினார்.

‘நான் அதைக் கண்டித்து, அவ்வாறு நடக்க வேண்டாம் என்று அவருக்குக் கடுமையாகக் கூறினேன். அப்போது அவர் தனது தொப்பியையும் கையில் இருந்து துப்பாக்கியையும் வேறு ஒருவரிடம் கொடுத்துவிட்டு என்னுடன் சண்டைக்கு வருவது போன்று அநாகரிகமாக நடந்து கொண்டார்’ என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமச்சந்திரன்.

‘எனினும் அங்கிருந்த ஏனைய பொலிசாரும் மற்றவர்களும் அவரைத் தடுத்து நிறுத்தினர். ஒரு பாராளுமன்ற உறுப்பினருடன் இவ்வாறு நடந்து கொண்ட ஒரு கான்ஸ்டபிளை பொலிஸ் அதிகாரிகள் கண்டித்துத் தண்டிப்பார்களா என்பது தெரியவில்லை. ஆனால் நான் இதுபற்றி பாராளுமன்றத்தில் சபாநாயகரின் கவனத்திறகுக் கொண்டுவரவுள்ளேன்’ என்றார் சுரேஸ் பிரேமச்சந்திரன்.

இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை பேச்சாளர் அஜித் ரோகண அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, அத்தகைய சம்பவம் ஒன்று இடம்பெற்றதாகக் காவல்துறையினரிடம் எவரும் முறையிடவில்லை. அவ்வாறு முறையிட்டிருந்தால் அதுகுறித்து தங்களால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் எனத் தெரிவித்தார்.

SHARE